யுத்தத்தைப்போல, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க இறுதி சந்தர்ப்பம் – மஹிந்த ராஜபக்ஷ

0 26

‘எவராலும் வெற்றிகொள்ளமுடியாத யுத்தத்தை, பொது மக்களின் பூரண ஆதரவு காரணமாகவே எம்மால் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது. பொது மக்கள் அன்று யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய அதே ஆதரவை இன்றும், இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு வழங்கும்படி பொது மக்களிடம் வேண்டுகிறேன். இதுதான் எமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு. நாம் இதில் தோல்வியடைந்தால், இந்த நாடு கிரேக்க நாட்டைப்போன்று மாறிவிடும்’ என்று, தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்கான காரணத்தையும் கோக்கத்தையும் விளக்குவதாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஷ இன்று மக்களுக்கு ஆற்றிய உரையில் தெவித்திருக்கிறார். அவரது உரை முழுமையாக:

குமார் – ராஜா

பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் 15ஆம் திகதி நான் ஆற்றிய உரையின்போது பொதுமக்களுக்கு தமக்கு விருப்பமான அரசாங்கமொன்றை தெரிவுசெய்யும் வாக்குரிமையை வழங்கும் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தேன். ஜே.வி.பி கட்சி அதற்கு இணக்கம் தெரிவித்தது. ஆனால், ஜக்கிய தேசிய கட்சி, பொதுத் தேர்தலைவிட, ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று தொடர்ந்தும் வலியுறுத்திவந்தது. பிரச்னை பாராளுமன்றத்தில் உள்ளது. ஏனெனில், இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை.

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களைப் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 96 ஆசனங்களைப் பெற்றது. வித்தியாசம் 10 ஆசனங்கள் மட்டுமே.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பாராளுமன்ற குழுவினருடன் ஏற்படுத்திக்கொண்ட ஓர்
ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பாராளுமன்ற குழுவினர் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்தைவிட்டு விலகிச் சென்றனர். அதன் பின்னர், பல ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இணைந்தனர். இன்று, பாராளுமன்றத்தில் கூடுதலான அங்கத்தவர்களின் ஆதரவைக்கொண்ட தலைவன் நான்மட்டுமே. 1994, 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களின்போது, அப்போது நாட்டை ஆட்சிசெய்த டி. பி. விஜயதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் பாராளுமன்றத்தில் கூடுதலான உறுப்பினர்களின் ஆதரவுகொண்ட குழுவினருக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தனர். அதனடிப்படையில், 1994ஆம் ஆண்டு பொஜன முன்னனி அரசாங்கமும், 2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும், 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அரசாங்கமும் நாட்டை ஆட்சிசெய்தன.

பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறும்வரை, ஓர் இடைக்கால அரசாங்கம் ஒன்றையே நாம் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஏற்படுத்தினோம். பொதுத்தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தபோதும், நீதிமன்றத்தால் தற்காலிக தடையுத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டுநடாத்தும் நோக்கம் எம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை. கூட்டு
எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர் என்பதை முழுநாடும் அறியும். அதற்கு காரணம், இது ஓர் இடைக்கால அரசாங்கம் என்பதே ஆகும். பிரதம மந்திரியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நாள்முதல், ஓர் உறுதியான அரசாங்கத்தை உருவாக்க, தேர்தல் ஒன்றுக்கு செல்வதே எமது முக்கிய நோக்கம் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்திவந்துள்ளேன். ஆனால், ஒரு தேர்தலுக்கு செல்லாமல், இயலுமான காலம்வரை நாட்டை ஆட்சி செய்யவேண்டும் என்பதே முன்னைய அரசாங்கத்தின்
நோக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவே தற்போதைய பிரச்னைக்கான காரணம்.

பொதுத்தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களுக்கும் குறைவான காலம் இருக்கும்போது, ஏன் இந்த பதவியை ஏற்றுக்கொண்டீர்கள் என்று சிலர் என்னிடம்; கேள்வி எழுப்புகின்றனர். நான் இன்னும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால், பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் வெற்றி
பெற்றிருக்கலாம் என்று, சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூறுவதையும் நான் அவதானித்தேன்.

தொடர்ந்தும் ஆட்சிசெய்வதற்கு நாம் அரசாங்கம் ஒன்றை அமைக்கவில்லை. ஒரு பொதுத்தேர்தலை நடத்துவதற்கே இந்த நிர்வாகத்தை ஏற்றோம். என்னைப் பிரதமராக நியமித்த பி;ன்னர், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, உண்மையில் வேறு தெரிவுகள் இல்லாத நிலை ஏற்பட்டதனாலேயே என்னைப் பிரதமராக நியமித்தார் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை
எனக்கு பொறுப்பளிக்கும்போது, எனக்கு அந்த பொறுப்பை எக்காரணம்கொண்டும் நிராகரிக்க
முடியவில்லை. இளம் சமுதாயத்தினரின் எதிர்காலமும், மற்றும் இந்த நாட்டின் தலைவிதியும் பாரிய சவாலை எதிர்கொண்டிருந்தன. எதனைப் பேசினாலும் எதனைச் செய்தாலும் நாமே அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்தவேண்டியுள்ளது. இந்த நாட்டிற்கு மேலும் பல பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், இந்த பதவியை ஏற்றுக்கொண்டமைக்கு மற்றுமொரு காரணமும் உண்டு. ஒரு பொதுத்தேர்தலை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி வழக்குத் தாக்கல் ஒன்றை மேற்கொண்டு, தேர்தலை
பிற்போட்டது. ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்படி நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தால், இன்றளவில் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பர். இந்த பொதுத் தேர்தல் அறிவிப்பு காரணமாக எவரதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும்வரை, ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் இத்தகைய தடைகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கும் என்பது தெளிவு.

ஆட்சி மாற்றம் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முன்னைய ஆட்சிகாலத்தில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்ததாலேயே, ஜனாதிபதி, ஆட்சியை பொறுப்பேற்கும்படி என்னை அழைத்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில், எந்தவொரு ஜனநாயக நாடும் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தி, புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏனெனில், இக்கட்டான நிலையை எவ்வாறு நாம் சமாளித்தோம் மற்றும் யுத்தத்தை முன்னெடுத்து செல்ல எவ்வாறு நாம் நிதி திரட்டினோம் என்பதை, எமது அரசாங்கத்தில் இருந்த தற்போதைய ஜனாதிபதி நன்கறிவார்.

முன்னைய எந்தவோர் அரசாங்கமும் மேற்கொள்ளாத, மிக பாரிய அபவிருத்தித் திட்டங்களை நாம் எமது காலத்தில் மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. 2007ஆம் ஆண்டு உலக உணவு பிரச்னை, எமது நாட்டு மக்களை பாதிப்பதற்கு நாம் இடமளிக்கவில்லை. 1930களுக்கு பின்னர், 2008ஆம் ஆண்டு உலகில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி குறித்தும் எமது நாட்டு மக்கள் ஒன்றுமே தெரியாதவகையில் நாட்டை நிர்வகித்து, நிலைமையை சமாளித்தோம். உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்து, உலகலாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட காலத்திலும், எம் நாட்டு மக்களை அத்துணை பாதிக்காதவிதத்தில், அதன் பாதக விளைவுகளை மிக குறைந்த மட்டத்தில் பேண எம்மால் முடிந்தது.

எமது ஆட்சி காலத்தில் 9 வருட காலத்திற்குள், தனி நபர் வருமானத்தை டொலர் மதிப்பீட்டில் மும்மடங்கு அதிகரிக்கக்கூடியதாக இருந்தது. எமது ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 7.4 வீதமாக பேணப்பட்டது. அமெரிக்க டொலரின் பெறுமதி 131 ரூபாவாக பேணப்பட்டது. கடன், மொத்த தேசிய உற்பத்தியின் 70 வீதமாக காணப்பட்டது. 2015ஆம் ஆண்டு 9ஆம் தேதி உறுதியான பொருளாதார கட்டமைப்புகொண்ட நாட்டை நாம் புதிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தோம். நான்கு வருடங்களின் பின்னர், நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிகண்டு, ஆபத்தான நிலையில் உள்ளது. வெளிநாட்டு நாணய கடன் சுமையே, இந்த நாடு, தற்போது எதிர்நோக்கிய மிக பாரிய பொருளாதார நெருக்கடியாகும்.

2005ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக பதவியேற்றபொழுது, நாட்டில் யுத்த சூழல் காணப்பட்டது.
அப்போதும், இன்று போல, பொருளாதாரம் படுமோசமான நிலையை அடைந்திருக்கவில்லை. அந்த
நேரத்திலும் கடன் சுமை, மொத்த தேசிய உற்பத்தியின் 90 வீதமாக காணப்பட்டது. ஆனால், வெளிநாட்டு கடன் சுமை, இன்றுபோன்று மோசமான நிலையில் இருக்கவில்லை. அவ்வப்போது இதுவிடயம் குறித்து, மக்களுக்கு எழுத்துமூலம் அறிவித்தேன். இலங்கை அபிவிருத்தி பிணைமுறிகள், தங்க பத்திர பிணைமுறிகள், தனி கடன்கள், நாணய மாற்று நடவடிக்கைகள் போன்றவற்றின்மூலம் ஜக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு நாணய கடன்கள், நாம் பதவிக்கு வரும்போது நாம் எதிர்நோக்கும் பாரிய கடன் சுமையாக இருக்கும் என்பதை நான் முன்னரே அறிந்து வைத்திருந்தேன். கடந்த மூன்றரை வருட காலத்தில் நல்லாட்சி
அரசாங்கம் 20.7 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு கடனை பெற்றிருந்தது. ஒரு தேர்தலை நடாத்தாமல், முன்னைய அரசாங்கத்தையும் ஆட்சியையும் மீள ஏற்படுத்த, ஐக்கிய தேசிய கட்சி முயற்சிப்பது எதற்காக என்பது தற்போது அனைவருக்கும் நன்கு புரிந்திருக்கும். நாம் உருவாக்கிய வலுவான பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சியினரே அழித்தனர். அதனாலேயே, அவர்கள் ஒரு தேர்தலுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.

2006ஆம் ஆண்டு எல். ரி. ரி. யினருடன் யுத்தம் ஆரம்பமானதும், இந்த நாட்டு மக்கள்- தொழிற்சங்கங்கள் – நுகர்வோர் – தொழில் நிபுணர்கள் – வரத்தகர்கள் மற்றும் நாட்டின் ஏனைய தரப்பினர் அனைவரும் அரச படைகளின் யுத்த நடவடிக்கைகளைச் சீர்குலைக்காத வகையில் தமது அனறாட கருமங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தனர். முன்னர் எவராலும் வெற்றிகொள்ளமுடியாத யுத்தத்தை, பொது மக்களின் பூரண ஆதரவு காரணமாகவே எம்மால் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. பொது மக்கள் அன்று யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய அதே ஆதரவை இன்றும், இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு வழங்கும்படி பொது மக்களிடம் வேண்டுகிறேன். இதுதான் எமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு. நாம் இதில் தோல்வியடைந்தால், இந்த நாடு கிரேக்க
நாட்டைப்போன்று மாறிவிடும்.

பொருளாதார ரீதியில் தேசிய நெருக்கடி ஒன்று இருக்கிறது என்பதை கவனத்தில்கொண்டே நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. மக்கள்மீது திணிக்கப்படும் வரிச்சுமையை குறைக்கும் அதேவேளை, மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சர்களின் வாகன இறக்குமதி, பொது நிகழ்ச்சிக்கான செலவீனங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான ஏதேச்சையான செலவினங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர், உறுதியான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில், பொருத்தமான எண்ணிக்கைகொண்ட அமைச்சர்களை
நியமிப்பது குறித்து நாம் தெளிவாக இருத்தல் வேண்டும். எல்லாவற்றுக்கும் முன்னர், எமது நாட்டில் ஓர் உறுதியான, வலுவான அரசாங்கம் இருத்தல்வேண்டும். புதிய அரசாங்கம் செலவுகளை மிக குறைந்த மட்டத்தில் பேணவேண்டும்.

இந்த பாரிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய வல்லமை எம்மிடம் மட்டுமே உள்ளதாக ஜனாதிபதியும், இந்த நாட்டு மக்களும் நன்கு அறிவர். 2005ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்ததும், நாம் பல சவால்களுக்கு முகம்கொடுத்தோம். 2007ஆம் ஆண்டு 500 மில்லியன் டொலர்களை எச்.எஸ்.பி.சி வங்கியிடம் கடனாக பெற்றபோது, ஐக்கிய தேசிய கட்சி அந்த வங்கியை சுற்றி வளைத்து, கடன் கொடுக்கவேண்டாம் என்றும், அவ்வாறு கொடுத்தால், தாம்
பின்னொரு காலத்தில் ஆட்சிக்கு வந்ததும் அந்த கடனை மீள செலுத்த மாட்டோம் என்றும் எச்சரித்தனர். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, எமது அரசாங்கத்துக்கு ஓர் அங்கத்துவ நாடு என்றவகையில், சர்வதேச நாணய நிதியத்தால் கிடைக்கவிருத்த கடன் தாமதமடைந்தது. அந்தவேளையில், நான் எமது மத்திய கிழக்கு நட்புறவு நாடுகளுடன் தொடர்புகொண்டு, 500 மில்லியன் டொலர் கடனுதவியை பெறுவதற்கான உறுதிமொழியை பெற்று, அந்த தடையையும் தாண்டி சென்றோம்.

அதன் பின்னர், பிரபாகரன் உயிரிழந்தார், சர்வதேச நாணய நிதியம் 500 மில்லியன் டொலர் கடனுதவியை உடன் வழங்கியது. அதனால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எமக்கு வாக்குறுதி வழங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடனை, நாம் பெறவேயில்லை. மூடியின் கடன் தரப்படுத்தலில் இலங்கை கீழ் இறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அப்படி செய்யாமலிருந்தால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும். 2015ஆம் ஆண்டு, நாம் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆட்சியை கையளிக்கும்போது, இலங்கை இந்த தரப்படுத்தல் வரிசையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. 2015ஆம் ஆண்டின் பின்னரே, அவை வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.

இத்தகைய தரப்படுத்தலின் பின்னனியில், ஒரு நுட்பமான அரசியல் சக்தியும் உள்ளது என்றே நான் கூறுவேன். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், எமது நாட்டின் தரப்படுத்தல்கள் உயர்வடைந்திருக்கவேண்டும். ஆனால், உடனடியாக தாழ்த்தப்பட்டன. இத்தகைய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சக்தியும் வல்லமையும் இருப்பதனாலேயே, ஜனாதிபதி இந்த பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் இந்த விடயம்பற்றி நன்கு தெரியும். இதனாலேயே ஐக்கிய தேசிய கட்சியினர், நாளாந்தம் வெளி உலகுக்கு தெரிவிக்கும் நோக்கில், வெளிநாட்டு
செய்தியாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களை தொடர்புகொண்டு, பொதுத்தேர்தலை நடத்துவது ஜனநாயக விரோத செயல் என்று கூறிவருகின்றனர். பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு, நாம் ஆட்சிக்கு வந்தால், அனைத்து பிரச்னைகளையும் நாம் தீர்த்துவிடுவோம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஜனாதிபதியுடன் நாம் உருவாக்கும் அரசாங்கம் மிக பலமானதும் மக்கள் நட்புறவு கொண்ட அரசாங்கமுமாகும்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஒரு மாத காலமே கடந்துள்ளது. தற்போது இருப்பது ஓர் இடைக்கால அரசாங்கம் மட்டுமே. நாடு வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, அதனை ஒரிரண்டு மாதங்களுக்குள் மீள கட்டியெழுப்புவது கடினம். பொது தேர்தல் ஒன்றின் மூலம் மக்களுக்கு உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் கால தாமதாகியுள்ளதால், உறுதியான அரசாங்கம் ஒன்று உருவாக சில காலம்
செல்லும். இந்த இடைக்கால பகுதியில், நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை மீள உருவாக்கும் எமது முயற்சிகளுக்கு முழு ஆதரவு தரும்படி பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

2006ஆம் ஆண்டு முதல் 2014 வரையுள்ள காலப்பகுதியில், பொதுமக்கள்மீது பாரிய சுமையை ஏற்படுத்துவதிலிருந்து தவிர்க்கும் பல நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான், கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் தேதி பதவியேற்றவுடன், எரிபொருள் மற்றும் சில அத்தியாவசிய பொருள்களுக்கான விலைகளை குறைத்தோம். உர நிவாரண
திட்டத்தை நாம் மீள அறிமுகப்புடுத்தினோம். விவசாய வருமானங்கள் மீதான வரியை விலக்கினோம். அதன் மூலம் விவசாய மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டு, உற்பத்தி அதிகரிக்கும் என்பது எதிர்பார்ப்பாகும்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் 2015ஆம் ஆண்டுக்கு பின்னரும் உள்ள நிலைமைகளின் வித்தியாசத்தை நாட்டு மக்கள் நன்கறிவர். 2015ஆம் ஆண்டு மக்கள், உணவு உடை இல்லையென்று கூறி, ஆட்சி மாற்றத்துக்காக வாக்களிக்கவில்லை என்று, முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் பொது இடங்களில் பல தடவைகள் கூறியிருந்தார். 2015ஆம் ஆண்டு ஜனநாயகத்துக்காக ஆட்சி மாற்றம் ஒன்றை வேண்டி மக்கள் வாக்களித்தனர். ஆனால், 2015ஆம் ஆண்டு ஆட்சி
மாற்றத்தின் பின்னர், மக்களின் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்டன. வாக்குரிமை மறுக்கப்பட்டு, உணவு உடை இல்லாமல் இருக்கும் நிலையல்லவா இப்போது உருவாகியிருக்கிறது?

இந்த நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுக்கும் இறுதி சந்தர்ப்ப நடவடிக்கையிலேயே நாம் தற்சமயம் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் இல்லாமல் ஆட்சியை முன்னெடுத்து, நாட்டை அழிக்க முனையும் சக்திகளை தோற்கடிக்க, நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றிணைவோம்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ