தமிழக அரசியல்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கத்துக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

0 52

தமிழக அரசியல்:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கத்துக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தினேஷ்

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதினெட்டு பேரின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.

வழக்கின் பின்னணி
முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றக் கோரியும் அதிமுகவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி, அன்றைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துக் கடிதம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரன், அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த உறுப்பினர்கள்மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். பின்னர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கயன், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து முதல்வர் அணியில் மீண்டும் ஐக்கியமானார்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதி முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம்செய்து, அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்தார். பதினெட்டு உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களில் சிலர், தங்களின்மீதான சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி, மறு உத்தரவு வரும் வரையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, நீதிபதி ரவிச்சந்திர பாபுவின்முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, அரசியல் சாசன விவகாரங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் ‘டிவிஷன் பெஞ்சு’க்கு மாற்றப்பட்டது.

டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கை அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் விசாரித்து, ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். எவரும் எதிர்பார்க்காத வகையில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்த காரணத்தால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி உச்ச நீதிமன்றமே விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்கவேண்டுமென்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களில் தங்கத் தமிழ்ச்செல்வன் நீங்கலாக மற்றையவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகுதி நீக்க வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் எனவும், முன்னதாக இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி விமலாவுக்கு பதிலாக சத்யநாராயணன் விசாரிப்பார் எனவும் அறிவித்தது. இதனையடுத்து வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும் நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து முடித்த நிலையில், இன்று காலை தனது இறுதித் தீர்ப்பை வழங்கினார். தகுதி நீக்கம் செல்லும் என்று அவர் தீர்ப்பளித்தார்.

இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் தன்முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே தான் தீர்ப்பளித்திருப்பதாகவும், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அமர்வு அளித்த தீர்ப்பைத் தான் கருத்தில் கொள்ளவில்லை எனவும் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், சபாநாயகரின் அதிகாரங்கள் தொடர்பான வழக்கு உச்ச நிதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கிய சபாநாயகரின் உரிமையில் தன்னால் தலையிட முடியாது எனவும் தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏமாற்றமும் மகிழ்ச்சியும்
முன்னதாக, தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வருமென நம்பியிருந்த தினகரன் தரப்பினருக்கு இந்தத் தீர்ப்பு மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்யநாராயணின் தீர்ப்பு குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய ரி. ரி. வி. தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லையென்றும், காலியாக உள்ள தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டுமென்பதே தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே தகுதி நீக்க வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கின் தீர்ப்பு தங்களுக்குப் பாதகமாக வந்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று பதற்றத்துடன் இருந்த ஆளும் அதிமுக தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உற்சாகத்தையும் நிம்மதியையும அளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக் குறித்து செய்தி ஊடகங்களில் பேசிய முதல்வர் பழனிசாமி, இறைவன் அருளால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்றும், இடைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

பிற கட்சிகள்
தகுதி நீக்க வழக்கு குறித்துத் கருத்துத் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தீர்ப்புக்காக திமுக காதிருக்கவில்லை எனவும், இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதனைச் சந்திக்க திமுக தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தெளிவு பிறந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாநில பாஜக தலைவர் தமிழிசை, இடைத் தேர்தலைத் தாங்கள் சந்திக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். வழக்கம்போலவே, பாஜகவின் மாநில தலைமைக்கு முரணாகக் கருத்து வெளியிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஊழல் மிகுந்துள்ள தமிழக அரசியலில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சசிகலாவும் தினாகரனும் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றும், இடைத்தேர்தல் நடந்தால் தினகரன் தரப்பு வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளார்.

வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போகுமா அல்லது இடைத்தேர்தல் நடக்குமா என்பதே இப்போதைய கேள்வி. அப்படித் தேர்தல் நடந்தால், அது விரைவில் நடத்தப்படுமா அல்லது மக்களவைத் தேர்தலுடன் இணைத்து, அடுத்த ஆண்டின் கோடையில் நடத்தப்படுமா என்பது இன்னொரு கேள்வி. ஏற்கனவே காலியாகவுள்ள இரண்டு தொகுதிகளுடன் இந்தத் தொகுதிகளும் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் எத்தனை காலம் இருக்கும் என்ற அடிப்படையில் பார்த்தால், விரைவில் தேர்தல் நடத்துவதே சரியானது. மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் அது பல விதங்களில் அமையும். ஆனால், அத்தகையதொரு முன்னோட்டத்தை மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக விரும்புமா என்பதைப் பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.
*

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ