போபர்ஸ் – ரபேல் ஊழல்கள்: காட்சி மாறவில்லை; கதாபாத்திரங்கள் மட்டுமே

0 82

தினேஷ் அகிரா

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையான நேரு காலம் தொடங்கி இன்றுவரை பல்வேறு ஊழல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இந்திய ஜனநாயகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், இவற்றில் ஒரு சில விவகாரங்கள்மட்டுமே ஆட்சி மாற்றத்தையும் அரசியல் தட்ப வெப்ப சூழ்நிலையையும் மாற்றும் வல்லமை பெற்றதாக இருந்திருக்கின்றன. இராணுவ விவகாரம் தொடர்பான முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதன்பொருட்டு இராணுவ அமைச்சர் பதவி விலகும் சடங்குகள் போன்றவை நேரு காலத்திலேயே தொடங்கினாலும், அதன்பொருட்டு ஆட்சிக்கோ அதன் ஆட்சித் தலைமையின் நாயக பிம்பத்திற்கோ பெரிய அளவிலான சேதாரம் எண்பதுகள்வரை ஏற்படவே இல்லை.

ராஜீவ் காந்தியின் சறுக்கல்
ஓர் ஊழல் குற்றச்சாட்டு பிரதானமாக செயல்பட்டு, ஆட்சி மாற்றத்தை இந்தியாவில் முதன்முதலில் நிகழ்த்தியது ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான். இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரும் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தப் பெருமை ராஜீவ் காந்தியையே சேரும். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியமைத்த ராஜீவ் காந்தி, மக்கள் மத்தியில் தன்னை நவீனத்துவத்தின் முகமாகக் காட்டிக்கொண்டார். ராஜீவின் ஆட்சிக் காலத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை நவீனப்படுத்தப்பட்டது. ராஜீவின் ஆட்சியில் பல குறைகள் இருந்தாலும், இந்திராவின் சோஷலிசத்திலிருந்து நரசிம்மராவின் புதிய பொருளாதரக் கொள்கையை நோக்கிய இந்தியாவின் பரிணாம வளர்ச்சியில் ராஜீவின் பாத்திரத்தை அவரது அரசியல் எதிரிகள்கூட இன்றும் போற்றுகின்றனர். ஆனால், எந்த மக்களால் இந்தியாவின் இளவரசனாகத் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டாரோ அவர்களாலேயே 1989 பொதுத் தேர்தலில் ராஜீவ் தோற்கடிக்கப்பட்டார். அன்றைய ராஜீவ் ஆட்சியின்மீது அம்பானியின் கம்பெனிக்குச் சாதகமாக சட்டத்தை வளைப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அவரது அமைச்சரவை சகாவான வி.பி. சிங் உள்ளிட்டோராலேயே கடுமையாகச் சுமத்தப்பட்டன. ஆனால், ஆட்சியைக் காவு வாங்கியதில் பிரதான பாத்திரம்வகித்த குற்றச்சாட்டு, ‘போபர்ஸ்’ இராணுவ ஊழல்.

போபர்ஸ் – ரபேல்
மோடிமீது ரபேல் விவகாரத்தில் சந்தேக ரேகைகள் விழுந்துள்ள இன்றைய சூழலில், ராஜீவின் ஆட்சிக்கு முடிவுகட்டிய போபர்ஸ் குறித்துப் பேசுவதில் ஒரு காரணம் இருக்கிறது. ஒருவருக்கொருவர் முழுக்க மாறுபட்ட பாணியிலான தலைவர்கள் என்றாலும்கூட, மோடியின் இன்றைய ஆட்சிக்கும் ராஜீவின் ஆட்சிக்கும் புற அரசியல் சூழலில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவில் தனது ஆளுமை மற்றும் தனிப்பட்ட கவர்ச்சியினால் மக்களைக் கவர்ந்த தலைவர்களென இத்தனை ஆண்டுகளில் ராஜீவ் மற்றும் மோடியையே கூறமுடியும். இந்த முப்பத்துநான்கு ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டு முறைகளில் மட்டுமே தனிப்பெரும் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கிறது. ஒன்று; இந்திரா படுகொலைக்குப் பிறகு ராஜீவ் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசு. மற்றொன்று; 2014இல் மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு.

இந்திராவின் இரத்த வாரிசு ராஜீவ் காந்தியானாலும், இந்திராவின் வார்ப்பில் அரசியல் செய்யக்கூடிய ஒரே வாரிசாக இன்று மோடியையே அவரது விமர்சகர்களும் பார்க்கிறார்கள். `Crony capitalism’  என்ற பதம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆட்சிக் காலங்கள் என்று இந்த இருவரின் ஆட்சிக் காலத்தையே கூறமுடியும். இதிலுள்ள நகைப்புக்குரிய விஷயம், ராஜீவ் காலத்தில் இந்தக் குறிப்பிட்ட விமர்சனம் பிரதானமாக பாஜகவினால் காங்கிரஸ்மீது சுமத்தப்பட்டது. இன்று மோடி ஆட்சியில், பிரதானமாக காங்கிரஸ் கட்சியால் இதே குற்றச்சாட்டு பாஜகமீது வைக்கப்படுகிறது.

1989இல் ராஜீவ் ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி ஆட்சி மாற்றத்திற்கு கால்கோளிட்ட வி. பி. சிங், ராஜீவின்மீது வைத்த முக்கிய குற்றச்சாட்டு, ராஜீவ் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’ கம்பெனியின் லாபத்திற்கு உதவும்விதமாக அரசின் கொள்கைகளை வகுக்கிறார் என்பதுதான். ஆச்சரியகரமாக, இன்று மோடிமீது ராஜீவின் மகன் ராகுல் வைக்கும் குற்றச்சாட்டும் அதுவாகவே இருக்கிறது. காட்சி மாறவில்லை; கதாபாத்திரங்கள் மட்டும் மாறியிருக்கின்றனர்.

ஓரணியில் எதிர்க்கட்சிகள் சாத்தியமா?
1989இல் போபர்ஸ் விவகாரத்தை முன்வைத்து ராஜீவை ஆட்சியைவிட்டு அகற்றியதைப்போல, இன்று ரபேலை வைத்து மோடியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் வியூகம் வகுக்கின்றன. ஆனால், இது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை எதிர்க்கட்சிக்கு தார்மிக தலைமை ஏற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியும் உணர்ந்தே இருக்கிறது. காரணம், மோடிக்கு எதிரான ‘எதிர்க்கட்சிகள்’ என்ற வார்த்தைக்கான பொருளை இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் தேர்தல் அரசியல் அகராதியில் சரியாகக் கணிக்கமுடியவில்லை என்பதுதான். அன்று ராஜீவுக்கு எதிராக இருந்தது போல நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக மாநிலக் கட்சிகள் இன்று ரபேலை பூதாகரமாக்கிப் பேசுவதில்லை.

1989 தேர்தலில் ‘பீரங்கித் திருடன்’ போன்ற கவர்ச்சியான அடித்தட்டு மக்களைக் கவரக்கூடிய பிரச்சாரத்தின்மூலம் ராஜீவ் காந்திக்கு எதிராகத் திமுக களமாடியதுபோன்று, இன்று ரபேல் விவகாரத்தைக் கொண்டுசெல்லாமல், பெயரளவில் கண்டித்ததோடு நிறுத்திக்கொண்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாயாவதி, மேற்கு வங்காளத்தின் மமதா பானர்ஜி போன்றவர்கள் பாஜக எதிர்ப்பைத் தங்களது பிரதேச அரசியல் காரணங்களுக்காக மட்டும் முன்னெடுகிறார்களே தவிர, ரஃபேல் விவகாரத்தையொட்டி அல்ல. இவையெல்லாவற்றையும்விட, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஒருபடி முன்னே சென்று, மோடிக்கு ரஃபேல் விவகாரத்தில் தனிப்பட்ட லாப நோக்கங்கள் இருக்க வாய்பில்லையென்று, தானாகவே தேடிச்சென்று ஆதரவுக் கரம் நீட்டுகிறார்.
இன்றுள்ள அரசியல் சூழலில் ரபேல் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவை கடுமையாக எதிர்க்கும் கட்சிகள் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே கூறமுடியும். ஆனால், இக்கட்சிகளும்கூட எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து நின்று பாஜகவை எதிர்க்குமா என்பது சந்தேகமே. காரணம், வரப்போகும் பொதுத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பானமை கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற கேள்விதான் பிரதானமான பேசுபொருளாக அரசியல் வட்டாரத்தில் இருக்கிறது. பாஜகவா அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா என்ற கேள்வியை உருவாக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி கடைசி நான்கு ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை வெல்லும்வகையில் எந்த வெற்றியையும் பெறவில்லை. அதுமட்டுமல்லாமல், ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அடுத்த ஐ. கே. குஜ்ராலாகவோ, தேவேகவுடாவாகவோ வேடமணிய இப்போதே மாநிலத் தலைவர்கள் தயாராகிவிட்டார்கள். பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, சமீபத்திய நேர்காணலில் மாயாவதியோ மமதாவோ அடுத்த பிரதமராக வந்தால் தனக்கு மிகவும் மகிழ்ச்சியே என்று கூறியிருக்கிறார். இது, எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் தன்வசப்படுத்தாமலிருக்க, பாஜக வகுக்கும் வியூகம்.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையடையாதவரையில், பாஜகவுக்கு அரசியல் களத்தில் எந்தவொரு பிரச்னையும் எழப்போவதில்லை. காங்கிரஸ் கட்சியும் இதை உணர்ந்தே இருக்கிறது. அதனால்தான், கர்நாடகத்தில் தானாகவே இறங்கிவந்து, குமாரசாமியிடம் ஆட்சியைத் தாரைவார்த்தது. மோடி ஆட்சியை இறக்குவதே தனது முன்னுரிமை என்றும், அதன்பொருட்டு மாநில கட்சித் தலைவர்களைப் பிரதமராக ஏற்கவும் தயார் என்று இதுவே ராகுலைப் பேசவைத்தது. அடுத்த குடியரசுத் தலைவர் யார், அடுத்தத் குடியரசுத் துணைத் தலைவர் யார், துணைப் பிரதமர் பதவிக்கு வாய்ப்பு உள்ளதா போன்ற, தன்னலம்சார்ந்த கேள்விகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநிலத் தலைவர்கள், ரபேல் ஊழல் விவகாரத்தில் பாஜகவை மேலோட்டமாக விமர்சித்துவிட்டு, மோடியை இந்த விவகாரத்தில் தாக்கிப் பேசாமல் அடக்கி வாசிக்கிறார்கள்.

ராகுல் காந்தியின் தலைமை
ராகுல் காந்தியின்கீழ் அணிதிரள்வதிலும் நிறைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்குச் சங்கடம் உள்ளது. காரணம், நேரு குடும்பத்து வாரிசாக இருந்தாலும், நேரு அல்லது ராஜீவுக்கு இருந்த கவர்ச்சியோ அல்லது இந்திராவிற்கு இருந்த பேச்சுவன்மையோ ராகுலுக்குக் கிடையாது. இதுவரை எந்தவொரு பெரிய தேர்தல் வெற்றியையும் தனது தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் ஈட்டிக் கொடுத்ததில்லை. சமீபத்தைய குஜராத், கர்நாடகத் தேர்தல்களில் ராகுலின் பிரச்சாரம் பெரிய அளவில் பேசப்பட்டாலும், வெற்றிக் கோட்டை அவரால் நெருங்க முடியவில்லை. ரபேல் ஊழல் விவகாரத்தில்கூட, தரவுகளைத் துணையாக வைத்துக்கொண்டு, தொழில்நுட்ப மற்றும் பொருளாதரா ரீதியில் மோடியின்மீது ராகுல் காந்தியின் வைக்கும் விமர்சனத்தை உயர்குடி மேட்டிமைத்தனத்தின் ஒருபகுதியாகவே எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அவரது சொந்தக் கட்சியினரே பார்க்கிறார்கள். ஊழல் விவகாரத்தை அடித்தட்டு மக்களிடம் எடுத்துச்செல்ல மக்களின் மொழியில், மக்கள் தங்கள் வாழ்க்கையுடன் பொருத்திப்பார்க்கும் வகையில், ஒரு தலைவர் எளிமையாகப் பேச வேண்டும். 2014இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வியடைய காரணமாக இருந்த 2G விவகாரத்தில், காங்கிரசுக்கு எதிரான அன்றைய பாஜகவின் விமர்சனதுடன் ஒப்பிட்டால், இன்று மோடிக்கு எதிரான ராகுலின் விமர்சனம் யாவும் மிகவும் இலகுவானவையே. இன்றைய அரசியல் சூழலில் தேவேகவுடா, தேஜஸ்வி பிரசாத் உள்ளிட்ட ஒருசில மாநிலத் தலைவர்களே, வெளிப்படையாக அடுத்த பிரதம வேட்பாளராக ராகுலை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளனர். மற்ற அனைவரும், காங்கிரசுக்குத் தலையையும் பாஜகவுக்கு வாலையும் காட்டியபடி, அடுத்த ஆட்சியில் மத்தியில் தங்களது பங்கு என்னவாக இருக்கும் என்ற மையமாகவே சிந்திக்கிறார்கள்.

செய்தி ஊடகங்களின் ‘கள்ள’ மௌனம்
இன்றுள்ளதுபோன்று, நொடிக்குநொடி முக்கிய செய்தி கொடுக்கும் பெரிய அளவிலான தொலைக்காட்சி ஊடகங்களோ அல்லது கடைக்கோடி கிராமம்வரை உலக நடப்புகளைக் கொண்டுசேர்க்கும் சமூக ஊடங்கங்களோ ராஜீவ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருக்கவில்லை. ஆனாலும், அச்சு ஊடகங்களின் வாயிலாக போபர்ஸ் ஊழல் நாடு முழுவதும் மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், தொலைக்காட்சிகள் ரபேல் ஊழல் விவகாரத்தைப் போதிய முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பதில்லை. அப்படியே ரபேல் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து விவாதங்கள் நடைபெற்றாலும், அதை நீர்த்துப்போகும் வகையில், கடந்தகால ஆட்சிகளின் ஊழல்களோடு சேர்த்து, பத்தோடு பதினொன்றாக அது விவாதிக்கப்படுகிறது. ஆனால், போபார்ஸ் விவகாரத்தில் இராணுவ கொள்முதலில் ஊழல் என்று, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினவே தவிர, பீரங்கியின் தரம்குறித்த சந்தேகத்தை ஒருவர்கூட எழுப்பவில்லை. ஆனால், ரபேல் பிரச்னையில் விமானத்தின் தரம்குறித்த சந்தேகங்களும் இன்று எழுப்பப்படுகின்றன. இன்றைய மோடி ஆட்சியில் செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்து, ‘கோப்ரா போஸ்ட்’ ஸ்டிங் ஆபரேஷனில் வெளிக்கொண்டுவரப்பட்ட ஆதாரங்களே சாட்சி. இதுவரையிலான இந்திய பிரதமர்களில், செய்தி ஊடகங்களைப் பெரிதும் வெறுப்பவர் என்று மோடியைக் கூறலாம். அவசரகால நிலையை கொணர்ந்து, செய்தி ஊடக சுதந்திரத்தைப் பறித்த இந்திரா காந்திகூட, செய்தி ஊடகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பேட்டி அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், பிரதமரான காலம்தொட்டு இதுநாள் வரையில் மோடி, செய்தி ஊடக சந்திப்பை நிகழ்த்தவே இல்லை.

இன்றும், ஒருசில செய்தி ஊடகங்களே ரபேல் விவகாரத்தை நேர்மையுடன் மக்களிடம் கொண்டுசெல்கின்றன. ஆனால், போபார்ஸ் குற்றச்சாட்டு மற்றும் அம்பானியுடனான ராஜீவ் காந்தி அரசின் உறவுகுறித்து, அன்று அச்சு ஊடகங்கள் நிறையவே மக்களிடம் பெரிதும் விழிப்புணர்வை உண்டாக்கின. பொதுவாக, இந்தியாவில் ஒருவிவகாரம் சூடுபிடிக்கவேண்டுமென்றால் அது, நடுத்தர மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படவேண்டும். அலைக்கற்றை விவகாரம், லோக்பால் மசோதா குறித்த அண்ணா ஹசாரே போராட்டம், அவசர நிலைப் பிரகடனம், போபர்ஸ், நிர்பயா விவகாரம் போன்ற அனைத்துமே, நடுத்தர மக்களிடம் அவர்களுக்குப் புரியும் மொழியில், முறையாக கொண்டுசெல்லப்பட்டமையே அவற்றின் வெற்றிக்குக் காரணம். காந்தியத்தின் அகிம்சை, ஒத்துழையாமை ஆகியவையும் நடுத்தர வர்க்கத்தின் ஒத்துழைப்பைப் பெறாமல் போயிருந்தால் வெற்றியை ஈட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

இன்றைய நவீன யுகத்தில், ஒரு விவகாரம் ஊதிப் பெருக்கப்படுவதும், ஊற்றி அணைக்கப்படுவதும், நடுத்தர மக்களிடம் ஆழமாகச் சென்று சேர்ந்திருக்கும் தொலைக்காட்சி ஊடகத்தின் துணையின்றி, சாத்தியமில்லை. செய்திப் பரவலில் சமூக ஊடகங்கள் முன்னணியில் இருந்தாலும்கூட, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களே மக்களின் மீதான கருத்துருவாகத்தில் இன்றும் பெரும்பங்கு வகிக்கின்றன. ரபேல் விவகாரம் போதியஅளவில் அடித்தட்டு நடுத்தர மக்களைச் சென்றுசேராமல் இருப்பதற்கு, மோடி ஆட்சியின்மீதான சில ஊடகங்களின் ‘கள்ள’ மௌனமே காரணம்.

ரபேலின் தலைவிதி
தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, ரபேல் ஊழலைப் பெரிய அளவில் மக்களிடம் எடுத்துச் செல்வதன்மூலம் 2014இல் ஆரம்பித்தத் தோல்விப் பயணத்திற்குத் தடைபோட முயற்சிக்கிறது. பாஜக ஆட்சியின்மீது ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, மாட்டிறைச்சி விவகாரம்போன்ற பல்வேறு விவகாரங்களில் மக்கள் அதிருப்தியாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளின்மீது போதிய நம்பிக்கையின்மை காரணமாகவோ அல்லது மோடியின்மீது மீதமிருக்கும் நம்பிக்கையின் காரணமாகவோ, பாஜகவிற்கு இன்னும்கூடத் தோல்வியின் தரிசனத்தைக் காட்டாமல் காத்திருக்க வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ரபேல் விவகாரத்தை மோடியின் ‘போபர்ஸ்’ ஆகவும், தனக்குள்ள கடைசி வாய்ப்பாகவும் காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. ரபேல் விவகாரம் மட்டுமல்லாமல், வரப்போகும் பொதுத் தேர்தலுக்குவேண்டிய கூட்டாளிகளைத் தன்வசப்படுத்தும் இறுதி முயற்சியாகவும் எண்ணி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து வரிந்துகட்டிக்கொண்டு போராடுகிறது. காங்கிரசின் பிரச்சாரம் எடுப்பட்டதா அல்லது மக்களின் மத்தியில் மோடிக்கு இருந்த கவர்ச்சி குறையாமல் இன்னும் இருக்கிறதா என்பதை, வரப்போகும் முடிவுகளே உணர்த்தும். மேலும், ரபேலின் தலைவிதி என்னவென்பதும் இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ