சபரிமலை சர்ச்சை: கேரளாவில் ஆட்சியை கவிழ்க்க சதி?

0 22

 

சபரிமலை பிரச்னையில் மக்கள் உணர்வுகளைத் தூண்டி, இடதுசாரி முன்னணி ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சதிசெய்வதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இரகசிய உடன்பாடு இருப்பதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாமென உச்ச நீதிமன்றம் அநுமதி அளித்தது. இதனையடுத்து, ஐயப்பன் கோவில்நடை திறந்துள்ள நிலையில் பெண்கள் சிலர் கோவிலுக்குள் நுழைய முயன்றுவருகின்றனர். எனினும், பக்தர்கள் தரப்பில் இதற்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது, பலர் பெண்கள் நுழைவை எதிர்த்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

தொடரும் போராட்டத்தால் சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சபரிமலை பிரச்னையைப் பயன்படுத்தி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ், பாஜக ஆகியவை சதிசெய்வதாகக் கேரள மாநில மார்க்சிஸ் கட்சித் தலைவரும், இடதுசாரி முன்னணி ஒருங்கிணைப்பாளருமான விஜயராகவன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் இடதுசாரி முன்னணியின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயராகவன், இந்த பிரச்னையில் மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகத் தெரிவித்தார். காங்கிரஸ், பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சபரிமலையிலும் மாநிலத்தின் பல இடங்களிலும் பாஜக பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்திவருகிறது. தலைநகரை நோக்கிய பேரணியையும் அக்கட்சி நடத்தியுள்ளது.
மாநிலத்தின் பல இடங்களில் போராட்டம் தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில், இடதுசாரி முன்னணி மாநிலம் முழுவதும் பதில் பேரணிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. முதல் பேரணி நடைபெற்ற நிலையில் 24ஆம் தேதி கொல்லத்தில் அடுத்த பேரணி நடைபெறவுள்ளது. மற்ற இடங்களிலும் இத்தகைய பேரணிகளி நடாத்தி, தனது நிலைப்பாட்டை இடதுசாரி முன்னணி விளக்கவுள்ளது.

சபரிமலை பிரச்னையில் மாநில அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற முயன்றுவருவதாகவும், இது அரசின் கடமை என்றும் விஜயராகவன் தெரிவித்தார். மாநில முதல்வர் பினராயி விஜயனும், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யமாட்டாது எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசை மாநில அரசு கேட்டுக்கொண்டால் இது சாத்தியமாகும் என மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ