மைத்திரி – மஹிந்தா: பரஸ்பர சமரச திட்டம்?

0 44

– மாலி

‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ – கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்ரோட்டிலின் இக் கூற்றுக்கு பலவிதங்களில் வியாக்கியானம் அளிக்கப்படுவதுண்டு. எனினும், இலங்கையில் இப்பொழுது நிலவும் அரசியல் நிலைமையும், நிகழ்வுகளும் அரசியல் சிந்தனையாளர்களின் சிந்தனையில் அரிஸ்டோட்டிலை நினைவுறுத்தி, ஒரு வியாக்கியானத்தை நிச்சயம் தேடவேவைக்கும்.
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஒரு நாட்டின் ஜனதிபதி, அந்த அதிகாரங்களில் செயல்படுவதாக சொல்லி மேற்கொள்ளும் செயல்பாடுகள், நாட்டை ஒருமாத காலத்துக்கும் மேல், ஓர் அரசியல் ‘சூன்யத்துள்’ வைத்திருக்கிறது. ஒரு தனி மனித விருப்பு வெறுப்பின் வெளிப்பாடாக அது விஸ்வரூபமாய்த் தெரிகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மாதம் 26ஆம் தேதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்திருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, அமைச்சரவையோ, பாராளுமன்றமோ ஜனாதிபதியின் இந் நடவடிக்கையை அறிந்திருக்கவில்லை; சம்பந்தப்பட்ட இத் தரப்பினருக்கு இது அறிவிக்கப்படவுமில்லை.
ஜனாதிபதி, தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டதான இந் நடவடிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே மாத்திரமான கலந்தாலோசனைகளில் நடந்ததாகவே தெரிகையில், அரசியல் பாஷையில் இதனை ஒரு ‘சதி நடவடிக்கை’ என்று சொல்லவைப்பதற்கும் இடமளிக்கிறது. இப்போது, நாட்டில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்ற ஜனநாயகமும், நீதித்துறையை நாடி, காத்திருக்கின்றன.
நெருக்கடியான ஓர் அவசர நிலையிலிருந்து நாட்டைக் காப்பதற்கான ஒரே நடவடிக்கையே இது என்று தொடர்ந்து தெரிவிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய நடவடிக்கைகள் முற்றிலும் தனது அதிகாரத்துக்கும், அரசியலமைப்புக்கும், பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கும் அமைவானவையே என்றும் தொடர்ந்து வற்புறுத்துகிறார். அத்தோடு, இந் நெருக்கடி நிலையிலிருந்து நாட்டைக் காக்கவல்ல ஒரே ஆபத்தாந்தவன் மஹிந்த ராஜபக்ஷவே என்றும் கூறுகிறார்.
இதேவேளை, தன்மீதான கொலைமுயற்சியே இந் நடவடிக்கைக்கு தன்னைத் தீர்மானமாக்கியதாகவும் ஜனாதிபதி கூறுகிறார். தன்மீதும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷமீதும் இக் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறி, அமைச்சரவை உறுப்பினர் ஒருவருடன் இந்திய உளவு நிறுவனம் ‘றோ’ வையும் இதில் சம்பந்தப்படுத்திய அவர் பின்னர், ‘றோ’வின் சம்பந்தம் இதில் இல்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார். அதேவேளை, நாட்டின் ஜனாதிபதிமீதான இக் கொலைமுயற்சி குற்றச்சாட்டு தொடர்பில் பகிரங்கமாக எதுவும் நிரூபணமாகவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எந் நிலையிலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று, மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி, நவம்பர் 16ஆம் தேதிவரை பாராளுமன்ற அமர்வை இடைநிறுத்திவைத்தார். பின்னர், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவின் பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் தம்மால் நிரூபிக்க முடியும் என்று, பாராளுமன்றத்தை இருநாள்கள் முன்னதாக, நவம்பர் 14ஆம் தேதி கூட்டுவதற்கு அறிவித்தார்.
ஆனால், பின்னர் நவம்பர் 9ஆம் தேதி, பாராளுமன்றத்தைக் கலைப்பதாகவும், 2019 ஜனவரி 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுமென்றும், டிசம்பர் 9ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட 13 மனுக்கள்மீதான விசாரணையில், டிசம்பர் 7ஆம் தேதிவரை இடைக்கால தடையுத்தரவை வழங்கி, டிசம்பர் 4, 5, 6ஆம் தேதிகளுக்கு உயர் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்ததையடுத்து, முன்னர் அறிவித்திருந்தபடி 14ஆம் தேதி பாராளுமன்றம் கூடியதும், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷமீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு முடிவை ஜனாதிபதி ஏற்க மறுத்தார்.
பிரேரணையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவான திருத்தத்துடனும், வாக்கெடுப்பு முறையுடனும் மறுநாள் இரண்டாவது தடவையாக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை முடிவையும் அவர் ஏற்க மறுத்தார். இந்த பாராளுமன்ற அமர்வுகள், இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத விதத்தில், சபாநாயகர் பொலீஸ் பாதுகாப்புடன் சபபைக்கு வந்த நிலை ஒன்றுக்கு வழிகோலியது.
தவிர, உத்தியோக வாசஸ்தலத்தில் ஒருவரும், பிரதமர் அலுவலகத்தில் இன்னொருவருமாக, இருவர் பிரதமராக உரிமைகோர, மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகவிருக்கிறார்.
ஆக, இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதில் மைத்திரிபால சிறிசேன கங்கணமாகவிருக்கிறார். இதற்கு அசல் காரணம் என்ன? மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற விதத்தில், நெருக்கடி நிலையிலிருந்து நாட்டின் அவசர மீட்புதான் காரணமா? அப்படியெனின், அதற்கான அவரின் நடவடிக்கைகள் அவர் கூறுகின்ற விதத்தில் முற்றிலும் அவரது அதிகாரத்துக்கும், அரசியலமைப்புக்கும், பாராளுமன்ற நடைமுறைகளுக்கும் அமைவானவைதானா?
ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக ஐக்கிய தேசிய கட்சியில் இன்னொருவரை பிரதமராக தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியும் என்றும், இதுபற்றி சஜீத் பிரேமதாச போன்றவர்களுடன் பேசியதாகவும் ஜனாதிபதி தனது ‘பெருந்தன்மையை’ வெளிப்படுத்துகிறார். ஆனால், அரசியலில் இது அப்பட்டமான ஓர் அயோக்கியத்தனமாகவே அமையும். நாட்டின் பிரதானமான ஒரு மாற்று அரசியல் கட்சியைப் பிளவுபடுத்தும் அல்லது அதனை இழிவுபடுத்தும் தந்தரோபாய முயற்சியாகவே இது கருதப்படும்.
மாற்று பிரதமரைத் தேடிய மைத்திரிபால சிறிசேன, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, அவரைவிட்டு பிரிந்து வந்திருந்த நிலையில், இப்போது மஹிந்த ராஜபக்ஷவையே ‘புனிதராக’ பிரதமராக்கினார், ஏன்? அவரின் கட்சியில் அவர் இன்னொருவரைப் பிரதமராக்கியிருக்கலாமே?
ஆனால், இங்கு உண்மையில் மஹிந்த ராஜபக்ஷவே தமக்கு பதிலாக இன்னொருவரை சிபார்செய்திருக்க முடியும்; அதுவே முறையானதும், கௌரவமானதுமாக இருந்திருக்கும். ஆனால், நாட்டைக்காக்க விடுத்த கோரிக்கையை தம்மால் தட்டிக்கழிக்க முடியவில்லை என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.
நவம்பர் 18ஆம் தேதி, மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் வைபவத்தில் விகாரையொன்றில் கலந்துகொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அங்கிருந்து அலுவலகம் திரும்பியதும், குற்ற புலன்விசாரணை பொலிஸ் அதிகாரி அட்ரின் நிசாந்த சில்வாவை இடம்மாற்றம் செய்த செய்தி வெளியானது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷமீதான அதி முக்கிய புலன் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலீஸ் அதிகாரி இவர். ‘சன்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, பத்திரிகையாளர் பிரகீத் எக்நெலியகொட உள்ளிட்டோர் தொடர்பான விசாரணைகள் இவை. ‘என்னுடைய தந்தையாரின் விவகாரத்தில் நீதியின் குறுக்கே நிற்கவேண்டாம்’ என்று, பின்னர் லசந்த விக்கிரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்கிரமதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய கடிதம் வெளியானதையடுத்து, பொலீஸ் அதிகாரியின் இந்த இடமாற்றம் ரத்தானது. எனினும், அவரின் இடமாற்றம், அக் கடிதத்தினால் ரத்தானதல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ஷவின் பலத்தை நிரூபிப்பதற்கு தேவையான எம். பிக்களை தம்பக்கம் இழுக்கும் முயற்சிகளில் நிகழ்ந்த, பெருந்தொகைப் பண பேரங்கள் வெளியாகிய வேளையிலும், தேவையான எண்ணிக்கையினரைப் பெற்றுவிட இயலாதுபோனநிலையில், அத்தகைய முயற்சி எதுவும் நடைபெறவில்லை எனவும், ஐ. தே. க. விலிருந்து தம்முடன் இணைய முன்வந்த பலரைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
பாராளுமன்றம் இடைநிறுத்திவைக்கப்பட்ட அக் காலப்பகுதியுள் போதுமான எண்ணிக்கையிலான எம். பிக்களைப் பெற்றுவிடலாமென்ற பூரணமான நம்பிக்கையிலேயே இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் ஜனாதிபதி துணிந்தாரென்பதும், அந்த எண்ணத்திலேயே, பாராளுமன்றத்தைக் கலைக்கும் நோக்கமின்றி, அதனை இடைநிறுத்தி வைத்தாரென்பதும், அதன் சாத்தியமின்மையைத் தெரிந்த பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்காக பாராளுமன்றத்தைக் கலைத்தார் என்பதும், புரிந்துகொள்வதற்குப் புதிரானவையல்ல. தொடர்ந்த ஜனாதிபதியின் நடவடிக்கைகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இதனைத் துல்லியமாகவே காண்பிக்கின்றன.
ஒரு பாராளுமன்ற ஜனநாயக முறைமையில், பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத அல்லது நிரூபிக்காத ஓர் அரசை ஜனாதிபதி அணைத்து, ஆசீர்வதிக்கிறார். பொதுத் தேர்தல் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பொன்றுக்கு காத்திருக்கும் நிலையில், இப்போது நடைபெறுகின்ற இந்த விதண்டாவாதங்கள், இந்த குழப்ப நிலையை சாதகமாக காண்பித்து, நீதிமன்றத் தீர்ப்பைப் பொதுத் தேர்தலுக்கு அமைவாகும் விதத்தில் ஆக்கிக்கொள்வதற்கான முயற்சியே என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
பொதுத் தேர்தலின் மூலம், ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்ற தனது சபதத்தை இலகுவாக்கிவிடலாம் என்பதும் அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் தமது விருப்பை உறுதியாக்கிவிடலாமென்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணமாக தெரிகிறது. ஆனால், சிலசமயங்களில் மக்கள் தீர்ப்பு மறுவிதமாகிவிட்டால், அப்போது ஜனாதிபதியின் சபதம் என்னவாகும் என்றும் அரசியல் அவதானிகள் கேட்கின்றனர்.
வழமையான காலப்பகுதியில், அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும்பொழுது, ஆட்சியை அமைக்கும் பெருமளவிலான வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாக பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோது, தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிய, மைத்திரிபால சிறிசேனவின் மஹிந்த ராஜபக்ஷவுடனான பரஸ்பர, சமரச முன் நடவடிக்கையா, இது? – இதுவும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் வினா.
ஆக, இப்போது பெரும்பான்மை இல்லாதவேளையிலும், இரண்டு அணிகளிடயேயும் நடைபெறும் இக் ‘கயிறிழுத்தல்’, பொதுத் தேர்தல் ஒன்று வருமெனின், அதனை நடாத்துகின்ற காபந்து அரசாங்கத்துக்கான போட்டியே.
எது நடப்பினும், இந்த களேபரங்களில், நாட்டின் அரசியலமைப்பும், பாராளுமன்ற முறைமைகளும் சரிவர பேணப்படவேண்டும் என்பதே, அரசியலுக்கு அப்பாலான எதிர்பார்ப்பாகும்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ