தியாகராஜ உற்சவம்; கட்சிகளின் நதிமூலம்?

0 73

திருவையாறு தியாகராஜ ஆராதனைதான் சுதந்திரத்துக்கு முன்னரேயே இந்தியாவில் கட்சிகள் உருவாகவும் கால்கோளிட்டதோ!

அப்படியானால், காவேரி நதிதான் கட்சிகளின் ‘நதிமூலம்’?
உலகின் அதி உன்னதமான பாரம்பரிய இசைவடிவமொன்றாக திகழும் கர்நாடக இசையின் உலகளாவிய முகம் ஒன்றாகவும், அந்த இசை வடிவத்தின் தாத்பரியத்தையும் பெறுமானத்தையும் எளிதே உணர்த்திவிடும் ஒன்றாகவும் தியாகராஜ உற்சவம் விளங்குகிறது என்பதைச் சொல்லலாம்.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஷியாமா சாஸ்திரி ஆகியோருள் ‘நாதபிரம்மம்’ என்று கொண்டாடப்படும் தியாகராஜ சுவாமிகளின் நினைவாக இந்த தியாகராஜ உற்சவம் அமைகிறது. திருவையாற்றில், காவேரிக் கரையில் அமைந்த அவரின் சமாதி அருகே, அவர் சமாதியடைந்த மார்கழி மாத பூர்வ பக்க பஞ்சமி தினத்தில் இப்போது 110 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இவ்வுற்சவம் நடைபெற்றுவருகிறது. இசைக்கலைஞர்கள், அந்த நாதபிரம்மத்துக்கு தங்கள் மனதார்ந்த அஞ்சலியாக நினைந்து இதில் கலந்துகொள்கிறார்கள். ஐந்து தினங்கள் நிகழும் இந் நிகழ்வில், ஐந்தாம் நாளான பஞ்சமி தினத்தில், இவர்கள் எல்லோரும் இணைந்து, தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகளை இசைப்பது, இந்த ஐந்து நாள் நிகழ்வின் முத்தாய்ப்பாக அமையும்.
1847இல் தியாகராஜ சுவாமிகள் சமாதியடைந்தபோது, காவேரிக் கரையில் அமைக்கப்பட்டு, பின்னர் சிதைவுற்றுப்போன அவரின் சமாதியை 1903இல் அவருடைய வயதான சிஷ்யர்களான உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் என்போர் அங்குசென்று கண்டுபிடித்து, அச் சமாதியைப் புதுப்பித்து, அடுத்த ஆண்டுமுதல் அவர் சமாதியடைந்த தினத்தில், அங்கு இந்த ஆராதனையை நிகழ்த்த தீர்மானித்து, தொடங்கினார்கள். 1905ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில், பெருவாரியான கலைஞர்கள் கலந்துகொண்டும், ஏழைகளுக்கு உணவளித்தும் இந்த ஆராதனை பெரும் சிறப்புற்றது. தில்லைஸ்தானம் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட நரசிம்ம பாகவதரும் பஞ்சு பாகவதரும் இதன் பின்னணியில், இந்த நிகழ்வின் ஏற்பாட்டிலும், நிதித் தேவையிலும் பெரும் துணைநின்றார்கள்.
‘யார் நீ; நீயா, நானா?’
பிரச்னை அடுத்த ஆண்டிலேயே ஆரம்பித்தது. சகோதரர்கள் பிரிந்தார்கள்.
1906இல், ஒரேவேளையில் இரண்டு ஆராதனைகள்; கலைஞர்கள் கட்சி சேர்ந்தார்கள். தில்லைஸ்தானம் சகோதரர்களில் மூத்தவரான நரசிம்ம பாகவதரின் கட்சி, ‘பெரிய கட்சி’; இளையவரான பஞ்சு பாகவதரின் கட்சி ‘சின்னக் கட்சி’!
சகோதரர்கள் இறந்துவிட்ட பின்னரும் கட்சிகள் பிழைத்தன. பெரிய கட்சிக்கு வயலின் வித்வான் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையும், சின்ன கட்சிக்கு கதாகாலாட்சேப விற்பன்னரான சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும் தலைமையேற்றார்கள்.
காலப்போக்கில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் அல்லாது, சின்னக் கட்சி பஞ்சமி தினமும் அதற்கு முந்திய நான்கு தினமுமாக ஐந்து தினங்களும், பெரிய கட்சி பஞ்சமி தினமும் அதற்குப் பின்னரான நான்கு தினங்களாக ஐந்து தினங்களும் கொண்டாடுவதாக உடன்பாடானது.
ஆக, மோதல் லாபமாயிற்று. ஒன்பது தினங்கள்கொண்டாட்டம். இசை இன்பம்; உணவின்பம்.
ஆனால், கட்சிகள் இரண்டுபட்டாலும் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டன. பெண்கள் எவரும் இந்த ஆராதனைகளில் பங்குபற்ற இயலாது. அதாவது, பங்குபற்றி அங்கு பாட இயலாது. இது மாத்திரமல்ல, நாதஸ்வரமும் இடம்பெறக்கூடாது.
இப்போது தோன்றியது மூன்றாவது கட்சி.
சென்னையில் அப்போது பிரபல்யம்பெற்ற இசை, நடன கலைஞரான பெங்களூர் நாகரத்தினம்மா, தியாகராஜர் கீர்த்தனைகளை வாழ்நாள் முழுவதும் தன் மூச்சாகக்கொண்டவர். மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான கலைஞராக திகழ்ந்த இவரே, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னையில் வரிப்பணம் செலுத்திய முதலாவது தேவதாசி. இவர் 1925இல், தியாகராஜரின் சமாதியருகே அவருக்கு ஒரு சந்நிதானத்தை நிர்மாணித்தார்.
சந்நிதானத்தின் நிர்மாணத்துக்கு எதிர்ப்பு எதனையும் தெரிவிக்காவிடினும், அதனருகே நாகரத்தினம்மா இசை நிகழ்ச்சி எதனையும் நிகழ்த்த இரு கட்சிகளுமே அநுமதிக்கவில்லை.
பல பெண் கலைஞர்களையும் இணைத்து, மூன்றாவது அணியைத் தொடங்கினார் நாகரத்தினம்மா. சந்நிதானத்தின் பின்பகுதியில் நடைபெற்ற அவரது கட்சியின் ஆராதனை பிரபல்யம்பெறத் தொடங்கி ஆதரவு பெருக, பெரிய கட்சி, சின்னக் கட்சி சரிவைக் காணத்தொடங்கின. பஞ்சமித் திதியன்று மூன்று கட்சிகளுக்கும் சமமான ஆராதனை நேரத்தை ஒதுக்கி, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1940வரை இந்த நிலை தொடர்ந்தபோது, 1941இல் இவர்கள் எல்லோரும் இணைந்து, இப்போது திருவையாற்றில் நடக்கின்ற விதத்திலான தியாகராஜ உற்சவம் முதன்முதலாக நடைபெற்றது. எஸ். வை. கிருஷ்ணஸ்வாமி என்ற சிவில்சேவை அதிகாரி இந்த சமரசத்தை ஏற்படுத்தினார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் தேர்ந்தெடுத்த தியாகராஜரின் ‘பஞ்சரத்தின கீர்த்தனை’யை ஆராதனையின் இறுதியில் கலைஞர்கள் எல்லோருமே ஒன்றாக இணைந்து இசைக்கும் மரபு அப்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தனது சொத்து முழுமையையும் இப்பணிக்கென்றே அர்ப்பணித்து, திருவையாற்றிலேயே வாழ்ந்த நாகரத்தினம்மாள் 1952இல் காலமானபோது, தியாகராஜ சுவாமிகளின் சமாதிக்கு அணித்தாகவே அவர் அடக்கம்செய்யப்பட்டு, தியாகராஜர் சந்நிதியை நோக்கியவிதத்தில் அவருக்கு சிலையும் அமைக்கப்பட்டது.
ஆக, திருவையாற்றில் இந்த ஆண்டு ஆராதனை ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதிவரை நடைபெற்றது. இப்போதெல்லாம் இந்தியா தவிர, ஏனைய பல உலக நாடுகளிலும் தியாகராஜ உற்சவம் வெவ்வேறு மாதங்களில் நடைபெறுகிறது. ஏப்ரலில், அமெரிக்காவின் கிளிவ்லாந்தில் நடைபெறும் தியாகராஜ உற்சவம் இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் உற்சவங்களில் பெரிய அளவிலானது.
லண்டனிலும் பல ஆண்டுகளாக தியாகராஜ உற்சவம் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. குறொய்டன் பகுதியிலும் ஹரோவிலும் நடைபெறுபவை, அண்மைக் காலங்களில் இவற்றுள் பெரிய அளவிலானவை. குறொய்டனில் வயலின் வித்வான் துரை. பாலசுப்பிரமணியமும், ஹரோவில் வயலின் வித்வான் நாகராஜுவும் முன்னின்று நடாத்துகிறார்கள். ஹரோ சமீபமாகவிருப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்குதான் செல்லக்கூடியதாகவிருந்து.
கடந்த ஆண்டு செல்கையில், மாணவியர் சிலர் ஹரகரப்பிரியாவில் “சக்கனி ராஜ…’’ பாடிக்கொண்டிருந்தார்கள்; பெரு வியப்பாக இருந்தது.
மணி கிருஷ்ணசாமி பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவையாற்றில் பாடும் இந்த “சக்கனி ராஜ…’’ ‘யூரியூபில்’ மிக அற்புதமாகவிருக்கும். அதுவே அப்போது நினைவில் வந்தது.
லண்டனில், தேர்த் திருவிழாபோல நடக்கும் பல்வேறு நிறுவனங்களினதும் இசை, நடன பரீட்சைகள் எப்படியோ ஆனால், இந்த தியாகராஜ உற்சவத்தின் தாத்பரியத்தை உணர்த்தி, இசை ஆசிரியர்கள் தங்கள் மாணவ, மாணவியரை அந்த உணர்வோடு பங்குபற்றவைத்து, தாமும் பங்குகொள்கையில் அந்த இசைப் பயன் நிச்சயம் மேலானது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ