ரோஹித் ஷர்மா: துடுப்பாட்டத்தில் ஒரு மாய வீரர்!

0 46

தினேஷ்

இன்றைய தினத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகின் சிறந்த இரு துடுப்பாட்டக்காரர்கள் என்று சந்தேகமே இல்லாமல் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய இருவரையும் சொல்லலாம். கோலி, ஒருநாள் டெஸ்ட், இருபது ஓவர் போட்டிகள் என்று எல்லா வகையான ஆட்டத்திலும் தனி ஒருவனாக ஜொலிக்க, ரோஹித் சத்தமே இல்லாமல் குறைந்த ஓவர் போட்டிகளில் கோலிக்கு நிகராக முன்னேறிவருகிறார்.
கோலிக்கு அருகில் இருப்பதனாலோ என்னவோ ரோஹித்தின் சாதனைகளை அவ்வளவாக நாம் கொண்டாடுவது இல்லை. 2013இல் துவக்க ஆட்டக்காரராக மாறியதிலிருந்து அவரது ஓட்ட குவிப்புகள் எவருக்கும் மலைப்பை உண்டாக்கக்கூடியது. இந்திய அணி பாரம்பரியமாகவே நல்ல துவக்க ஆட்டக்காரர்களை உருவாக்குவதற்குப் பெயர்போனது. ஒருநாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக விளையாடுவதற்கு ஒருவர் ஆடுகளத்தின் ‘ஸ்கொயர்’ பகுதிகளில் வலுவானவராக இருப்பது அவசியம். புதிய பந்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை ‘பவுண்டரி’யாக மாற்றுவதற்கான திறமை உள்ளவராக இருக்கவேண்டும். ஓர் இன்னிங்ஸை கட்டமைத்து ஆடக் கூடியவராக இருக்கவேண்டும். உலகில் இன்றுள்ள துவக்க வீரர்களில் இந்த தகுதிகளின் அடிப்படையில் ரோஹித்துக்கு நிகர் எவருமில்லை என்றே கூறலாம்.
வீரேந்திர சேவாக், கவுதம் காம்பிர் போன்றவர்கள் துவக்க வீரர்களாக இந்திய அணிக்கு நிறைய சேவை செய்திருந்தாலும், ‘இன்னிங்ஸ்’ கட்டமைப்பு என்ற விஷயத்தில் அவர்கள் ரோஹித் அளவிற்குத் திறமையாவர்கள் என்று கூறமுடியாது. முன்பு, சச்சின் இதை அநாயசமாக நிகழ்த்திக் காட்டினார்.

சச்சின் வாரிசு?
இன்று, சச்சினுடன் ஒப்பிடக்கூடியவராக அவரது சாதனைகளை முறியடிக்கக்கூடியவராக கோலி மட்டுமே கிரிக்கெட் உலகில் தென்படுகிறார். ஆனால், திறமையின் அடிப்படையில் சச்சினின் உண்மையான வாரிசு என ரோஹித்தையே கூறமுடியும். இங்கு திறமை என்பதை குவிக்கும் ஓட்டங்களையோ, புள்ளியியல் சாதனைகளோ வைத்துக் கூறவில்லை. ஆடுகளத்தில் துடுப்பை வைத்துக்கொண்டு ரோஹித் நிகழ்த்தும் சாகசங்கள் ஆரம்பகால சச்சினை நினைவூட்டுகின்றன.
கோலிக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோஹித் அறிமுகமானாலும், கோலியைப்போல எடுத்தவுடனே ரோஹித்துக்குப் பெரிய அளவிலான வெற்றிகள் கிட்டவில்லை. முதல் ஐந்து வருடங்கள் அணிக்கு வருவதும் போவதுமாக இருந்த ரோஹித், நடுக்கள வீராகத்தான் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார். இந்த காலங்களில் பெரிய அளவில் ஓட்டங்களைக் குவிகாவிட்டாலும், ரோஹித்தின் திறமையின்மீது எவருக்கும் ஓரு சிறு சந்தேகம்கூட எழவில்லை. சச்சினுக்குப் பிறகு இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷமாகவே ரோஹித் உலக அளவில் மதிப்பிடப்பட்டார்.
2008இல் லட்சுமணன் காயமடைந்தபோது, அவருக்கு மாற்றாக டெஸ்ட் போட்டிகளில் கொண்டுவரப்பட்டவர் ரோஹித். அந்தக் காலத்தில் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கே அறிமுகம் ஆகியிருக்கவில்லை. இன்று,கோலி டெஸ்ட் அணியின் கப்டனாக, சச்சின் விளையாடிய நான்காவது இடத்தில் விளையாடுகிறார். ஆனால், ரோஹித் டெஸ்ட் அணியில் நிரந்தர இடமில்லாமல் தவித்துவருகிறார்.

கோலியும் ரோஹித்தும்
அவுஸ்திரேலிய முன்னாள் கப்டன் இயான் சாப்பால், ரோஹித்துக்கும் கோலிக்கும் உள்ள ஒரு சிக்கல் குறித்து ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார். கோலியின் நிழலில் ரோஹித் விளையாடும்போது, அவரது தன்ன்னம்பிக்கை சிறிது குறைந்துவிடுகிறது என்கிறார் சாப்பல். குறிப்பாக, இந்த பிரச்னை டெஸ்ட் ஆட்டங்களில்தான் வெளிப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் இருவரும் களத்தில் இருக்கும்போது, பெரும்பாலும் ரோஹித்தான் ஆட்டத்தைக் கையில் வைத்திருப்பார். ரோஹித் களத்தில் நிற்கும் வரையில் கோலி வெறும் பக்கவாத்தியம்தான்.
ஆனால், டெஸ்ட் போட்டியில் ரோஹித் நடுக்களத்தில் ஆடுவதால், அவர் களம் காணும் முன்பே, நான்காம் நிலையில் விளையாடும் கோலி நிறைய ™ட்டங்கள் குவித்துவிடுவதால் அவரது நிழலில் விளையாடவேண்டிய நிர்பந்தம் ரோஹித்துக்கு உண்டாகிறது. இது, ரோஹித்தை உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்று கூறிய சாப்பல், அதற்கு ஒரு தீர்வையும் முன்வைத்தார். அது, கோலிக்கு முன்பாக அதாவது, மூன்றாம் நிலையில் ரோஹித்தை இறக்கினால் அவரால் நம்பிக்கையுடன் ஆடமுடியும் என்பது. இதை உணர்ந்ததானாலோ என்னவோ, 2015இல் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தை மூன்றாம் நிலையில் கோலி இறக்கிப் பார்த்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக ரோஹித்தால் எதிர்பார்த்த ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் முன் வரிசையில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் தன்னால் ‘முச்சதம்’கூட எடுக்கமுடியும் என்று ரோஹித் அடிக்கடி கூறுவதுடன் இதனை இணைத்துப் பார்க்கவேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரோஹித்தால் சோபிக்க முடியாவிட்டாலும், ஒரு நாள் போட்டிகளில் அவர் ஒரு சாம்பியன். குறிப்பாக, 2013இல் துவக்க வீரராக ஆடத் துவங்கியதிலிருந்து ஓட்ட குவிப்பில் ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். ஆரம்ப நாள்களில் பெரிய தொடக்கம் கிடைத்தாலும், அதைச் ‘சத’மாக மாற்றமுடியாமல் வீணடித்துவந்த ரோஹித் இன்று, அதிகமுறை 150 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் கடந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரோஹித்துக்கு சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தாலும்கூட, குறிப்பிட்ட நேரம் வரையில் களத்தில் நின்றுவிட்டால் யாராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியாது.
கடந்த ஐந்து வருடங்களின் சிறந்த ஒருநாள் துவக்க வீரரென்று எவ்வித ஐயமும் இன்றி ரோஹித்தைக் கூறலாம். முதலிடத்தில் கோலி இருந்தாலும், அவர் மூன்றாம் வரிசையில் விளையாடுபவர். துவக்க வீரராக விளையாடி கோலிக்கு இணையாக இவ்வளவு ஓட்டங்கள் குவித்தது என்பது சாதாரண விஷயமல்ல. கோலி போன்ற இரும்பு மனிதராக ரோஹித் இல்லாவிட்டாலும்கூட, இரட்டை ‘சதம்’ எடுத்த பி;னனரும் அவரால் எவ்வித சோர்வுமின்றி களத்தடுப்பு செய்ய இயலும்.

சோம்பலின் மிடுக்கு
வெளிப்பார்வைக்குச் சற்றே மேம்போக்கானவர் என்ற பிம்பம் ரோஹித்தின்மேல் இருந்தாலும், அவரது துடுப்பாட்டத்தின் தனித்துவத்துக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதெல்லாம் ரோஹித்தால் ஓர் அதிசாகசம் அநாயசமாக களத்தில் நிகழ்த்தப்படுகிறதோ, அப்போது அந்த மேம்போக்கை வேறு வார்த்தைகளில் கூறுகிறார்கள் – ‘சோம்பலின் மிடுக்கு’ – lazy elegance! உலகின் ஒருசிலருக்குத்தான் இந்த ஒரு வரம் கைகூடி வரும். சமீபகாலத்து வீரர்களில் மார்க் வா, கார்ல் ஹுப்பர் ஆகியோரை உதாரணமாக கூறலாம். சற்றே பின்னோக்கிப் பார்த்தல், இங்கிலாந்தின் டேவிட் கோவர் தெரிகிறார். இவர்கள் அனைவருமே தங்களது ஆட்ட வாழ்வு முழுக்கவும் ரசிகர்களால் எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்பட்டார்களோ, அதே அளவுக்கு விமர்சிக்கப்பட்டார்கள். கணநேரம் தப்பினாலும் அவர்களின் மேதமை பெரும் அபத்தமாகிவிடும். இவர்கள் எவ்வளவு அற்புதங்கள் புரிந்தாலும், ரசிகர்களும் விமர்சகர்களும் அதை நன்றாக ரசித்துவிட்டு வழக்கம்போல ‘இவருக்கு இருக்கும் திறமைக்கு இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம்’ என்றுதான் குறைகூறுவார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு ரோஹித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் அரங்கில் அவருக்கான கடைசி வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. ஒருநாள் ஆட்டங்களில் காட்டும் திறமையை 5 நாள் ஆட்டங்களிலும் அவரால் தொடர முடிந்தால், கிரிக்கெட்டின் மகத்தான சாதனையாளர்களுள் ஒருவராக அவர் அடையாளம் காணப்படுவார்.
பார்க்கலாம், அவுஸ்திரேலியாவில் ரோஹித் என்ன செய்யப்போகிறார்!

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ