மோடியின் ரூபா நோட்டு ஒழிப்பு நாட்டுக்கு நன்மை தந்ததா?

0 27

குமரன்

துல்லியமான தாக்குதல் என்ற பெயரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொணர்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடந்துள்ள நிலையில், அதனால் விளைந்த சாதகம் என்னவென்று பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடியைக் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அதிரடியாக நள்ளிரவில் அமல்படுத்தினார். நாட்டில் பதினைந்து லட்சம் கோடி மதிப்பில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, இந்தியா முழுவதும் பல்வேறு தரப்புகளை சேர்ந்த மக்களும் சொல்லவொணா துன்பங்கள் பலவற்றுக்கு ஆளானார்கள். பிரதமர் மோடியால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் அரசின் இத் திடீர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

தொடக்கத்தில் இது கறுப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், இது தயவு தாட்சண்யம் இன்றி, அனைத்துத் தரப்பு மக்களையும், துறைகளையும் தாக்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். பணமதிப்பழிப்பு குறித்து நவம்பர் 2016இல் பிரதமர் உரையில் அறிவிக்கப்பட்ட காரணங்களுக்கும், பின்னர் நாள்கள் செல்லச்செல்ல பாஜக தலைவர்கள் பொதுவெளியில்வைத்த காரணங்களுக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உண்டு.

முன்னதாக, கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் கள்ளப் பண ஒழிப்பு மட்டுமே காரணமாக அரசால் கூறப்பட்டது. பிறகு, ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும் ஒரு நோக்கமாக இணைத்துக் கூறப்பட்டது. பின்னர், தரவுகள் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்த நடவடிக்கையானது குறுகிய காலத்தில் துன்பத்தைக் கொடுத்தாலும், நீண்ட காலத்தில் பலன் கொடுக்கும் என்று பதில் சொல்லப்பட்டது. ஆனால், இன்றுவரையில் மத்திய அரசோ ரிசர்வ் வங்கியோ பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்மூலமாக எந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபா தாள்களின் பெரும்பகுதி வங்கிக்கு வந்துவிட்டது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டோம் என்று கூக்குரலிட்ட மத்திய அரசின் வாதமானது அடிபட்டுப்போய்விட்டது.

இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் நாட்டுக்கு விளைந்த பலனென்னவென்றும், கறுப்புப் பணம் ஒழிப்பு குறித்த புள்ளியியல் விவரங்களை வெளியிடக்கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்திவருகின்றன.

இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் இந் நடவடிக்கையானது பொருளாதாரத்தில் முன்யோசனையின்றி, மோசமான விளைவுகளை உண்டாக்கும் விபரீத சாகசமுடிவுகள் தேசத்தை நீண்டகாலத்துக்கு எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் பொருளாதார கொள்கைகளை அரசு வகுக்கும்போது மிகுந்த கவனமும் சிந்தனையும் வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் கூறியுள்ளார். மேலும், பணமதிப்பழிப்புக்குப்பின் நாட்டின் பொருளாதார வளர்சிச்சியிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறிய மன்மோகன் சிங், நாட்டின் தூண்களாக இருந்துவந்த சிறு, குறு தொழில்கள், பணமதிப்பழிப்பு அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ