வெப்பமயமாகும் உலகு: விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும் உலகின் உறக்கமும்!

0 41

சைபர்சிம்மன்

பருவநிலை மாற்றம் தொடர்பாகக் காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதைத் தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதையநிலை, மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப் பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்கவேண்டுமெனில், வெப்பநிலை உயர்வை 1.5 செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்தாகவேண்டுமென தெரிவித்துள்ளனர். ஆனால், இதனைச் செய்ய தலைகீழாக நின்றாகவேண்டும் என்றும் இவர்கள் எச்சரித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் தங்கள் கடமையைச் சரிவர செய்துள்ளனர். அவர்களின் அபாய எச்சரிக்கையை உணர்ந்து, உலகம் தனது உறக்கத்தைக் கலைத்துக்கொண்டு, பொறுப்புடன் செயல்படத் தயாராக இருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வி.

பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதம் நாம் அறியாதது அல்ல. முன்னர் இருந்ததைவிட பூமியின் வெப்பம் மெல்ல அதிகரித்துவருவதைத்தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாகவே பூமி எதிநோக்கியுள்ள இந்த பிரச்னைபற்றி பரவலாக பேசப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, துருவப்பகுதியில் பனிக்கட்டிகள் உருகி வழியும் நிலை உருவாகும், கடும் வரட்சியும், அதீத வெள்ளமும் உண்டாகும் என்றெல்லாம் கூறப்பட்டுவருகிறது. சர்வதேச மாநாடுகளில் இதுபற்றி உலக நாடுகள் ஆலோசித்திருக்கின்றன.

ஆனால், இந்தப் பிரச்னை ஏதோ விஞ்ஞான உலகப் பிரச்னை; இந்த அளவுக்கெல்லாம் விபரீதம் நடந்துவிடாது என நினைத்துக்கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை உடனடியாக நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கைமூலம் விஞ்ஞானிகள் இதைத்தான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துள்ளனர். பருவநிலை பாதிப்பு என்பது ஏதோ எதிர்காலத்தில் எப்போதோ நிகழக் காத்திருப்பது அல்ல, அடுத்த பத்தாண்டுகளிலேயே இதன் தீவிரத்தை உலகம் உணரத்துவங்கிவிடும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வெப்பம் அதிகரிப்பதை எப்படியாவது 1.5 செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்திவிட முயற்சிக்கவேண்டும் என்றும் அறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரச்னையின் பின்புலம்

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திகைக்கவைக்கும் எச்சரிக்கைத் தகவல்களை பார்ப்பதற்கு முன்னர், இந்த பிரச்னைபற்றிய பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். 19ஆம் நூற்றாண்டின் தொழில்புரட்சி நவீன வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்து, இன்றைய நவீன வசதிகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இன்றைய ‘டிஜிட்டல்’ புரட்சிக்கும் தொழில் புரட்சிதான் மூல விதை. ஆனால், தொழில்புரட்சிக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. நாம் பூமியின் வளங்களைச் சுரண்டத் துவங்கி, சுற்றுச்சுழலைப் பதம் பார்க்கத் துவங்கியதும் இதன் பக்கவிளைவாக அமைந்தது.

நிலக்கரியையும், பெட்ரோலையையும் தோண்டி எடுத்ததும், இந்த வளங்களை எரித்துக் காற்றை மாசாக்கியதும் கட்டுப்பாடில்லாமல் தொடர்வதன் விளைவாக, நாம் வசிக்கும் பூவியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதையே தாமதமாகத்தான் நாம் உணர்ந்தோம். புவியின் வெப்பம் முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளது என்பதுதான் அது. ஆம், 19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புவியின் வெப்பம் ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, இந்தப் போக்கு தொடர்வதால் வருங்காலத்தில் இது 2 முதல் 3 டிகிரி வரை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதைத்தான் புவி வெப்பமாதல் என்கின்றனர்.

இந்தப் பிரச்னையின் தீவிரத்தை விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள்மூலம் தொடர்ந்து வலியுறுத்திவந்ததால், இது தொடர்பாக ஏதாவது செய்தாகவேண்டும் என்று உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இதன் விளைவாகவே 2015இல் பாரீஸ் நகரில் பருவநிலை மாநாடு நடைபெற்றது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டன. இதற்கான செயலாக்கம் சர்வதேச அரசியலில் சிக்கித்தவித்துவரும் நிலையில், இது தொடர்பான அடுத்த அறிக்கை 2018இல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் அறிக்கை

அதன்படி, அண்மையில் தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற மாநாட்டில், ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஆய்வுகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் இந்த அறிக்கையை தொகுத்தளித்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட்டு, இந்த அறிக்கை தயாராகியுள்ளது.

இந்த அறிக்கைதான், புவி வெப்பமயமாதலின் விபரீதங்களை எச்சரிக்கையாகச் சுட்டிக்காட்டியுள்ளது. உண்மையில், இந்த அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனால், ஏற்கனவே பருவநிலை மாற்றம்பற்றி அறியப்பட்ட விஷயங்களை நம்மால் இனியும் அலட்சியம் செய்யமுடியாது என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது. இது தவிர்க்கவோ, தள்ளிப்போடவோகூடிய பிரச்னை அல்ல என்பதோடு, உடனடியாக இதைச் சரிசெய்தாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், இனிவரும் ஆண்டுகளில் வெப்பம் அதிகரிப்பதை 2 செல்ஷியசுக்குள் குறைக்கவேண்டும் என்பதை, 1.5 செல்ஷியசுக்குள் குறைக்க முடிந்தால் மனித குலத்திற்கு மிகவும் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் விளைவுகள் மிக மோசமாக அமையும்.

வாழ்வுக்கும் அழிவுக்கும் இடையில் அரை ‘டிகிரி’

அரை செல்சியஷிசில் என்ன வந்துவிடப்போகிறது என கேட்கலாம். அரை ‘டிகிரி’ என்பது, ஆர்டிக் – அண்டார்டிக் பகுதிகளில் பனிக்கட்டிகள் அதிகம் உருகாமல் இருக்கவும், கடலில் உள்ள பவளப் பாறைகள் காணாமல் போகாமலிருக்கவும் உதவும் என்கிறது அறிக்கை. அரை டிகிரி வெப்பம் உயர்ந்தால் பனிக்கட்டிகள் போன்றவற்றின் வாழ்விடம் மேலும் குறைந்துபோகும். அளவுக்கு அதிகமான வெப்பத்திற்கு மனித குலம் இலக்காகும். இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்ப அலை வீசும்.

மத்திய தரைக்கடல் பகுதி பாதிப்புக்குள்ளாகும். உலகின் பூச்சி இனங்கள் பல அழியும் நிலை வரும். வரலாறு காணாத வெள்ளமும், வரட்சியும் இயல்பாகும். கடல் நீர் மட்டம் உயர்ந்து ,பல தீவுகள் மூழ்கலாம்.

இப்படியெல்லாம் எச்சரிக்கும் அறிக்கை, ஒரு செல்ஷியசில் பத்தில் ஒரு பகுதியைக் குறைக்க முடிந்தால்கூட, அதனால் ஏற்படும் அனுகூலம் அநேகம் என்கிறது. இந்த பாதிப்புகள் எல்லாம், ஏதோ கண்ணுக்குத் தெரியாத வருங்காலத்தில் ஏற்படப்போவது அல்ல. அடுத்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் இவற்றை உணரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவேதான், பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டாகவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கரியமல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் பயன்படுத்துவதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாகவேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

ஆக, விஞ்ஞானிகள் தங்கள் பணியைச் சரியாகச் செய்துள்ளனர்; உலகின் உறக்கம் கலையுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

ஆதாரம்: https://www.nytimes.com/interactive/2018/10/07/climate/ipcc-report-half-degree.html

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ