‘கஜா’ புயல் நடவடிக்கை: அரசுக்கு நீதிமன்றம் நிர்ப்பந்தம்

0 45

மகேஷ்

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவந்த நிலையில், புயல் பாதிப்புள்ள பகுதிகளில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள், இதுவரையில்லாத அளவுக்கு பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்களுடன் சேர்ந்து ஆடு, மாடுகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளும் இறந்துள்ளன. புயலின் காரணமாக தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்டவைகளும் கடும் பாதிப்படைந்துள்ளன. துவக்கத்தில் புயலின் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக அரசு எடுத்துள்ளதாகப் பாராட்டிய எதிர்க்கட்சிகள், நாள்கள் செல்லச்செல்ல டெல்டா மாவட்டங்களில் முறையான நிவாரணப் பணிகளும் உணவுப் பொருள்களும் மக்களுக்கு வழங்கப்படாததைக் கண்டித்து அரசைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்படாதைக் கண்டித்து, அங்குள்ள மக்கள் புயல் பாதிப்புகளை மேற்பார்வையிட வந்த தமிழக அமைச்சர்களுக்குக் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்த முதல்வர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தாமல் திரும்பிவிட்டார். அரசின்மீது மக்களுக்கு இருக்கும் கோபம்தான் முதல்வர் திரும்பிப்போகக் காரணம் என்று கூறப்படும் நிலையில், மழை காரணமாகவே முதல்வரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. நேரடியாக மக்களை சந்திக்கத் திராணியிலாமல், விமானம் மூலமாக சென்று புயல் பாதிப்புகளை முதல்வர் பார்வையிடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக விட்டுள்ள அறிக்கையில், சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்றும், இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் நிர்தாட்சண்யமும் ஒரு மனிதருக்கு இருக்க முடியுமா என்று வேதனையும் அதிர்ச்சியுமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மழையில் நனைய மாட்டேன், தரையில் கால்வைக்க மாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்குக் கங்காணி வேலை பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட வெள்ளைக்காரத் துரையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து செய்தி ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது, எதிர்க்கட்சிகளுக்குப் பக்குவம் போதவில்லையென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மேற்பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வ,ர் கஜா புயல் பாதிப்புகளுக்காக நிவாரணம் பெறுவதற்காக பிரதமர் மோடியைத் தான் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார். மழையால் சேதமடைந்த மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சியினர் கூறுவதுபோல ஜீ பூம்பா என்றவுடன் மின் கம்பங்களை நட்டுவிட முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெரு மழை கொட்டியபோது, அங்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்யாமல், அங்கு எதிர்கட்சிகள் பக்குவத்துடன் நடந்துகொண்டாதாகவும், தமிழகத்தில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு அந்தப் பக்குவம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருமுருகன் என்பவர் கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கக்கோரி பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் கஜா புயலால் 45 பேர் பலியாகியுள்ளதாகவும், 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 2 லட்சம் மரங்களோடு சேர்ந்து, ஆயிரக்கணக்கான கால்நடைகள் மடிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், புயலால் மின் கம்பங்கள், சாலைகள் சேதமடைந்து, அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, புயலினால் பாதிப்படைந்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவித்து, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்கவேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, புயல் சேதங்களைச் சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் என்ன உதவியைத் தமிழக அரசு கோரியது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளை துரித கதியில் செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக புயல் பாதிப்பு நிகழ்ந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகள்மூலம் அனைவரும் உதவிடவேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சாதாரண குடிமக்கள் தொடங்கி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள்வரை அனைவரும் தமிழக அரசு எடுத்துவரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள்மூலம் உதவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் கஜா புயலினால் பாதுக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பவுள்ளார். முன்னதாக, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பாக 50 லட்ச ரூபாயும் நடிகர் விஜய் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நாலரை லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ருபாய் அளவிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ