மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

0 20

குமார்-ராஜா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை நீக்கமுடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
தடையுத்தரவு நீக்கக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் முற்றாக நிராகரித்ததோடு, மஹிந்த தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய திகதிகளில் விசாரணைக்கெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு முடிவுறும் வரையில், இதனோடு தொடர்புபட்ட மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள றிட்மனு மீதான விசாரணையையும் இடைநிறுத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை ஐந்து நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பது குறித்து பிரதம நீதியரசர் கவனம் செலுத்துவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஈவா வணசுந்தர (தலைவர்), புவனெக்க அலுவிஹார, விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இடைக்கால தடையை நீக்குமாறு கோரிய வேண்டுகோளை நீதியரசர்கள் குழு ஏகமனதாக நிராகரித்ததோடு, நீதியரசர் விஜித் மலல்கொட மாத்திரம் மேன்முறையீட்டு மனு விசாரிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்தார். நீதியரசர் மலல்கொட இந்த மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்திருக்க வேண்டுமென்பதே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் விசேட மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு கோரியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றுக் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவு காரணமாக நாட்டில் அமைச்சரொருவரோ அமைச்சரவையோ இல்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது. அதன் காரணமாக அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கு வாய்ப்பும் இல்லாத நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவித்து, விசேட மேன்முறையீட்டு மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கருத்துக்களைத் தெரிவித்தார்.

திருத்தப்படாத ஹன்சார்ட் அறிக்கையை வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவை விதித்திருப்பதாகவும், இதனால் முழுமையான வழக்குத் தீர்ப்பொன்றுக்கு வருவதால் தனது மனுதாரர்கள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், அது முழு நாட்டையும் பாதிக்கக்கூடிய ஒரு செயலெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அமைச்சரவை நியமிப்பதற்கும், இருப்பவர்கள் அந்தப் பதவியில் செயல்படுவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற இடைக்கால தடை இடமளிக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்றத்தின் 122 உறுப்பினர்கள் பெற்றுக்கொடுத்துள்ள சத்தியக்கடதாசிமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் இவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்.

திருத்தப்படாத ஹன்சார்ட் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் முறைப்பாட்டாளர்கள் தரப்பில் வாதமொன்று முன்வைக்கப்பட்டபோதும், சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 57ஆவது பிரிவுக்கமைய பாராளுமன்றத்தின் எந்தவோர் ஆவணத்தையும் சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியுமெனவும், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 122 பேரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் 18ஆவது பிரிவுக்கமைய, அரச அச்சகர் உறுதிப்படுத்தி வெளியிட்ட எந்தவொரு பாராளுமன்ற குறிப்புகளையும் சாட்சியமாக நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இங்கு எடுத்துரைத்தார்.
அத்துடன், நிலையியல் கட்டறைகள் 42(1)படி குரல் மூலம் வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்த முடியுமெனவும், இந்த மேன்முறையீட்டு மனு பாராளுமன்றத்துக்கு முக்கியமான விடயமாகவிருப்பதால் இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு அதிகாரமில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், மனுதாரர் தரப்பினால் மீண்டும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 10 நிமிடங்களுக்கு நீதிமன்ற செயல்பாடுகளை இடைநிறுத்திய பின்னர் நீதியரசர்கள் குழாம் தனது முடிவை அறிவித்தது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ