
பயண சாகசம்: அதிதூர விமானசேவை ஆரம்பம்
— October 11, 2018 0 20உலகின் அதிதூர நேரடி விமான சேவை இன்று தொடங்குகிறது. ஐந்து ஆண்டுளுக்கு முன்னர் தொடங்கி இடைநிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூருக்கும் அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குமான இந்த சேவையை சிங்கப்பூர் எயர்லைன்ஸ் மீண்டும் இன்று ஆரம்பிக்கிறது.
19 மணித்தியாலங்களுக்குச் சற்றுக் குறைவான பயண நேரத்தைக்கொண்ட இச்சேவை, 15 ஆயிரத்துக்கும் அதிகமான கி. மீ. தூரத்தைக் கடக்கிறது.
அதி செலவினம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இச் சேவையில் இப்போது புத்தம்புதிய A350-900 ULR விமானம் ஈடுபடுத்தப்படுகிறது. முன்னர் சேவையிலீடுபடுத்தப்பட்ட போயிங் 777 ரக விமானத்தைவிட சுமார் 20-30 வீதம்வரை குறைந்த எரிபொருளளவில் இப் புதிய விமானம் பயணிக்கிறது. 161 பயணிகள் இதில் பயணம் செய்யலாம். சிங்கப்பூரிலிருந்து நியூயோர்க்கின் நீவாக் விமான நிலையத்துக்கு இச் சேவை இடம்பெறுகிறது.
அதி தூர பயணமாக, கடந்த ஜனவரியில் அவுஸ்திரேலிய விமானசேவை ‘குவான்ரஸ்’ அவுஸ்திரேலியாவின் மேற்குக்கரை நகர் பேர்த்திலிருந்து லண்டனுக்கான சேவையை ஆரம்பித்திருந்தது. இது, 17 மணிநேர பயணமாகும். இதேவேளை, ஓக்லாந்துக்கும் டோகாவுக்குமிடையேயான பதினேழரை மணிநேர சேவையில் கட்டார் விமானசேவை ஈடுபடுகிறது.
இடையில் தரித்து, நேரதாமதமின்றிய நேரடி நீணடதூர விமான பயணத்தை இப்போதைய அவசர யுகத்தில் பலரும் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அவுஸ்திரேலிய விமான சேவை ‘குவான்ரஸ்’, அவுஸ்திரேலியாவின் கிழக்குக்கரை நகர் சிட்னியிலிருந்து லண்டன் சேவைக்கான 20 மணிநேர பயணத்துக்கு எதுவான தகுந்த விமானம் ஒன்றைத் தயாரிப்பதில் எயர்பஸ், போயிங் விமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இப்போது பேச்சுவார்த்தையிலீடுபட்டுள்ளது.
எரிபொருள் சிக்கனத்திலும் பயணிகளுக்கான வசதிகளிலும் A350-900 எயர்பஸ் தயாரிப்பு விமானம் தற்போது சிறந்ததாக பயன்படுத்தப்படுகிறது.
Leave a reply