ஆடலின் உயர் நிலை

0 254

பரதநாட்டியத்தில் பல கலைஞர்களின் ஆடலைப் பார்க்கிறோம். அவ்வேளைகளில், அக் கலை வெளிப்பாடு நம்மில் ஏற்படுத்தும் உணர்வு பல நிலைப்படும். இக் கலை வடிவத்தின் அதி உன்னதமாய், அதன் உயர்நிலையில் நம்மை ஆட் கொள்ளும் கலைஞர்கள் சிலர்.

பாலசரஸ்வதி, குமாரி கமலா என்ற, அந்த யுகத்துக்குப் பின்னரான பரத நாட்டிய உலகம் சற்று விசாலமானது. பத்மா சுப்ரமண்யம், சுதாராணி ரகுபதி, சித்திரா விஸ்வேஸ்வரன், லக்ஷ்மி விஸ்வநாதன், சாந்தா – தனஞ்சயன், அலர் மேல் வள்ளி, மாளவிகா சருக்கை என்ற இவர்கள் சிலர் அந்த உன்னதத் தின் உயர்நிலையில் அவையை ஆட்கொண்ட – ஆட்கொள்ளும் ஒரு தலைமுறையினர். இந்த ஆட்கொள்ளல், இவர்களுக்கு அடுத்ததான தலைமுறையில் இக்கலையின் பாரம்பரிய பேணலுடன், ஓர் அறிவார்ந்த தேடலுமாய் பரிணமித்துச் சிலரிடத்துச் சிறக்கிறது. இதன் திருப்புமையம் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் என்பதைனைச் சொல்லலாம்.
லண்டன் பாரதீய வித்ய பவனில் பார்த்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி, அந்த உயர்நிலையின் ஒரு தொடர்ச்சியை மகிழ்ச்சியோடு உணர்த்தியது.
முன்னரொருபோதும் அவரது ஆடலைப் பார்த்ததில்லை. `அநுபவா நுபவம்’ என்று அந்த ஆடலைச் சொல்லாம்.
டாக்டர் லக்ஷ்மி ராமஸ்வாமி அவர். சித்திரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யை யாக சிலசமயங்களில் அவரைச் சித்திரா விஸ்வேஸ்வரனின் நிகழ்ச்சிகளில் எப்போதாவது பார்த்திருக்கலாமோ ஆனால், டாக்டர் லக்ஷ்மி ராமஸ்வாமி என்ற ஒரு தனித்த கலைஞராக அவரைப் பார்த்திருக்கவில்லை.
ஆழ்ந்த ஒரு புரிதலிலும், தெளிவிலும் மலரும் வெளிப்பாடாய் அவரின் ஆடல் பரிணமித்தது.
கைகளில் அந்த முத்திரைகளும், வெகு பக்குவமான அந்த முகபாவமும், ஆழ்ந்த உள்ளுணர்வுடனான அந்த சஞ்சாரிபாவங்களும், அமைவான அசைவுகளும் அவரின் தனித்துவத்தை இனம்காட்டி ஈர்த்தன.
லால்குடி ஜெயராமனின், “இன்னம் என்மனம் அறியாதவர் போல…’’ சாரு கேசி வர்ணத்துக்குப் பின்னர் புரந்தர தாஸரின் அந்தக் கிருதி. எம். எல். வசந்தகுமாரி பிரபல்யப்படுத்தியதில் பரிச்சயமான “யமனென்னி காணேனெந்து…’’ (கன்னடம்). பொருள் புரியாமலேயே லயிப்பிலாழ்த்தும் சிவரஞ்சனி உருப்படி.
லக்ஷ்மி ராமஸ்வாமி அதில் இரட்டை அற்புதத்தைக் காண்பித்தார். தன்னுடைய ஆடலில் எல்லா அம்சங்களிலும் அதில் தன்னை அற்புதப்படுத்தினார். புரந்தரதாஸரின் அந்தக் கிருதியின் பொருளின் அற்புதத்தையும் உணர்த்தினார். நாம் வணங்கும் மற்றைய தெய்வங்களைப்போலவே யமனும் நமக்கருளும் தன்மையை புரந்தரதாஸசர் அதில் அழகுறச் சொல்கிறார்.
டாக்டர் ராஜ்குமார் பாரதியின் அருமையான இசை அமைப்பு. நிகழ்ச்சி முழுமையையும் ஒலிப்பதிவிலேயே லக்ஷ்மி ஆடினார். அது, பலதட வைகளில் அவரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் நிர்ப்பந்திப்பது தெரிந்தது.
இசையை ஆடலின் அசைவாக காண்பவர் சித்திரா விஸ்வேஸ்வரன். அவரின் சிஷ்யையான லக்ஷ்மி, பத்மா சுப்ரமண்யத்திடம் கரணங்களைக் கற்றிருக்கிறார். கலாநிதி நாராயணனிடம் அபிநயத்தைக் கற்றிருக்கிறார். டாக்டர் எஸ். ரகுராமனிடம் சங்க இலக்கியங்களைக் கற்றிருக்கிறார். நாட்டியம் பற்றிய புராதன நூலான சாத்தனாரின் `கூத் தநூல்’ தொடர்பிலான ஆய்வை தனது டாக்டர் பட்டத்துக்காக மேற்கொண்டிருக்கிறார். இந்த அனைத்தினதும் உள்ளார்ந்த வடிவமாக அவரின் ஆடல் தெரிகிறது.
– மாலி

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ