பொதுத் தேர்தல்மூலம் மக்கள் தீர்ப்புக்கு மஹிந்த சபையில் கோரிக்கை

0 25

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு 225 எம். பிக்களிடையே தீர்வைக்காண முயலாது, நாட்டின் 150 லட்சம் வாக்காளர்களிடம் அதனைக் கையளிக்கும்படியான தனது யோசனையை முன்வைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், இறைமை பாராளுமன்றத்திடமன்றி மக்களிடமே இருப்பதாக தெரிவித்த அவர், மக்கள் தமது விருப்பத்திற்கு அமைய புதிய அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்வதற்கு வாய்ப்பாக நியாயமான தேர்தலொன்றை நடத்துவதில் இணைந்து உதகுமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்களிடமும் தாம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார். தனது கட்சிக்காகவும், மேலைத்தேய நண்பர்களுக்காகவுமே சபாநாயகர் செயற்படுவதாக தெரிவித்த அவர், நாடு புதைகுழியில் தள்ளப்படும் நிலையிலே ஜனாதிபதி தன்னை ஆட்சியமைக்க அழைத்ததாகவும், ஐ.தே.க அரசாங்கம் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் நீடித்திருந்தால், நாட்டுக்கு என்ன நடந்திருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்பையடுத்து, பிரதமர் விசேட அறிக்கையொன்றை சபையில் வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது:

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இத்தகைய கரிய நாளொன்றைக் காணவில்லை. எம். பியாக, அமைச்சராக, பிரதமராக மட்டுமன்றி, நாட்டின் ஜனாதிபதியாகவும் நான் செயல்பட்டிருக்கிறேன். அதனால், பிரதமரா இல்லையா என்பது எனக்கு பிரச்னை அல்ல; மஹிந்த ராஜபக்ஷவாக நான் உரையாற்றுகிறேன்.

ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை கலைத்து, அடுத்த தேர்தல்வரை காபந்து அரசாங்கமொன்றை அமைத்தற்கான காரணத்தை ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திகதி வரையில் மக்கள் பெரும் நெருக்கடியில் இருந்தனர். எரிபொருள் விலைச் சூத்திரம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கைச்செலவு உயர்வு, வரிச் சுமை அதிகரிப்பு, மத்திய வங்கிக் கொள்ளையினால் வட்டி வீதம் அதிகரிப்பு, லாபமீட்டும் அரச நிறுவனங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்கான முயற்சி, முதலீடுகளுக்கு பெருமளவு லஞ்சம் கோரல் என்பவற்றால் அரசுகுறித்து மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டது.
ஐ.தே.கவின் பொருளாதார முகாமைத்துவ சபையை ஜனாதிபதி கலைத்து, நாட்டுக்கு ஏற்பட்டுவரும் அழிவைக் குறைக்க முயன்றார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் அமைச்சரவையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இந்த சமயத்தில் பொலிஸ் பிரிவில் உள்ள சிலருடன் இணைந்து, ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலைசெய்ய ஐ.தே.கவில் சிலர் சதிசெய்தார்கள். இந்த நிலையிலே அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை (ஐ.ம.சுமு) விலக்கிக்கொள்ள ஜனாதிபதி முடிவுசெய்தார்.
ஐ.ம.சு.மு விலகுவதுடன் கூட்டரசாங்கம் கலைக்கப்பட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி என்னைப் பிரதமர் பதவியை ஏற்று, ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் அழைப்பை நான் ஏற்றிருக்கலாம் அல்லது நிராகரித்திருக்கலாம். ஐ.தே.க சுமார் நான்கு வருடங்கள்வரை ஆட்சியில் இருந்ததால், இன்னும் ஒருவருடம்வரை ஜ.தே.கவுடனே ஆட்சிசெய்யுமாறு எனக்கு கூறியிருக்கலாம். ஆனால், நாங்களே நாட்டிலுள்ள பெரிய கட்சி. நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பைத் தடுப்பதற்காக நாட்டைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி எமக்கு அழைக்கையில், நாம் அதனை ஏற்றுக் கொண்டோம். ஐ.தே.க அரசாங்கம் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருந்தால் நாட்டுக்கு என்ன நடந்திருக்கும் என்ற பிரச்னை எனக்குமுன் இருந்தது. 2015 ஜனவரி மாதம் ஐ.தே.க அரசாங்கம் வெளிநாட்டு செலாவணி கடனாக 21 பில்லியன் அமெரிக்க டொலர்வரை பெற்றுள்ளது. எல்லையற்ற விதத்தில் கடன்பெற்றதே நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் அழிவாகும். பொதுத் தேர்தல் நடத்தும்வரை இடைக்கால அரசாங்கமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும் சிறு குழுவினரே அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர். நாடு புதைகுழியில் விழும் நிலையில், நாம் தொடர்ச்சியாக பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி வந்தோம்.
ஆனால், அரசாங்கம் தேர்தல் வரைபடத்தை மூடிவைத்திருந்தது. 2015 மார்ச் மாதம் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடாத்த மூன்று வருடங்கள் எடுத்தன. நீதிமன்றம் சென்று, தேர்தல் நடத்தாமலேயிருக்க முயன்றாலும், தேர்தல் ஆணைக்குழு தலைவர் பிரச்னையற்ற சபைகளுக்கு தேர்தல்நடத்த முயன்றதால், இறுதியில் அரசாங்கம் தேர்தலை நடாத்த நேரிட்டது. மூன்று மாகாண சபைகளின் காலம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துவிட்டது. கடந்த மாதம் வடக்கு உள்பட, மூன்று சபைகளின் காலம் நிறைவடைந்துள்ளது.

அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்குள்ள்ள அதிகாரத்தின் பிரகாரம் அவர் பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் நடத்துவதற்கு எதிராக ஐ.தே.க, ஜே.வி.பி உள்பட, பல கட்சிகள் உயர் நீதிமன்றம் சென்றன. இவர்களேதான் கடந்த வருடம் உள்ளூராட்சி தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்காக, வெட்கமின்றி தேர்தல் திருத்தச் சட்டத்தில் பின்கதவால்வந்து திருத்தம் செய்தார்கள். மக்களின் இறைமையை இவர்கள்தான் அன்றும் மீறினார்கள்.

பொதுத் தேர்தலினால் யாருடைய அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்று கேள்வி எழுப்பும் சுவரொட்டி ஒன்றைப் பாராளுமன்றம் வரும் வழியில் கண்டேன். இது முக்கியமான பிரச்னையாகும்.
எமது நாட்டில் 1947, 1951, 1956, 1960 ஆகிய ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட சகல பாராளுமன்றங்களுக்கும் முன்கூட்டி தேர்தல் நடத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு தமது வாக்குரிமையினூடாக தமக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தெரிவுசெய்ய இடமளிக்கப்பட்டது. இவ்வாறுதான், அன்று மக்களின் இறைமை பாதுகாக்கப்பட்டது. அன்றிருந்த அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியாது என்று உணர்ந்ததாலேயே நாட்டைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் பிரதமராக பதவியேற்றதும் நாடு பூராவும் புதிய எதிர்பார்ப்பு துளிர்விட்டது.

மேலைத்தேய தூதரகங்கள் மற்றும் தமது கட்சி என்பவற்றுடன் இணைந்து, அரசியலமைப்புக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் முரணாக, எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, குரல் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். சத்தத்தின்மூலம் யோசனை நிறைவேற்றமுடியாது. சபாநாயகரின் நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர், முன்னாள் பிரதமர்தான் பிரதமராகி விட்டதாக கூறி, சில முன்னாள் அமைச்சர்கள் தாம் முன்பிருந்த அமைச்சுகளுக்கு சென்றுள்ளனர். பிரதமரையும் அமைச்சர்களையும் ஜனாதிபதிதான் நியமிக்கிறார். இதுதொடர்பில் சபாநாயகருக்கோ பாராளுமன்றத்துக்கோ அதிகாரம் கிடையாது.
தற்பொழுது இரு தரப்பினருக்கிடையில் பாராளுமன்றத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை, 225 எம். பிகளிடையே தீர்வு காணமுயலாது, நாட்டிலுள்ள 150 இலட்சம் வாக்காளர்களுக்கு கையளிக்குமாறு நான் யோசனை முன்வைக்கிறேன். இதுதான் பாராளுமன்ற சம்பிரதாயமாகும். அரசியலமைப்பின் பிரகாரம் இறைமை இருப்பது பாராளுமன்றத்திடம் அல்ல, மக்களிடமேயாகும். பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டால், ஜே.வி.பி அதனை ஆதரிப்பதாக கூறியிருப்பது தொடர்பில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன என்பதை அது பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் என நம்புகிறேன்.
மக்கள் தமது விருப்பத்திற்கு அமைய புதிய அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்வதற்காக, நியாயமான தேர்தலொன்றை நடத்த என்னுடன் கைகோர்க்குமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்களிடமும் நான் கோருகிறேன்.

ஓய்வூதியம்குறித்து சிந்திக்காமல், தேர்தலுக்கு தயாராவோம். தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா கோரி நியாயமான போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர். நீங்கள் நடுநிலையான சபாநாயகராக செயல்படுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். பக்கசார்பான சபாநாயகரை நாம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எதிரணியினதும் ஆதரவுடனேயே சபாநாயகராக நியமிக்கப்பட்டீர்கள். ஆனால், உங்கள் கட்சிக்காகவும் மேலைத்தேய நண்பர்களுக்காகவுமே நீங்கள் செயல்படுகிறீர்கள்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ