புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாம்: நீதி கோரும் பேரோசை

0 26

சரவணன் சந்திரன்

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையைவைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி ஓடுகளே உண்டு. மீதமெல்லாம் சாக்குப் படல்தான்.

மிக மோசமான தார்மீகமற்ற செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லா அரசுகளும் செய்திருக்கின்றன. அப்போது கெடுபிடிகள் நிறைந்த நேரம். நினைத்த மாதிரி எல்லாம் அகதிகள் முகாமுக்குள் நுழைந்து விட முடியாது. இப்போதும் அப்படித்தானா என்று தெரியாது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். இரண்டுவீத வாக்குகளைக்கொண்ட கட்சி என்றெல்லாம் ஆயிரம் கேலிசெய்யலாம். ஆனால், இந்த மாதிரியான தார்மீகச் செயல்களுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் ஓடிவந்து நிற்பார்கள். அப்படி அவர்கள் அநீதிகளின்போது குரல் கொடுக்கும்போதெல்லாம் எம்போன்ற பத்திரிகையாளர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அடியாழ உந்துதலோடு அக்காரியங்களில் ஈடுபடுவதைப் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.

அப்படித்தான் மதுரையில் எம். பியாகவிருந்த மோகன், மண்டபம் அகதிகள் முகாமுக்கு எங்களை அழைத்துச் சென்றார். அவரது சுமோவிற்குள் என்னையும், கானுயிர் புகைப்படத் துறையில் பல்வேறு விருதுகள்பெற்ற புகைப்படக்காரர் மதுரை செந்தில் குமரனையும் மறைத்து ஒளித்துக்கொண்டுபோய் முகாமிற்குள் கொண்டுபோய்விட்டார்.

45 நிமிடத்தில் திரும்பி வந்துவிடவேண்டுமென ஏற்பாடு. மோகன் வெளியே காவலர்களுடன் பேச்சுக்கொடுத்து, நேரத்தைப் போக்கொண்டிருந்தார். ஒரு பறவையின் வேகத்தில் முகாமுக்குள் பறந்தான் செந்தில். அவனது புகைப்படக் கருவிகளை வேகமாகக் கழற்றி மாட்டிய லாவகம் இன்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

அதுவரை அப்படி ஒரு மோசமான மனித குடியிருப்புகளை நான் பார்த்ததே இல்லை. என் சின்ன வயதில் பன்றிக் குடில்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அதைப்போலவே இருந்தன இவை. உண்மையிலேயே, மனதில் துயரம் உருள்வதை உணர்ந்தேன். அதற்குள்தான் தாம்பத்யம் துவங்கி, எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளவேண்டும்.

வெளியில் சுதந்திரமாகப் போய்விடமுடியாது. மிகச் சொற்பமான உதவித் தொகையே கிடைத்தது அப்போதும். அந்தக் கட்டுரை ‘இந்தியா டுடே’யில் வெளிவந்த பிறகு, அதை முன்னிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டசபையில் பேசி, அதன் காரணமாக அவர் தலைமையில் என்று நினைக்கிறேன், குழுவொன்று நியமிக்கப்பட்டது. அது, தி.மு.க ஆட்சிக் காலம்.

கொஞ்சம் தொகையை ஏற்றித் தந்தார்கள். அதை வைத்தெல்லாம் நிம்மதியாய்ப் பொங்கிச் சாப்பிட முடியாது. நம்மை நம்பி வந்தவர்களை அரைப் பட்டினியில் போடுவது முறைதானா? அங்குள்ள பெண்களை ரௌடிகள் மிரட்டுகின்றனர். மற்றவர்களைவிட அவர்களுக்குக் கூலி குறைவாகவே தரப்படுகிறது. அரசு தரப்பிலும் ஆயிரம் மிரட்டல்கள். எல்லா முகாம்களுமே பாம்புகள் குடியிருக்கும் புதர்களைச் சுற்றி அமைக்கப்பட்டவை.

இன்றைய மழையில் பார்த்த குடிசைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தனவோ, அப்படியே இருந்தன. தலைக்குமேல் ஒரு நிம்மதியான கூரைக்காகத்தானே மனிதர்கள் உலகெங்கும் ஓடுகிறார்கள். அதை உறுதிப் படுத்துவது ஓர் அரசின் தார்மீகக் கடமையல்லவா? ஆயிரம் அரசியல் காரணங்கள் இருக்கலாம்; அடிப்படையில் ஒரு மனிதனை எப்படி நடத்தவேண்டும் என்பது முக்கியம் அல்லவா?

லண்டனில் ஒளிந்திருக்கும் மல்லையாவை அடைக்க நினைக்கும் சிறைச்சாலை எப்படி இருக்கிறது என லண்டன் கேட்கிறது. அவசர அவசரமாக தூசுதட்டி, வீடியோவைக் காட்டுகிறது இந்திய அரசு. அதைப் பார்த்தே லண்டனில் சிரிக்கிறார்கள்.

சிறைச்சாலையையே சொர்க்கபுரியாக்கிக் காட்டுகிற வல்லமைகொண்ட அரசுக்கு, நம்மை நம்பி வந்தவர்களுக்குத் தலைக்கு மேல் ஒரு நிம்மதியான கூரையை உண்டுபண்ணித்தர மனமில்லை. நேர்மையற்ற செயல்தானே இது? உள்ளூரிலேயே அகதிகளை உருவாக்கும் அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

அந்தப் பயணத்தில் தனுஷ்கோடி கடலடியில் ஓர் அதிகாலை நேரத்தில் நின்றிருந்தேன். சுழற்றி அடிக்கிற கடலலையையே அங்குதான் முதல்தடவையாக பார்த்தேன். அந்தச் சத்தத்தை அருகில் இருந்து கேட்டேன். அந்தப் பேரோசை, அந்நிய நிலத்தில் கால்வைக்கும் எல்லா அகதிகளின் நெஞ்சிலும் அறைந்துகொண்டே இருக்கும். மனிதர்களிடம் நீதியைக் கோரும் பேரோசை அது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ