திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017

0 61

இந்திய திரைப்படங்களுக்கான 65ஆவது தேசிய விருதுகள் ஏப்ரல் 13இல் அறிவிக்கப்பட்டன, இந்த ஆண்டின் இந்த விருதுப் பட்டியல் வழக்கம்போலவே சில ஆச்சரியங்களையும் ஏமாற்றங்களையும் உள்ளடக்கியிருந்தது.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ’டு லெட்’ படத்துக்கு பிராந்திய மொழிப் பிரிவில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது கிடைத்திருப்பது, தமிழகத் திரை ஆர்வலர்களுக்கும் மாற்று சினிமா செயற்பாட்டாளர்களுக்கும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. பாலா போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள செழியன் இயக்கிய முதல் படம் ’டு லெட்’. தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெருக்கத்துக்குப்பின்னர் சென்னைபோன்ற இந்திய பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு நடுத்தரவர்க்க இளம் தம்பதியை முன்வைத்துப் பேசியது இந்தப் படம்.
பல்வேறு சர்வதேச, தேசிய திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த இந்தப் படத்துக்கு தேசிய விருது என்ற முக்கியமான அங்கீகாரம் கிடைத்திருகிறது. இந்தப் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

ரகுமானின் மகுடத்தில் மேலும் இரு வைர கற்கள்
‘ஒஸ்கார்’ விருதுவென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்துக்கு சிறந்த பாடல்கள், இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இதே படத்தின் ‘வான் வருவான்’ பாடலுக்காக சாதா திரிபாதிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இவை தவிர, தேசிய அளவிலான முதன்மைப் பிரிவுகளில் தமிழ்ப் படங்களுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை.

இரண்டும் ஒருவருக்கே
சிறந்த பின்னணி இசைக்காக வழங்கப்படும் தேசிய விருதும் ‘மாம்’ என்ற இந்தி படத்துக்கு இசையமைத்ததற்காக ரகுமானுக்கு வழங்கப்பட்டது. பின்னணி இசைக்கென்று தனியாக விருது வழங்கப்படும் நடைமுறை 2010இல் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்குக் கிடைத்தது. ஆனால், அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். திரை இசைக்கான விருது இப்படி இரண்டாக பிரித்து வழங்கப்படுவதை அவர் ஏற்கவில்லை.
கடந்த ஆண்டு சிறந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கான விருதுகள் ‘அல்லமா’ என்ற கன்னட படத்துக்கு இசையமைத்த பாபு பத்மநாபா என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இரண்டு விருதுகளும் ரகுமானுக்கே கிடைத்தாலும், அவை வெவ்வேறு படங்களுக்கு கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே நான்கு தேசிய விருதுகளைப் பெற்றிருக்கும் ரகுமான், இந்த ஆண்டு மேலும் இரு விருதுகளைப் பெற்றுவிட்டார்.

இன்னுமொரு தாமத அங்கீகாரம்
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவிக்கு ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரியில் அவர் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருந்தவரை அவருக்கு ஒரு தேசிய விருதுகூட வழங்கப்படவில்லை. இந்திய வரலாற்றில் பெரும் சாதனையாளர்கள் பலர் சாகும்வரை அங்கீகரிக்கப்படாமல்போவது புதிதல்ல. இந்தப் பட்டியலில் ஸ்ரீதேவியும் சேர்ந்திருக்கிறார். அவர் இறந்தபின், சினிமாவுக்கு வழங்கப்படும் முதன்மையான விருதை அளித்து, தன் பாவக்கணக்கைத் தீர்க்க முயல்கிறது இந்திய அரசு.
ஆனால், அனைத்து சாதனையாளர்களுக்கும் இந்த கதி நேர்வதில்லை. மூத்த பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ், ‘விஸ்வாசபூர்வம் மன்சூர்’ என்ற படத்தின் ’போயி மறஞ்சகாலம்…’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதைப் பெற்றுள்ளார். இது, அவர் வென்றுள்ள எட்டாவது தேசிய விருது.
திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகிப் பால்கே விருது கடந்த ஆண்டு மறைந்த நடிகர் வினோத் கண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் மட்டுமே பொலிவூட் படங்களுக்கான தேசிய விருதுகள்.
பி
ராந்திய சினிமாவின் ஆதிக்கம்
தேசிய விருதுகளின் முதன்மையான நான்கு விருதுகளில் மூன்றைப் பிராந்திய மொழிப் படங்களே வென்றுள்ளன. ‘விலேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாமிய மொழித் திரைப்படம் தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த பனிதா தாஸ் என்ற சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கிடைத்துள்ளது.
’பயானகம்’ என்ற மலையாளப் படத்துக்காக, சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுள்ளார் ஜெயராஜ். சிறந்த நடிகர் விருதை ’நகர்கீர்தன்’ என்ற வங்காள மொழிப் படத்துக்காக ரித்தி சென் என்பவர் பெற்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘தொண்டிமுதலும் த்ருக்சாக்ஷயும்’ மலையாளப் படத்துக்காக நடிகர் பஹத் பாசில் பெற்றுள்ளார்.

‘பாகுபலி 2’ குளறுபடி
இந்திய சினிமா வரலாற்றில் ஆயிரம் கோடி வசூல் சாதனையைத் தொட்ட முதல் படம் என்ற புகழைப் பெற்ற ’பாகுபலி 2’ என்ற வரலாற்று சாகசப் புனைவுப் படம், சிறந்த பொழுதுபோக்குப் படம். சிறந்த ‘ஸ்பெஷல் எபெக்ட்ஸ்’ மற்றும் சிறந்த சண்டைக் காட்சி, வடிவமைப்பு ஆகிய மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. ஆனால், சிறந்த சண்டைக் காட்சி வடிவமைப்புக்கான விருதுக்குத் தவறான பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு சண்டை வடிவமைத்தவர் பீட்டர் ஹெய்ன். இவர்தான் ‘புலிமுருகன்’ மலையாளப் படத்துக்காகக் கடந்த ஆண்டு இதே விருதைப் பெற்றிருந்தார். ஆனால், இந்த ஆண்டு இந்த விருதைப் பெறுபவராக வேறொருவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு நடுவர் குழுக்கள் பங்கேற்கும் தேசிய விருதுகளுக்கான தேர்விலும் இப்படிப்பட்ட வெளிப்படையான குளறுபடிகள் நடக்கக்கூடும் என்று நிரூபணமாகியிருக்கிறது.

– வாகீசன்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ