திரைப்படம் – ‘பரியேறும் பெருமாள்’: சாதியத்துக்கு ஒரு சங்கநாதம்

0 37

தமிழகத்தில் நிலவும் தீண்டாமை, ஆணவக் கொலை உள்ளிட்ட சாதிய அவலங்கள் தமிழ் சினிமாவில் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. சாதியத்தைச் சாடும் திரைப்படங்கள் எக்காலத்திலுமே அவ்வப்போது வெளிவந்திருந்தாலும், இயக்குநர் பா. இரஞ்சித்தின் வருகைக்குப்பின்னர் பல படங்கள் இந்தப் பிரச்னைகளைப் பேசத் தொடங்கியுள்ளன.

தலித் மக்களின் வாழ்வியலையும் தலித் அரசியலையும் பூடகமாகவும் நேரடியாகவும் பேசும் படங்களை இயக்கியவரான இரஞ்சித், தான் அச்சமூகத்தில் பிறந்தவர் என்பதை வெளிப்படையாக அறிவித்துச் செயல்படும் மிகச்சில திரை ஆளுமைகளில் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியலைத்தான் நான் பேசுவேன்; அதற்காகவே என் கலையைப் பயன்படுத்துவேன் என்று சொல்லிவருகிறார். இப்போது, அவரது தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம், திருநெல்வேலியையடுத்த தென் தமிழக கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் நிலவும் சாதிக் கொடுமையை அப்பட்டமாகப் பதிவு செய்திருப்பதோடு, சிறந்த கலைப் படைப்பாகவும் உருவாகியிருக்கிறது. சாதிய வன்மம், ஒடுக்கப்படுதலின் வலி என்னும் யதார்த்தத்தை வெகுஜன ரசனைக்கான படங்களின் சட்டகத்துக்குள் பிரச்சார நெடியின்றியும், பெரும் தாக்கம் செலுத்தும் விதத்திலும் இப் படம் பதிவு செய்கிறது.

படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், கதைக் களம் நடக்கும் பகுதியைச் சேர்ந்தவர். படம் இயக்குவதற்கு முன்பே தமிழக மக்களுக்கு ஒரு பத்தி எழுத்தாளராக அறிமுகமாகிவிட்ட இவர், தன் எழுத்துக்களின்மூலம் தன் ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தை வெளிப்படுத்தியவர். இவர் பார்த்து வளர்ந்த, எதிர்கொண்டிருக்கக்கூடிய சாதிய ஏற்றத்தாழ்வை அச்சு அசலாகப் பதிவு செய்திருப்பதே படத்தின் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள புளியகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், பரியேறும் பெருமாள் என்னும் பரியன். இவன் அன்பாக வளர்க்கும் கருப்பி என்ற நாய், ஆதிக்க சாதியினரால் கொல்லப்படுவதில் படம் தொடங்கும் இப் படம், ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் அந்த நாய்க்கு இணையாக நடத்த நினைப்பதை விரிவாகப் பதிவுசெய்கிறது.

சட்டம் படித்து, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்போல் வரவேண்டுமெனவிரும்பு பரியன், சட்டக் கல்லூரியில் சேர்கிறான். நன்றாகப் படிக்கும் மாணவனான அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. இதனால், கல்லூரியில் அவமானத்துக்காளாகிறான். அரசுப் பள்ளிகளில் நன்கு படித்தவர்கள், ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுவதும், ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் பலரும் இதனால் பாதிக்கப்படுவதும் முதல் முறையாக தமிழ் சினிமாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கல்லூரியில் அவனுக்கு ஆங்கிலம் கற்பிப்பதன் வாயிலாக, ஜோதி மகாலட்சுமி என்கிற ஜோ தோழியாகிறாள். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவளான அவள், மிகவும் வெகுளியாக இருக்கிறாள். ஜோவின் அழைப்பில் அவளது வீட்டுத் திருமணத்துக்குச் செல்லும் பரியன், அவளது தந்தையின் முன்னிலையில் ஆதிக்க சாதி இளைஞர்களால் அடித்து அவமானப்படுத்தப்படுகிறான். பரியனை அவமானப்படுத்தும் நோக்கில் அவன்மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவன் சிறுநீர் கழிப்பது அப்பட்டமாகக் காட்டப்படுகிறது,
பரியன் இதையும் கடந்துசெல்ல முயன்றாலும், கல்லூரியிலும் ஆதிக்கச் சாதி இளைஞர்களின் கொடுமைக்கு ஆளாகிறான்; வன்முறை நோக்கித் தள்ளப்படுகிறான். இறுதியில் அவனை ஆணவக் கொலைசெய்யும் முயற்சியிலிருந்து தப்பிக்கிறான். இதனால் குற்ற உணர்வடையும் ஜோவின் தந்தையிடம் ஆதிக்க சாதியினர் மாறினால்தான் எல்லாம் மாறும் என்று கூறுவதன்மூலம் அவர்களை உரையாடலுக்கு அழைப்பதுடன் படம் நிறைவடைகிறது.

படத்தில் போகிறபோக்கில் சாதிய ஆணவக் கொலைகள் எப்படி நிகழ்கின்றன என்பதோடு, அவை எப்படி வெளிச் சமூகத்திடமிருந்து மறைக்கப்படுகின்றன என்பதையும் பதைபதைக்கும் வகையில் பதிவு செய்கிறது ‘பரியேறும் பெருமாள்’. இந்தக் கொலைகளை சூழ்ச்சிசெய்து, ஒற்றையாளாக செய்துமுடிப்பதற்கென்றே தன் வாழ்வை அர்ப்பணித்த ஒரு கிழவரின் கதாபாத்திரம், சாதியத்தின் குறியீடாகவே முன்வைக்கப்படுகிறது. ‘குலசாமிக்காக இந்தக் கொலைகளைச் செய்கிறேன்’ என்று அவர் சொல்லும்போது, ஆதிக்கச் சாதிவெறி எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்ற அதிர்ச்சி ஏற்படுகிறது.

அதேநேரம், இந்தப் படம் ஆதிக்க சாதியினர் எல்லோரும் இப்படித்தான் என்று ஒற்றைப்படையாகக் குற்றம்சாட்டவில்லை. பரியனின் கல்லூரித் தோழனாக வரும் ஆனந்த் (யோகிபாபு) அவனை நட்போடும் பரிவோடும் அணுகுகிறான். ஜோவின் தந்தைகூட பரியன்மீது வன்முறை ஏவப்படுவதையும், கொலைமுயற்சி நடப்பதையும் ஒரு சூழ்நிலைக் கைதிபோல்தான் வேடிக்கை பார்க்கிறார். அவர் அவற்றுக்கு ஒப்பவில்லையென்றால், அவரது சுற்றத்தார் அவரை விட்டுவைக்க மாட்டார்கள் என்பதும் பதிவுசெய்யப்படுகிறது.

தன் சாதியைச் சேர்ந்த இளைஞர்களும் எதிர் வன்முறைக்கு ஆயத்தமாக இருக்கும் நிலையில், பரியன் அவர்களை மரியாதையான தொலைவிலேயே வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களின் உதவியை நாடிச்சென்று முயன்று, கடைசி நொடியில் அந்த எண்ணத்தைக் கைவிடுகிறான். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு எதிர்வன்முறை தீர்வாகாது என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது இத் திரைப்படம். கல்விதான் அவர்களது விடுதலைக்கான சிறந்த தீர்வு என்பது, செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, எல்லா நிலைகளிலும் சாதியக் கொடுமைகளை அனுபவித்த சட்டக் கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்தின்மூலம் விளக்கப்படுகிறது.

பொதுவாக சாதிய அவலம் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளைக் கையாளும் படங்களில் இருக்கும் பிரச்சார நெடியை மட்டுமல்லாமல், அவை கண்ணீர்க் கதைகளாக மட்டுமே இருப்பதையும் தவிர்த்திருக்கிறது ‘பரியேறும் பெருமாள்’. ஆடல், பாடல், நகைச்சுவை, யதார்த்தமான வாழ்வியல் பதிவுகள், கல்லூரி நட்புகள் என, ஓர் ஆரோக்கியமான கேளிக்கைப் படத்துக்கான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. சந்தோஷ் நாராயணின் பாடல்களும் பின்னணி இசையும் ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் படத்தின் பேசுபொருளுக்குப் பெரிதும் வலுசேர்க்கின்றன.

வன்முறையை விடுத்து, ஆதிக்கச் சாதி மக்களை உரையாடலுக்கு அழைக்கும் பரியன், சாதியச் சமூகத்தைச் சேர்ந்த எல்லோரையும் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறான். இந்தக் குற்ற உணர்வே ஒவ்வொருவரும். சாதியத்திலிருந்து விடுபடுவதற்கான தொடக்கப் புள்ளி.

– காலன்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ