சரஸ்வதி பாக்கியராசா: ஈழத்து இசைக் குயில்

1 1026

ஈழத்தின் பெரு மதிப்புக்குரிய இசைக் கலைஞராக திகழ்ந்த திருமதி சரஸ்வதி பாக்கியராசா லண்டனில் காலமானார்.

இசையுலகின் மும்மூர்த்திகளாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி, டி. கே. பட்டம்மாள், எம். எல். வசந்தகுமாரி ஆகியோர் புகழ்பெறுகையில், யாழ்ப்பாணத்தில் அப்படி அழைக்கவல்ல ஒரு சிறப்பை ஒரு காலத்தில் பெற்றவர்கள் நாகேஸ்வரி பிரம்மானந்தா, சரஸ்வதி பாக்கியராசா, சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோர்.

கொக்குவில்லைச் சேர்ந்தவரான சரஸ்வதி பாக்கியராசா சிங்கப்பூரில் பிறந்து, அங்கேயே தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். சென்னை, மத்திய கர்நாடக இசைக் கல்லூரியின் `சங்கீதவித்வானா’க, யாழ்ப்பாணத்தில் கர்நாடக சங்கீதத்தை ஒரு `கௌரவமான அந்தஸ்துடன்’, மக்கள் மத்தியில் பரவலாக பரிச்சயமாக்கிய ஒரு சிறப்பு சரஸ்வதி பாக்கியராசாவுக்கு உண்டு.

முசிரி சுப்பிரமணிய ஐயர், முடிகொண்டான் வெங்கடராம ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி போன்ற இசை மேதைகளிடம் பெற்ற சிட்சை, அவருக்கு அந்த மனோ வலிமையை அளித்தது. திருவிழாக் காலங்களில் கோவில்களில் தவில், நாதஸ்வர கச்சேரிகளும், சதுர்க் கச்சேரிகளும் இடம்பெற்றவேளையில், வயலின், மிருதங்க பக்கவாத்தியங்களுடன் இவரது இசைக் கச்சேரியும் அங்கு இடம்பெற ஆரம்பித்தமை ஒரு திருப்பமான நிகழ்வு. சம்பிரதாய உருப்படிகளுடன், மெல்லிசையில் சில பக்திப்பாடல்களையும் சேர்த்துக்கொண்டபோது மக்கள் விரும்பி, காத்திருந்து ரசித்தார்கள். “பழநி என்னும் ஊரிலே, பழநி என்னும் பேரிலே, பவனி வந்தான் தேரிலே, பலனும் தந்தான் நேரிலே…’’ என்று அவர் பாடுவதைக் கேட்பதற்கென்றே பலர் ஆவலாக இருந்தார்கள். ஓர் இரவில், பல இடங்களில், பல கோவில்களில் பாடியிருக்கிறார்.

நல்லூர் தேர் உற்சவத்தில் தேர் இருப்புக்கு வந்ததும் என். கே. பத்மநாதனின் நாதஸ்வரமும், தீர்த்தோற்சவ தினத்தில், முருகன் தீர்த்தமாட வருவதற்கு முன்னதாக தீர்த்தக் கேணி மண்டபத்தில் சரஸ்வதி பாக்கியராசா பாடுவதும், ஒரு சம்பிரதாயமாக பல ஆண்டுகள் தொடர்ந்தது.

யாழ்ப்பாணத்தில், நடனத்துக்கும் பாடினார்; குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பிரசித்தத்தைப் பெற்று விளங்கிய சுப்பையா மாஸ்டரின் நிகழ்ச்சிகளில் பாடினார். யாழ்ப்பாணத்து இசை விழாக்களில் பலகாலமாகவே சிறப்பைப்பெற்றார்.

இசை கற்பித்தலிலும் சரஸ்வதி பாக்கியராசா தனித்த ஓர் இடத்தைப் பெறுகிறார். மருதனாமடம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்களையடுத்து, ஐயாக்கண்ணு தேசிகருக்குப் பின்னர் இவர் இசைத் துறைத் தலைவியாக இருந்தவேளையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துடன் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி இணைக்கப்பட்டது.

சிங்கப்பூர் இந்தியன் பைன் ஆட்ஸிலும் பல ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் லண்டன் வந்தார். அவரது இசை அநுபவமும் கற்பித்தல் அநுபவமும், லண்டனில் துளிர்க்க ஆரம்பித்த இசை வளர்ச்சிக்கு பெரும் போஷாக்குச் சேர்த்தது. `எண்ணற்ற’ என்றில்லாமல், எண்ணும் வகையிலான சிலரை, லண்டனில், இசைத் துறையில் சம்பிரதாய மரபோடு, செவ்வனே உருவாக்கியிருக்கிறார்.

புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான `பம்பாய் சகோதரிகள்’ சரோஜா, லலிதா, கர்நாடக இசைக் கல்லூரியில் இவரோடு உடன் கற்ற உற்ற சிநேகிதிகள்.

ஏழாலையைச் சேர்ந்தவரான தந்தையார் எம். வி. சரவணமுத்து, சிங்கப்பூரில் புகையிரத நிலைய அதிபராக பணியாற்றினார். கலை ஆர்வம் மிக்க இவர், தனது பிள்ளைகளையும் அத்துறையில் ஊக்கத்துடன் ஈடுபடுத்தினார். 7 வயதிலேயே, சுபாஸ் சந்திரபோசின் விடுதலை இயக்க கூட்டங்களில் சிறுமி சரஸ்வதி எழுச்சிப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். சிங்கப்பூரில், இந்தியாவிலிருந்து வந்திருந்த குமாரசுவாமி என்பவரிடம் இசையைப் பயில ஆரம்பித்து, பின்னர் ஓதுவார் இராமலிங்கம் என்பவரிடம் முறைப்படி இசைபயின்ற இவரது இரங்கேற்றம் 12ஆவது வயதில் சிங்கப்பூர் விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்றது. இக்காலத்தில் ஹிந்துஸ்தானி இசையையும் ஓரளவு கற்றார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் இவரது குடும்பமும் சஞ்சலங்களுக்குள்ளானது. சிங்கப்பூரில் வாழ்ந்த இலங்கையர்கள் சிலர் கப்பலில் இலங்கை திரும்பினார்கள். யுத்த காலத்தில் புறப்பட்ட முதலாவது கப்பல் பத்திரமாக இலங்கை வந்தடைந்ததையடுத்து, இரண்டாவது கப்பலில் இவரது குடும்பமும் இலங்கைக்கு புறப்பட்டது.

தாயார் நித்தியானந்தத்தின் ஊரான கொக்குவிலில் குடியேறினார்கள். எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் பெயரும் இசையும் ஏற்படுத்திய உந்துதலில், தன்னுடையதும் மனைவியுடையதும் பெயரைக்குறித்து, `எஸ். என். சரஸ்வதி’ என்று, தன்னுடைய மகளை யாழ்ப்பாணத்து இசை அரங்கில் புதிதாக அறிமுகப்படுத்தினார் தந்தை சரவணமுத்து. இவருடைய சகோதரி பரமேஸ்வரி, மேடைகளில் இவருடன் இணைந்து மிருதங்கம் வாசித்தார்.

பின்னர், புதல்விகள் இருவரினதும் இசை மேம்பாட்டுக்காக தஞ்சாவூரில் சிறிதுகாலம் வாழ்ந்து, சிலரிடம் சிறிதுகால குருகுலவாசத்துக்கும் தந்தை வாய்ப்பை அளித்தார்.
கொக்குவில் இந்துக்கல்லூரியில் அதிபர் நாகலிங்கம் எஸ். என். சரஸ்வதியை இசை ஆசிரியையாக்கிக்கொண்டார். இக் காலத்திலேயே, கர்நாடக இசைக் கல்லூரிசென்று, இலங்கையின் முதலாவது `சங்கீத வித்வானாக’ சரஸ்வதி பாக்கியராசா திரும்பினார்.

`எஸ். என். சரஸ்வதி’யின் காந்தர்வ இசை, இசை உலகில், பின்னர் அவரை `சரஸ்வதி பாக்கியராசா’ என்று மேன்மைபெறவைத்தது.

கணவர் பாக்கியராசா இவரின் இசை வாழ்வில் பேருந்துதலாக இருந்தார். யாழ்ப்பாணத்து தவமுனிவர் யோகர் சுவாமிகளோடும், பின்னாளில், சத்ய சாயி பாபாவிடத்தும் பத்திமை பூண்டிருந்தார்.

திருமதி சரஸ்வதி பாக்கியராசாவுக்கு வயது 90.

1 Comment

  1. Arunthevi Shanmugarajah July 21, 2016 at 3:40 am

    RIP

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ