பவள பத்மம்

0 50

“பாரடியோ வானத்தின் புதுமை எல்லாம்

…உவகையுற நவநவமாய்த் தோற்றும் காட்சி…’’

“கண்ணில் தெரியுதொரு தோற்றம்…’’
– பத்மா சுப்ரமண்யம் 75 வயதை எய்துகிறார் என்றதை நினைக்கவும், மனதில் பாரதியின் இப் பாடல் வரிகள் நினைவில் வந்தன.
‘ ….. இக் கலைவடிவத்தின் அதி உன்னதமாய், அதன் உயர் நிலையில் நம்மை ஆட்கொள்ளும் கலைஞர்கள் சிலர்.
‘பாலசரஸ்வதி, குமாரி கமலா என்ற அந்த யுகத்துக்குப் பின்னரான பரதநாட்டிய உலகம் சற்று விசாலமானது. பத்மா சுப்ரமண்யம், சுதாராணி ரகுபதி, சித்திரா விஸ்வேஸ்வரன், லக்ஷ்மி விஸ்வநாதன், சாந்தா-தனஞ்சயன், அலர்மேல் வள்ளி, மாளவிகா சருக்கை என்ற இவர்கள் சிலர் அந்த உன்னதத்தின் உயர்நிலையில் அவையை ஆட்கொண்ட – ஆட்கொள்ளும் ஒரு தலைமுறையினர். இந்த ஆட்கொள்ளல், இவர்களுக்கு அடுத்ததான தலைமுறையில் இக் கலையின் பாரம்பரிய பேணலுடன், ஓர் அறிவார்ந்த தேடலுமாய் பரிணமித்துச் சிலரிடத்துச் சிறக்கிறது. இதன் திருப்பு மையம் டாக்டர் பத்மா சுப்ரமண்யம்.’
– ‘நாழிகை’ ஒக்ரோபர் 2015 இதழில் எழுதியிருந்தேன்.
2016 நாட்டிய மாநாட்டில், சென்னை கிருஷ்ணகான சபாவில் பத்மா பேசும்போது, “அடுத்த தலைமுறைக்காக நான் ஏதோ ஆற்றியிருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு உண்டு. இதை அந்த தலைமுறை ஏற்றுக்கொண்டாலும்சரி, ஏற்காவிட்டாலும்சரி நான் கவலைகொள்ளவில்லை; ஆனால், ஏற்றுக்கொண்டால் மகிழ்வேன், அவ்வளவுதான்’’ என்றார்.
திருமுறைகளைத் தொகுத்தருளிய நம்பியாண்டார் நம்பியின் பணிபோன்றது என்றால் அது விதப்பாகுமோ…?
இல்லாததெதையும் அவர் கண்டுபிடிக்கவில்லை, சொல்லவில்லை; தூசுபட்டுக் கிடந்தவற்றை எல்லோர் கண்முன்னும் ஒளிரவைத்திருக்கிறார்.
அறுபதுகளின் நடுப்பகுதியில் மிகுந்த புகழுடனேயே அவர் நாட்டிய உலகில் பிரவேசித்தார். அந்த புகழுக்கு இணையான சர்ச்சைகளும் கூடவே எழுந்தன.
பரதநாட்டியமும், பத்மாவின் ‘பரதரின் நாட்டியமு’ம் மோதத்தொடங்கின.
நாட்டியத்தில் கொள்கைக்கும் செய்முறைக்கும் வித்தியாசம் அதிகம்; அதில் அதிக இணைப்பைக் காண்பது பத்மாவின் இலக்காகவிருந்து. இலக்கணத்துக்குள் ஒரு கவிஞனின் சுதந்திரத்தை அவர் அவாவினார்.
‘கலைமகள்’ 1972 ஏப்ரல் இதழ், ஒரு ‘நாட்டிய மலரா’க வெளிவந்தது. அதில், ‘பரதத்தில் பத்மாவின் ஆராய்ச்சி’ என்றொரு கட்டுரையும் இருந்தது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் வாசிப்போர் கூடத்தில் இரு பிரதிகள் இருந்தன. ஒரு பிரதியை வீட்டுக்கு கொண்டுசென்று படித்தபின்னர் தரலாமா என்று நூலகரைக் கேட்டேன்; முடியாது என்றார், அவர்.
மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவிடம் சென்று கேட்டேன். அவர், ஒரு பிரதியை எனக்கே கொடுத்துவிட நூலகரிடம் பணித்தார். அந்தப் பிரதி இப்போதும் என்னிடம் இருக்கிறது.
அந்தக் காலத்தில் பத்மா சுப்ரமண்யம் பற்றிய ஒரு புரிதலை அக் கட்டுரை தந்தது. 1981 ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின்போது மதுரை சோழா ஹோட்டலில் அவரைப் பார்த்தேன். அன்று பிற்பகல்தான், காமராஜர் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சிக் கருத்தரங்கில் அவருக்கும் சுதாராணி ரகுபதிக்குமிடையே அந்த பெரும் விவாதம் இடம்பெற்றது. இது, அந்த மாநாட்டில் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. கைலாசபதி அக் கருத்தரங்குக்கு தலைமைதாங்கினார். பத்மாவின் கட்டுரை ஏற்கப்படாது, ஓர் ஆராய்ச்சிக் கருத்தரங்கில்கூட அவர் வஞ்சிக்கப்பட்டார் என்பதே உண்மை.
பத்மா தன்னுடைய ஆத்ம நிறைவை வெளிப்படுத்திய 2016 நாட்டிய மாநாடு, அத் தொடரின் 36ஆவது மாநாடு. 1981இல் அதன் முதலாவது மாநாட்டின் அமைப்பாளராகவிருந்தவர் பத்மா சுப்ரமண்யம். அவரது புகழும் சர்ச்சைகளும் உச்சநிலையில் இருந்த காலம் அது.
2016 மாநாட்டின் அமைப்பாளரான டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம், அப்போது ஸ்ரீநிதி ரங்கராஜன். குமாரி கமலாவின் சிஷ்யையான அவர் ஒரு குட்டிக் கமலா. பத்மாவினுடைய அந்த முதல் மாநாட்டின் முதல் நாள் அவருடைய நடன நிகழ்ச்சிதான் நடைபெற்றது.
எனக்கும் ஓர் அழைப்பு வந்திருந்தது. ‘ஈழநாடு’ அதிபர் பெரியவர் கே. சி. தங்கராஜா போய்வரும்படி அனுப்பிவைத்தார்.
இந்தியாவின் நடன வகைகள் அனைத்தினதும் மிகப் பிரபலமான கலைஞர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். இவர்களோடு, வழுவூர் இராமையாபிள்ளை, முத்துசாமிபிள்ளை, இராஜரத்தினம்பிள்ளை… இப்படி பலர்.
முதல் நாள் நிகழ்ச்சிக்கு ருக்மிணி அருண்டேல் தலைமைதாங்கினார்; இறுதிநாள் நிகழ்ச்சியில் பாலசரஸ்வதி கலந்துகொண்டார்.
பத்மா சுப்ரமண்யத்தை ‘பத்மா’ என்று விளித்த ருக்மிணி அருண்டேல், உடனே பின்னர், “இல்லையில்லை; டாக்டர் பத்மா’’ என்றார்.
இதே நாள்களில், இந்தியன் பைன் ஆட்ஸ் சொஸைற்றியில் அதன் இசைவிழாவைத் தொடக்கிவைத்த பாலசரஸ்வதியின் தலைமையுரை, மறைமுகமாக பத்மாவை நோக்கியதாகவே இருந்தது.
இந்த முதலாவது நாட்டிய மாநாடுபற்றி, ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பிட்டு, 16 தொடராக ‘ஈழநாடு’ வாரமலரில் எழுதினேன். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, சுப்பையா மாஸ்ரருடைய புதல்வி சாந்தினி சிவநேசன் அக் கட்டுரைத் தொடரைத் தான் வைத்திருப்பதாக கூறியதில், அவற்றைப் பிரதியெடுத்துக்கொண்டேன். புதையல் ஒன்று கிடைத்த உணர்வு. யாழ். பல்கலைக்கழகம், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் சிரேஷ்ட விரிவுரையாளராகவிருக்கிறார் சாந்தினி.
ஆக, பரதநாட்டியத்தின் இந்த மட்டங்களிலெல்லாம் இப்படியான நிலைகளெல்லாவற்றையும் வென்று, ஒரு பெரும் கலைப் பொக்கிஷம் பிரகாசமுற வைத்திருக்கிறார் பத்மா. அவர் வெளிப்படுத்தும் திருப்தியில் நாட்டிய உலகில் ஒரு புதுப் பரிமாணம் மலர்ந்தேயிருக்கிறது.
அண்ணன் பாலகிருஷ்ணன், மன்னி ஷியாமளா, பத்மா என்ற பல்கலைக்கழகத்தோடு இணைந்தவர்கள். மருகன் கண்ணனும், கண்ணனின் மனைவி காயத்திரியும் அந்த இடங்களில் ஈடுநிற்கிறார்கள்.
பத்மாவின் ‘பரதநிருத்தியம்’, இன்னொருவர் ஆடுகையில் அந்த அழகின் ஆளுமையைத் தருமா? என்பது பொதுவாக எழுப்பப்படும் கேள்வி. அந்தக் கேள்விக்கு பேர்த்தி மகதி கண்ணன் பதில்சொல்கிறார்.
(படம்: ‘கலைமாமணி’ யோகா)

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ