ஐரோப்பிய ஒன்றிய விலகலும் சுயநிர்ணய உரிமையும்

0 38

‘ஐக்கிய ராஜ்யம்’ என அழைக்கப்படும் பிரித்தானியா, நான்கு முக்கிய பாகங்களை உள்ளடக்கிய பிரதேசம். அவை; இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பன. நெகிழ்வுள்ள ஒற்றையாட்சியைக் கொண்ட பிரித்தானியாவில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டுமென்பதை ஆதரித்தது. 52 சதவீத மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாகவும், 48 சதவீத மக்கள் எதிராகவும் வாக்களித்தனர். இவ் வாக்கெடுப்பு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதெனவும், பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஜனநாயகம் எனவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. வாக்கெடுப்பு நடாத்தி சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் சரியான ஒரு திசை அறியாமல் இதில் விவாதங்கள் தொடர்கின்றன.

சுயநிர்ணய உரிமை என்பது, வாக்கெடுப்பின் முடிவுகளோடு செல்வதா அல்லது பிரிவினால் ஏற்படக் கூடிய சாதக, பாதகங்களை கவனத்தில் கொண்டு, சில மாற்றங்களை ஏற்படுத்திச் செல்வதா? என்ற அளவுக்கு விவாதங்கள் மாறியுள்ளன. அதாவது, வெளியேற்றம் என்பது மென்மையானதாக அமைய வேண்டுமா அல்லது கடுமையானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, சுயநிர்ணய உரிமை என்பது, அதன் கோட்பாட்டு நிலைப்பாடுகளுக்கு அப்பால், நடைமுறைச் சாத்தியங்களையும் கவனத்தில்கொள்வது அவசியமானது என்பதை பிரிட்டனில் தற்போது இடம்பெற்றுவரும் இவ் விவாதங்கள் உணர்த்துகின்றன. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகள் என்பது வெறுமனே சுலோகங்கள் அல்ல என்பதனையும், எவ்வித பகுப்பாய்வும் இல்லாமல், உணர்ச்சிகளை ஊட்டி நடாத்தும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தவல்ல அவலங்களை உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதையும் இது தெளிவாக காண்பிக்கின்றது. பொருளாதார வளர்ச்சியும், கல்வி அறிவும் படைத்த ஒரு நாட்டில் தெளிவற்ற வார்த்தைகளை உள்ளடக்கிய கேள்வியை வாக்கெடுப்பிற்கான மூலமாக வைத்து நடாத்திய இம் மக்கள் வாக்கெடுப்பு ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தும் விளைவுகளைச் சற்று பார்க்கலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு மிகவும் சிக்கலான பின்னணியிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ராஜ்யத்தின் ஒரு பகுதியாகிய ஸ்கொட்லாந்து ஐக்கிய ராஜ்யத்திலிருந்து பிரிந்துசெல்ல விரும்புகிறது. வட அயர்லாந்துக் குடியரசு ஆதரவாளர்கள் தென் அயர்லாந்துடன் இணைந்து வாழ விரும்புகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பெருமளவு தொகையினர் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு எதிரான குரலாக இக் கோரிக்கை காணப்பட்டபோதிலும், அதனுடன் கூடவே பல்லின சமூக, கலாசார மாற்றத்திற்கு எதிரானதாகவும், பெண்ணியம், சுற்றுப்புறச் சூழல் மாசடைதல், சமூக விடுதலை என்பவற்றிற்கு எதிரான சிந்தனைகளும் இணைந்தே இந்த ‘வெளியேறு’ என்ற கோரிக்கைக்கு பலம் சேர்க்கின்றன.
அதுமட்டுமன்றி, இக் கோரிக்கையின் பின்னால் பல்வேறு அணிகளின் சேர்க்கைகள் உள்ளடங்குகின்றன. அதாவது, மக்கள் பரம்பலை அவதானித்தால் வயதும், கல்வி அறிவும் பிரதான காரணிகளில் ஒன்றாக உள்ளன. 50 வயதிற்கு மேலானவர்களும், கல்வி அறிவில் குறைந்தவர்களும் இக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. அதேபோலவே, இனக் குழுமங்களை நோக்கும்போது வெள்ளையரல்லாதோரில் பெரும்பாலோர் வெளியேறுவதற்கு எதிராகவும், வெள்ளையர்களில் பெரும்பாலோர் ஆதரவாகவும் வாக்களிக்கும் நிலை காணப்பட்டது.
மத அடிப்படையில் பார்த்தால், கிறிஸ்தவ புரட்டஸ்தாந்து மதத்தவர் அதாவது இங்கிலாந்து திருச்சபையுடன் இணைந்தவர்கள், யூதர்கள், சீக்கியர்கள் என்போரில் பெரும்பாலோர் ஆதரவாகவும், முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் மதப்பற்று அல்லாதோரில் பெரும்பாலோர் எதிராகவும் வாக்களிக்கும் நிலை காணப்பட்டது.
இதில், அரசியல் கட்சிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மிக முக்கியமானவை. உதாரணமாக, ஸ்கொட்லாந்து அரசியலில் மிகவும் காத்திரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. 1997இல் ரோனி பிளேயர் தலைமையிலான தொழிற்கட்சி ‘புதிய தொழிற்கட்சி’ என்ற பெயரில், பழைய ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தை நோக்கி கன்சர்வேட்டிவ் கட்சியின் இடத்தைப் பிடிக்கும் வகையில் தனது அரசியல் கோட்பாடுகளை மாற்றியது. ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்படுத்திய யுத்தங்களும், நவதாராளவாத பொருளாதாரக் கோட்பாடுகளும், ஸ்கொட்லாந்தில் பெருமளவில் வாழ்ந்த சுரங்கத் தொழிலாளர்களைப் பாதித்தன. இதனால் தொழிற்கட்சியின் ஆதரவு சிதைந்தது. கன்சர்வேட்டிவ் கட்சியினதும், தொழிற் கட்சியினதும் செயற்பாடுகளால் வெறுப்படைந்த தொழிலாள மக்கள், ஐக்கிய ராஜ்யம் தம்மைக் கைவிட்டுள்ளதாக உணர்ந்தனர். இதன் காரணமாக, பிரிவினையைக் கோரிய ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியை அங்கு மக்கள் பெருமளவில் ஆதரித்தனர். 2012 – 14 காலப் பகுதியில் பிரிந்துசெல்வதற்கான விவாதங்கள் பெருமளவில் நிகழ்ந்தன. மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, மிகச் சிறிய அளவு வித்தியாசத்தில் பிரிவினைக் கோரிக்கை தோற்கடிக்கப்பட்டது. இவ் வாக்கெடுப்பின்போது தொழிற்கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி என்பன ‘இணைந்து வாழ்ந்தால் சிறப்பான வாழ்வு’ எனப் பிரச்சாரம் செய்தன.
ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தமது தேசியவாதத்தினை இன வாதத்திற்கு அப்பால் எடுத்துச் சென்றது. இனப் பாகுபாடு அற்றவகையில் எவரும் ஸ்கொட்லாந்தில் வாழலாம் என அழைப்பு விடுத்தது. இதேவேளை, இங்கிலாந்தில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. ஆனால், ஸ்கொட்லாந்தில் அந்த உரிமையை தேசியக் கட்சியினர் வழங்குவதாக அறிவித்தனர். எனவே, இங்கிலாந்தில் இனவாத அரசியல் நிகழும்பொது, சிவில் உரிமைபற்றி அங்கு பேசப்பட்டது.
ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை எதிர்த்தது. தமது பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தடுக்கும் உபாயங்களை விவாதித்தனர். வெளியேறுவது என்ற கோரிக்கையின் பின்னால் தமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை பாதிக்கப்படுவதை உணர்ந்தனர். இதன் காரணமாக மேலும் பல அதிகாரங்களைப் பரவலாக்கும்படி அவர்கள் வற்புறுத்தினர்.
தொழிற்கட்சியின் தலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ரோனி பிளேயரின் பின்னர் ஜெரமி கோபன் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டார். இரண்டு தடவைகள் 2015ஆம் ஆண்டு செப்ரெம்பரிலும், 2016 செப்ரெம்பரிலும் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ரொனி பிளேயரினால் வலதுசாரி அரசியலுக்கு எடுத்துச்செல்லப்பட்ட கட்சி, மீண்டும் இடது பக்கம் திருப்பப்பட்டது. கட்சியின் வலதுசாரிகள் மிக மோசமான பிரச்சாரங்களை மேற்கொண்டு பல தடைகளைப் போட்டிருந்தபோதிலும் ஜெரமி கோபன் வெற்றிபெற்றதோடு, கட்சியின் அங்கத்தவர்கள் தொகை ஐந்து லட்சத்தைத் தாண்டி, ஐரோப்பாவில் பாரிய கட்சியாக ஆகியது.
2016ஆம் ஆண்டு டேவிட் கமரோனின் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியினர் தமது கட்சிக்குள் நிகழ்ந்த உட்கட்சி மோதலைத் தணிக்க மக்களிடம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா, இல்லையா எனக்கேட்டு வாக்கெடுப்பு நடாத்தினர். பிரதமர் கமரோன் வெளியேறக்கூடாது என பிரச்சாரம் செய்தார். முடிவு அவருக்குத் தோல்வியாக அமைந்து. அதன் காரணமாக அவர் பதவி விலகியதோடு அரசியலுக்கும் முழுக்குப் போட்டார். அவரின் பின்னர் பதவிக்குவந்த திரேசா மே அம்மையார், மக்களின் தீர்ப்பை அமுல்படுத்துவதாக கூறினார். அதன் அடிப்படையில் தனது பாராளுமன்ற பலத்தை அதிகரிக்கும்பொருட்டு பொதுத் தேர்தலுக்குச் சென்றார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி மக்கள் வாக்களிக்கவில்லை. ஆனால், தொழிற்கட்சி தனது வாக்குப் பலத்தை அதிகரித்தது. திரேசா மே அம்மையார் வட அயர்லாந்தின் மதவாதக் கட்சியான ஜனநாயக யூனியன் கட்சியின் உதவிடன் தற்போதும் பதவியில் உள்ளார்.
அவர் பதவிக்கு வந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 50ஆவது பிரமாணத்தைப் பயன்படுத்தினார். தொழிற்கட்சி அதற்கு எதிராக செயல்படும் என வலதுசாரி செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய, தொழிற் கட்சியும் மிக விவேகத்துடன் அதனை ஆதரித்தது. திரேசா மே அம்மையார் ‘வெளியெறுவது எனில் வெளியேறுவதுதான்’ எனக் கூறியபோது, ஜெரமி கோபன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்தார். அவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பல்கலைக்கழக மாணவர்களின் கட்டணத்தை அகற்றுவதாக அவர் அறிவித்தபோது இளைஞர் மத்தியில் பெரும் ஆதரவு திரண்டது. மூன்றாவது பெரும் கட்சியாகிய லிபரல் ஜனநாயகக் கட்சியினரும் ஆதரவளித்தனர்.
ஜெரமி கோபனின் புதிய கொள்கைகள் மக்கள் ஆதரவைப் பெற்றதால் வெளியேறுவதற்கு ஆதரவாக செயல்பட்ட ஐக்கிய ராஜ்ய லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவாளர்கள் பலர் கட்சி மாறி தொழிற்கட்சியை ஆதரிக்கின்றனர். இதன் காரணமாக, 2017இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் 25 ஆசனங்கள் தொழிற்கட்சிவசம் சென்றன. கன்சவேட்டிவ் கட்சியினால் தொழிற் கட்சியின் 6 ஆசனங்களை மட்டுமே பறிக்க முடிந்தது.

நிறுவன மற்றும் சட்டப் பிரச்சனைகள்
1973ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் எட்வேர்ட் கீத் தலைமையிலிருந்த அரசே ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் பிரித்தானியாவை இணைத்தது. 43 ஆண்டுகளின் பின்னர், அதே கன்சர்வேட்டிவ் கட்சியே விலகுவதற்கான வாக்கெடுப்பையும் நடத்தியது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளில் ஐரோப்பிய சமூகம் பெருமளவில் மாறியுள்ளது. இம் மாற்றத்தின் பின்னணியில் பிரித்தானிய மக்களிடம் பின்வரும் கேள்வியை எழுப்பியே கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி விலகுவதற்கான வாக்கெடுப்பை நடாத்தி, முடிவுகளை இன்று எடுத்துள்ளனர்.
‘ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்யம் தொடர்ந்து அங்கத்துவம் வகிப்பதா, இல்லையா?’
இக் கேள்விக்கு அதாவது, விலக வேண்டுமென 51.9 சதவீதத்தினர் வாக்களிக்க, 48.1 சதவீதத்தினர் தொடர்ந்து அங்கம் வகிக்கவேண்டுமென வாக்களித்தனர். நாட்டின் எதிர்காலம் தொடர்பான தீர்மானம் ஒன்றினை ‘ஆம்; இல்லை’ என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதிலாகவும், அம் முடிவுகளால் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மக்கள் இரு பக்கத்திலும் இருப்பதை வாக்குகள் உணர்த்தியுள்ளன. இந்நிலையில், சுமார் 4 சதவீத மக்கள் அதி ஆதரவாக வாக்களித்தமையால் விலகுவது என்பது, எவ்வளவு தூரம் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பிரதிபலிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. 48 சதவீதமான மக்களின் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணித்து வெளியேற முடிவு செய்வது அல்லது அம் மக்களுடன் கலந்துரையாடாமல் முடிவுகளை மேற்கொள்வது என்பது எவ்வளவுதூரம் ஜனநாயகமானது?
இனி, ஐக்கிய ராஜ்யத்தில் அங்கம் வகிக்கும் தனித்த பிரதேசங்களின் அபிப்பிராயத்தை அவதானித்தால், இவ் வாக்களிப்பில் அம்மக்கள் ஒட்டுமொத்தமாக 71.8 சதவீதத்தினர் வாக்களித்தனர். இதில், இங்கிலாந்து மக்களில் 53.4 சதவீதத்தினரும், வேல்ஸ் மக்களில் 46.6 சதவீதத்தினரும் வெளியேறுவதற்கு ஆதரவாகவும், ஸ்கொட்லாந்து மக்களில் 62 சதவீதமானவர்களும், வட அயர்லாந்து மக்களில் 55.8 சதவீத மக்களும் இணைந்து செல்ல ஆதரவாக வாக்களித்தனர். அவ்வாறானால், நாடு மிக அதிகளவில் பிரிந்துள்ள நிலையில் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் அர்த்தமில்லாத வாக்கெடுப்பை நடாத்தி பிரிந்துசெல்ல முயற்சிப்பது, சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கேள்விக்குள்படுத்துகிறது.
பிரித்தானியா ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைவதற்கான வாக்கெடுப்பை 1975ஆம் ஆண்டு யூன் 5ஆம் திகதி நடத்திய வேளையில் 67.2 சதவீத மக்களே ஆதரித்தனர். இதன் அடிப்படையில் தத்தமது இறைமை அதிகாரங்களை பகிர்ந்தளிக்க சம்மதித்தனர். ஆனால், 2016ஆம் ஆண்டு வாக்கெடுப்பின்போது வெளியேறவேண்டும் என கோரியவர்கள் தமக்கென சுயாதீன பாராளுமன்றம் தேவை எனவும், பிரசல்ஸ்ஸின் கட்டளைகளுக்கு ஏற்ப நாட்டை நடாத்த முடியாது எனவும், நேரடி ஜனநாயக ஆட்சி அதிகாரத்தின் தேவையையும், பகிர்ந்தளிக்கும் இறைமையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை மிக நீண்ட காலமாக வலியுறுத்திய செய்தி ஊடகங்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தின. ஐரோப்பிய உயர் அரசு ஒன்றினை ஸ்தாபிக்கும் சூழ்ச்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருப்பதாகவும், அவை தனி அரசுகளைப் பலவீனமாக்குவதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்கள் பொறுப்புக் கூறும் கடமையைக் கொண்டிருக்கவில்லை எனவும், ஐரோப்பியர்களின் கட்டுப்பாடற்ற வருகை தடுக்கப்படவேண்டுமெனவும் பிரச்சாரம் செய்தன.
(இந்த ஊடக நிறுவனங்களின் ஜனநாயகத் தன்மையை எடுத்து நோக்கினால் சுயநிர்ணய உரிமையின், ஜனநாயகத்தின் கோர முகம் புரிந்து விடும். அதாவது )பிரித்தானியாவிலுள்ள 80 சதவீத செய்தி ஊடகங்கள் 4 பாரிய கம்பனிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை யாவும் பிரிட்டன் வெளியேறும்படி கோருகின்றன. அதிகளவு விற்பனையாகும் 6 பத்திரிகைகள் வெளியேற்றத்தை ஆதரிக்கின்றன. அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் காலம்வரை வெளியேறுவதை அதிகளவு மக்கள் ஆதரிப்பதாகவே இப் பத்திரிகைகள் அபிப்பிராய வாக்கெடுப்பு என்ற பெயரில் பிரச்சாரங்களை மேற்கொண்டன. தொலைக்காட்சி ஊடகங்களில் பலவும் (பிபிசி உள்பட) இதேவிதமாகவே தெரிவித்தன.
இவ்வூடகங்களின் பிரச்சாரங்கள் யாவும் சமூகத்தின் பிற்பட்ட பிரிவினரை நோக்கியதாகவே அமைந்தன. குறிப்பாக கல்வி அறிவு குறைந்தவர்கள், வறுமையில் வாழ்பவர்கள், முதியோர் என்பவர்களைக் குறிபார்த்து அச்ச உணர்வுகளைத் தூண்டும்வகையில், குடிவரவு அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் ஏற்படும் நெருக்கடிகள், பாடசாலை இட நெருக்கடிகள், பல்லின கலாசார தாக்கங்களினால் சுய அடையாளங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், குற்றச் செயல்கள் அதிகரிப்பு என்பவைபோன்ற கவலைகள் மிகைப்படுத்தப்பட்டன. இவை யாவற்றுக்கும் காரணம் அந்நியர் வருகை என்பதே பிரச்சாரங்களின் உட்கூறாக அமைந்தது.
இத்தகைய பின்னணியிலிருந்து பார்க்கும்போது, சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் பல சக்திகள் முடிவுகளை தமக்கு ஏற்றவாறு மாற்ற எடுத்துள்ள முயற்சிகளும், அதில் பல்லின சமூகங்கள் மத்தியிலும், பல மதத்தவரின் நோக்கிலும் மாறுபட்ட அபிப்பிராயங்கள் ஏற்பட்டதைக் காணமுடியும். பிரித்தானிய அரசு சுயாதிபத்தியமானதாகவும், பாராளுமன்றமே சட்டம் இயற்றும் ஒரே அரங்கு எனவும் கூறி, நாட்டின் பொரளாதார வாழ்வைத் தமக்கு ஏற்றவாறு பல்வேறு சக்திகளின் உதவியுடன் மாற்றமுனையும் அதிகார வர்க்கத்தின் போக்கை இதில் பெரிதும் காணலாம். இதன் காரணமாகவே, வாக்கெடுப்பு நடாத்தி இரண்டு ஆண்டுகளை எட்டியபோதிலும் தெளிவான பாதைiயைத் தெரிவுசெய்ய முடியாத நிலை உள்ளது.

– வி. சிவலிங்கம்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ