
அந்த நாள் எழுதியது..
— April 15, 2018 0 55தட்டிக்கொண்டு போகையில் இது கண்ணில் பட்டது.
அண்மையில் தமிழ்நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும்; அரசியல்வாதிகள், அறிஞர்களிடையேயும் பரவலாக ‘அடிபட்டு’, ஓய்ந்துபோயுள்ள ஒரு சமாச்சாரத்தை நினைவுபடுத்தியது.
டாக்டர் பிரமீளா குருமூர்த்தியின் துணைவேந்தர் நியமனமும், அதற்கு புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி அனித்தா குப்புசாமியும் கொந்தளித்தெழுப்பிய எதிர்ப்பும் அது.
தான் ஒரு கிராமத்தான்; கிராமப்புற பாடல்கள் பாடுபவன் என்பதனால் தனக்கு அப் பதவி கிட்டவில்லை என்றார் குப்புசாமி.
ஜெயலலிதா உயிருடனிருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது என்றார் மனைவி அனித்தா.
தகுதி அடிப்படையிலே நிகழ்ந்த நியமனம் என்று, அமைச்சர் பாண்டிராஜன் உறுதியாக நின்றார்.
மக்கள் தீர்ப்புக்கு விடுகிறேன் என்று கூறி, புஷ்பவனம் குப்புசாமி அமைதிகொள்கிறார்.
யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தேடி, பிரதியெடுத்துக் கொணர்ந்த ‘ஈழநாடு’ பத்திரிகைப் பக்கங்கள் சிலவற்றைத் தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, பிரமீளாபற்றி அப்போது, 1980இல் எழுதியது கண்ணில் பட்டது.
கடந்த ஆண்டு நல்லூர் தீர்த்தோற்சவ தினம்; அன்று, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஓர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வாழ்விலே மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக அது இருக்கும்.
இளம் பாடகி ஒருவரின் அற்புதமான சங்கீதத்iதைக் கேட்டு, பிரமிப்பும் மகிழ்ச்சியும்கொண்ட நாள் அது.
அரங்கினுள் பிரவேசித்தபோது அவர் ஆலாபனைசெய்துகொண்டிருந்த அந்த கல்யாணி ராகமும் ‘உன் தரிசனம் கிடைக்குமோ நடராஜா தயாநிதே’ என்று அடுத்துவந்த பல்லவியும், மீரா பஜன்களும், கடைசியாக, “சரணகம லாலயத்தை…’’ திருப்புகழும்… அடடா, எப்படிச் சொல்வது அதை?
‘அவருடைய காலத்திலே இன்று எம். எஸ்., டி. கே. பி., எம். எல். வி. போன்று, அப்படி ஒரு வரிசையிலே இந்தப் பிரமீளாவும் அமர்வார்’ என்று சொன்னபோது, அதை அப்போது சிலர் எப்படி நினைத்தார்களோ…?
ஆனால், கடந்த மாதத்து கடைசி ‘கல்கி’ இதழைப் பார்த்தபோது, இந்த நினைவுகளையெல்லாம் அசைமீட்டவைத்து, அதிலே ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இந்த பிரமீளாவை ‘தேச உடைமை ஆக்குங்கள்’ என்று, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள்!
தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற பாரதி விழாவில் இவருடைய பாடலைக் கேட்டபின்னர்தான் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.
டி. கே. சண்முகத்தின் புதல்வரான டி. கே. எஸ். கலைவாணன், புதல்வி திருமதி மனோன்மணி சங்கர், பாரதியாரின் கொள்ளுப்பேரரான ராஜ்குமார் ஆகியோருடன் பிரமீளாவும் சேர்ந்து ஓர் இசை நிகழ்ச்சியை இந்த விழாவிலே அளித்திருக்கிறார்கள். பாரதியார் பாடல்களைக்கொண்டு தொகுக்கப்பட்டிருக்கிறது இந் நிகழ்ச்சி.
இந் நால்வரையும், பாரதி நூற்றாண்டினையொட்டி மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு தமிழக அரசு சுவீகரித்துக்கொண்டுவிடவேண்டும். இவர்களை ஊர்ஊராக அனுப்பவேண்டும். அந்தந்த ஊர்களுக்கு அரசு சுற்றறிக்கையும் அனுப்பி, பள்ளிகளில், கல்லூரிகளில், பொதுமக்கள் அரங்குகளிலெல்லாம் இவர்களது பாரதி பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும்.
இதைத் தமிழக அரசு நிறைவேற்றுவது பாரதிக்கு அல்ல, பாரத்தத்துக்கு செய்யும் சிறந்த சேவை என்று ‘கல்கி’யில் ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.
செல்வி பிரமீளா ஓர் இலங்கையர். இலங்கை வானொலியில் முன்னர் தமிழ்ச் சேவை, கல்விச் சேவை ஆகியவற்றில் பணிப்பாளராகவிருந்த திருமதி மோனியின் புதல்வி. இப்போது இந்தியாவிலேயே பெற்றோருடன் தங்கியிருக்கிறார்.
இலங்கையிலே கே. கே. அன்ரனி, விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை முதலானோரிடம் பயின்ற பிரமீளா, பின்னர் முசிரி சுப்பிரமணிய ஐயர், முடிகொண்டான் வேங்கடராமையர் முதலியோரிடமெல்லாம் பயின்றவர்.
குயின் மேரி கல்லூரியில் இந்திய சங்கீதத்திலான எம். ஏ. பட்டத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய தத்துவத் துறையிலான எம். ஏ. பட்டத்தையும் பெற்றவர்.
இப்போது, இசைத் துறையிலான ‘கலாநிதி’ பட்டத்துக்காக காத்திருக்கிறார். அதற்காக இவர் சமர்ப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரை கதாகாலாட்nக்ஷபம் பற்றியது.
திருவையாறு தியாகராஜ உற்சவம், தமிழிசைச் சங்கம், மியூசிக் அக்கடமி, இந்தியன் பைன் ஆட்ஸ் ஆகியவற்றின் இசை விழக்களிலும் பலதடவைகள் பாடியிருக்கிறார்.
‘புற தாக்கங்களின் பாதிப்பு’ இன்றி, திறமைக்கு மதிப்பும் ஊக்கமும் அளிக்கப்பட்டால், பிரபல்யமும், சிறப்பும், தனித்துவமும் வாய்ந்தோர் வரிசையில் இன்று நம்மை மகிழ்விக்கும் இந்த பிரமீளா, அந்த வரிசையில் ஓர் இடத்தையும் அவர் தனக்கென்று பெற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.
அதற்கான ஒரு ‘பச்சை விளக்கு’; ‘கட்டியம்’ என்றே ‘கல்கி’யின் செய்தியைக் கொள்வோமா?
‘தமிழகத்தின் பெருமை இன்று உலகமெல்லாம் பரவியிருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் எம். எஸ். சுப்புலட்சுமியினுடைய இசை என்பார்கள்.
அந்தத ‘நாதத்தின் உறைவிடத்தை’ சர்வதேச அரங்கிலே – சர்வதேச தூதராக உணர வைத்ததில் ‘கல்கி’யின் பங்கை யார் மறந்துவிடமுடியும்?
– மாலி
‘ஈழநாடு’ – வாரமலர்
09.11.1980.
Leave a reply