இந்தியாவின் இரும்பு மனிதர்கள்

0 68

தேவிபாரதி

ஜவகர்லால் நேரு தலைமையிலான சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவரும், இந்திய தேசிய காங்கிரசின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான சர்தார் வல்லபபாய் பட்டேலின் உருவச் சிலையைத் திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததன்மூலம் ஒரு புதிய அடையாள அரசியல் ஒன்றுக்கு அடிகோலியிருக்கிறார் பிரதமர் மோடி.

இரும்பு மனிதர் என அழைக்கப்படும் வல்லபாய் பட்டேலின் அந்தச் சிலை, உலகிலேயே மிக உயரமான சிலை. 597அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை நிறுவியதன்மூலம், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாக பெருமிதம் அடைந்திருக்கிறார் பிரதமர். மிகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் ‘லிபர்ட்டி’ சிலை, மேற்கத்திய நாடுகளில் அமைந்துள்ள இயேசுவின் சிலைகள், மியான்மர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நிறுவப்பட்டுள்ள உயரமான புத்தர் சிலைகளின் உயரத்தை, நர்மதா நதியோரம் நிறுவப்பட்டுள்ள பட்டேலின் இந்தச் சிலை விஞ்சியுள்ளது.

குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயயமாக, அவரது ஆதரவாளர்களாலும் காங்கிரஸ்காரர்களாலும் ‘இரும்புப் பெண்’ என அழைக்கப்படும் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளான அக்டோபர் 31ஆம் தேதியன்று, பட்டேலின் உயரமான அந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளைதைக் குறிப்பிடலாம்.

ஒரு வகையில், இது தற்செயலானது. அக்டோபர் 31ஆம் தேதி பட்டேலின் பிறந்தநாள். இந்திய வரலாற்றின் முக்கியமானதொரு கட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட பட்டேலின் பிறந்தநாளும் அதற்குப் பிறகு ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரலாற்றின் மற்றொரு முக்கியமான கட்டத்தில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இரும்பு பெண் எனப் பெயர்பெற்ற இந்திரா காந்தியின் நினைவுநாளும் ஒரே தேதியில் வருவதை, ஒருவரது துக்க நாளை அநுட்டிக்கும் அதே நாளில், மற்றொருவரின் பெருமிதத்தைப் பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கொண்டாட்ட நிகழ்வு அரங்கேற்றியதை வெறும் தற்செயல் நிகழ்வாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை.

பட்டேலின் ஏறத்தாழ 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான அந்தச் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது மோடி குஜராத்தின் முதல்வர். 2002 கோத்ரா படுகொலைகளுக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தின்போது ஆற்றிய பங்களிப்புகளுக்காக, மோடி அவரது ஆதரவாளர்களால் ‘இரும்பு மனிதர்’ என அழைக்கப்பட்டார். அந்த இரும்பு மனிதர் குஜராத்தின் முதல்வராகப் பதவி வகித்துவந்த மூன்றாவது முறை அது.

இந்திய வரலாற்றின் மற்றொரு முக்கியமான தருணம் அது. அப்போதுதான் தன்னை இரும்பு மனிதர் என அடையாளம் கண்டுகொண்டார் மோடி. அதை நிறுவ முற்பட்டார். அவரது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அதே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் துணைப் பிரதமர் எல். கே. அத்வானியை இரும்பு மனிதர் என அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே அழைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

அயோத்தியில் இருந்த பழமையான மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் இராமர் கோவில் கட்டுவதற்கான அரசியலை முன்னெடுத்திருந்த அத்வானி, பல ரத யாத்திரைகளை நடத்தினார், கோவிலை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொருவரும் ஒரு செங்கல்லை வழங்குமாறு நாடு முழுவதிலுமுள்ள இந்துக்களைக் கேட்டுக்கொண்டார், தனது ரதத்தில் வில், அம்பு ஏந்திய கோலத்தில், மாவீரராக அத்வானி நிற்கும் ஓவியங்கள் அப்போது நாடெங்கிலும் பிரபலப்படுத்தப்பட்டன. அந்த ஒரே படத்தின் மூலம் அத்வானி மாவீரராக உயர்ந்தார்.
அதன் பலன்கள் அவருக்கும் அவரது கட்சிக்கும் கிடைத்தன. அடுத்து வந்த தேர்தல்களில் ஆட்சியும் கைப்பற்றப்பட்டது. மென்மையான அணுகுமுறை கொண்டவராகக் கருதப்பட்ட வாஜ்பாய் பிரதமர்; மாவீரர் அத்வானி துணைப் பிரதமர். இந்த மாவீரர், வரலாற்றை உருவாக்க முற்பட்டார். பட்டேலின் 1947-1950இன் வரலாற்றைப்போல, இந்திராவின் 1975-1977இன் அவசரகால நிலைக் காலத்திய வரலாற்றைப்போல, வன்முறையால் வழிநடத்தப்படும் வரலாற்றை உருவாக்க முற்பட்டார். அதன் முதல் கட்டத்தை, அயோத்தியின் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதன்மூலம் 1992இல் நிறைவேற்றிக் காட்டினார்; இரும்பு மனிதர் எனப் பெயரெடுத்தார் அத்வானி.

வரலாற்றை உருவாக்குவதற்கு, இரும்பு மனிதர் என்ற அந்தப் பட்டத்தைப் பெறுவதற்கு அத்வானியும் மோடியும் ஒரே வழியைத்தான் பின்பற்றினார்கள். அவர்கள் தங்கள் பிதாமகராக வரித்துக்கொண்டிருக்கும் குஜராத்தியான சர்தார் வல்லபாய் பட்டேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த சுயேச்சையான அரசுகளின் இறையாண்மையைப் பறித்து, அவற்றை இந்திய யூனியனுடன் இணைத்தார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, காலனித்துவ அரசின் நுகத்தடியிலிருந்து விடுவிக்கப்பட்ட சமஸ்தானங்களையும் நிஜாம்களையும் மிரட்டினார். ஹைதராபாத் நிஜாம் அரசின்மீது போர் தொடுத்தார். பல் தேசிய இனம்கொண்ட ஒரு சமூகத்தை அவற்றின் தனித்தன்மைகளையும் வரலாற்று ரீதியில் அவர்கள் பெற்றிருந்த உரிமைகளையும் பொருட்படுத்தாமல் நசுக்கினார் பட்டேல். அதன் பலன்களைத்தான் அவருக்குப் பின்னால் வந்த இந்திரா அநுபவித்தார். நாட்டின் வெவ்வேறு தேசிய இனங்களின் இன, மொழி, பண்பாடு, அரசியல் சார்ந்த அதிருப்திகளை மூர்க்கமாகக் கையாண்டதன் விளைவாக, படுகொலை செய்யப்பட்டார் அந்த இரும்புப் பெண்மணி.
அக்டோபர் 31ஆம் தேதி அவரது நினைவுநாளன்று பட்டேலின் சிலை திறக்கப்பட்டது.

தனது மூர்க்கமான செயல்பாடுகளின் மூலமாக காந்தியின் விமர்சனத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளான காங்கிரஸ்காரர் பட்டேல் உருவாக்கிய அந்த வரலாற்றை மீட்டெடுக்க அத்வானியும் மோடியும் முயன்றார்கள். இருவருக்குமே இரும்பு மனிதர் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசை. மோடி அத்வானியைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றுவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வரலாறு அவருக்கு குஜராத்தின் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள உதவியது. பிறகு, நாட்டின் பிரதமரானார் மோடி. கடந்த சில ஆண்டுகளில் அவரது தலைமையிலான பாஜக அடைந்துவரும் பின்னடைவுகளைச் சரிக்கட்ட, மோடி தற்போது பட்டேலின் இரும்பு மனிதர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறார். இந்த இரும்பு மனிதர், சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்டோரையும் ஒடுக்குவதன் மூலம், அவர்களுக்கான இடத்தை முற்றாக அழிப்பதன் மூலம், ஒரு புதிய இந்தியாவை உருவாக்க விரும்புகிறார்; புதிய வரலாறு ஒன்றைப் படைக்க விரும்புகிறார். பிதாமகர் பட்டேலிடமிருந்தும், ஆச்சாரியார் அத்வானியிடமிருந்தும் தன்னிடம் கைமாற்றிக்கொண்ட ‘இரும்பு மனிதர்’ என்னும் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார். அதன் பலன்களை, குறைந்த பட்சம் வரும் மக்களவைத் தேர்தலிலாவது பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார் பிரதமர்.
அந்த விருப்பத்தின் குறியீடாக எழுந்து நிற்கிறது உலகிலேயே உயரமான அந்தச் சிலை.
*

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ