‘சொந்தச் செலவில் சூனியம்?’ – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகள்

0 88

வி. சிவலிங்கம்

(பகுதி-1)

ஐரோப்பாவிலும் குறிப்பாக, பிரித்தானியாவிலும் மிக அதிக அளவில் பேசப்படும் அரசியல் நிகழ்வு எனில் அது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற எடுத்த முடிவு ஆகும். தற்போது, வெளியேறுவது என்பது அதாவது, முற்றாகவா? அல்லது ஓரளவாகவா? மென்மையான (ளுhடிகவ நஒவை) வெளியேற்றமா? அல்லது கறாரான (ழயசன நஒவை) வெளியேற்றமா? என, தெளிவற்ற நிலை தொடர்கிறது. ஆளும் கன்சவேட்டிவ் கட்சிக்குள் மிக மோசமான பிளவுகள் தோன்றியுள்ளன. சமீபத்தில், பிரதமர் தெரேசா மே மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு நிலமைகள் மாறின. பிரதமர் மே மீது நம்பிக்கை உள்ளதாக கன்சவேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 200 பேர் வாக்களிக்க, 117 பேர் நம்பிக்கை இல்லை என வாக்களித்துள்ளனர்.

கன்சவேட்டிவ் கட்சி

கன்சவேட்டிவ் கட்சிக்குள் மிக ஆழமாக ஏற்பட்டுள்ள பிளவுகளை மிக நுணுக்கமாக ஆராய்வது அவசியமானது. ‘பாராளுமன்றங்களின் அன்னை’ என அழைக்கப்படும் வெஸ்ற்மின்ஸ்ரர் பாராளுமன்றத்தில், சிக்கலான பிரச்னைகள் எழும்போது கட்சிகள் எவ்வாறு அப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்கின்றன? நூற்றாண்டு பழமைவாய்ந்த இக் கட்சியானது, எவ்வாறு இன்னமும் பிளவுபடாமல் செல்கிறது? உலகிலேயே மிகவும் பழமையான கட்சியாகவும், மிகவும் சாதனை புரிந்த கட்சியாகவும், 18ஆம் நுற்றாண்டிலே தோன்றிய இக் கட்சி 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் ஏன் 21ஆம் நூற்றாண்டிலும் பொருத்தமான, பலமான அமைப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன? இக் கட்சியானது மாற்றத்தை நோக்கிச் செல்லும் வழிகள் மிகவும் அவதானத்திற்குரியன. உற்பத்தி சாதனங்களை உடமையாகக் கொள்வது, மூலதனத்தைக் குவிப்பது, பொருளாதார செயல்பாட்டில் அரச தலையீடுகளைக் குறைத்து, தனியார் துறையை ஊக்குவிப்பது என்பன இன்று மிகவும் கோட்பாட்டு அடிப்படையில் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளன. இப் பின்னணியில் அதாவது, சந்தைகளை ஒருமுகப்படுத்தி, கட்டுப்படுத்தி, அதிகூடிய லாபத்தைப் பெறுவதை ஆதரிக்கும் ஒரு கட்சி, தற்போது எடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவு என்பது ஒட்டுமொத்த சமூகத்திலும், உலக அளவிலும் பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்க வல்லது எனலாம். இதற்கான பிரதான காரணம், அக் கட்சியால் மாற்றங்களை ஏற்படுத்தும் தகவு நிறையவே காணப்பட்டது. இக் கட்சியினர் அரசாங்கம் அமைப்பதில் தோல்வி அடையலாம்; ஆனால், எதிர்க்கட்சிகள் அத் தோல்வியால் பெரு வெற்றி அடைய முடியாது. அரசுக்கு வெளியிலிருந்தால் அடுத்து அரசமைப்பதற்கான செயல்பாடுகள், அத் தோல்வியிலிருந்து உடனடியாகவே ஆரம்பித்துவிடும். இறுக்கமான, மாற்று அரசியல் தெரிவுகளை மக்கள் ஏற்கும் வகையில் முன்வைக்கும் ஆற்றல் அக் கட்சிக்கு உண்டு.

1973ஆம் ஆண்டளவில், ஐரோப்பிய பொதுச் சந்தையில் பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் அப்போதிருந்த பிரதமர் எட்வேர்ட் ஹீத் தலைமையில் இணைந்த பிரித்தானியா, கடந்த 2016ஆம் ஆண்டு, அப்போதிருந்த பிரதமர் டேவிட் கமரோன் தலைமையில் நடாத்திய பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில், வெளியேறும் முடிவை எடுத்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா? அல்லது தொடர்ந்து இருப்பதா? என வாக்குச் சீட்டில் கேட்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், சுமார் 52 மில்லியன் மக்கள் வெளியேறுவதை ஆதரித்தும், சுமார் 48 மில்லியன் மக்கள் தொடர்ந்து இருப்பதையும் ஆதரித்தனர். சுமார் நான்கு மில்லியன் மக்களே பெரும்பான்மையாக அத் தீர்மானத்தை ஆதரித்த போதிலும், கன்சவெட்டிவ் கட்சியினர் ‘வெளியேறுவது என்றால் வெளியேறுவதே’ என, இம் முடிவுகள் குறித்துக் கருத்துக்களை வெளியிட்ட போதிலும், நாள்கள் செல்லச்செல்ல, தமது விளக்கங்களை மாற்றத் தொடங்கினர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமற்ற நிலையிலுள்ள கன்சசேட்டிவ் கட்சி, வட அயர்லாந்தின் வலதுசாரிக் கட்சியான 10 உறுப்பினர்களை உடைய ஜனநாயக யூனியன் கட்சியுடன் (னுநஅடிஉசயவiஉ ருniடிnளைவ ஞயசவல) கூட்டணி அமைத்தனர். இக் கட்சியினரே தற்போது வெளியேற்றத்துக்கு மிகவும் தடையாக இருப்பதாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய பொதுச் சந்தை இணைவு

இங்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணைவதற்கான பின்னணியைச் சற்றுத் தெரிந்து கொள்வது அவசியமானது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் சீரழிந்திருந்தது. குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டமையால், இணைந்து செயல்படுவது தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. அது மட்டுமல்லாமல், இரண்டு உலகப் போர்களும் ஐரோப்பிய மண்ணில் இடம்பெற்றதால், கோடிக் கணக்கான மக்கள் அக் கொடிய போரில் இறந்தனர். எனவே, அவ்வாறான ஒரு கொடிய போர் மீண்டும் தமது மண்ணில் நிகழாமல் தடுப்பதும் தேவையாக இருந்தது. பொருளாதாரங்களை இணைக்கும் பொருட்டு ‘ரோம் ஒப்பந்தம்’ என்ற பெயரில், 1957இல் ஐரோப்பிய நாடுகள் சில, ‘ஐரோப்பிய பொதுச் சந்தை நாடுகள்’ என்ற பெயரில் இணைந்தன. இவ்விணைவை அமெரிக்காவும் ஆதரித்தது. அதன் பின்னர் மேலும் பல தேவைகளின் அடிப்படையில், 1993இல் ‘ஐரோப்பிய ஒன்றியம்’ என பெயர் மாற்றம் செய்தனர். ஐரோப்பிய பொதுச் சந்தை நாடுகளாக சில நாடுகள் இணைந்த போது பிரித்தானியா அதில் அங்கத்துவ நாடாக இருக்கவில்லை.

1961ஆம் ஆண்டு அப் பொதுச் சந்தையில் இணைந்துகொள்ள பிரித்தானியா விண்ணப்பித்தது. ஆனாலும், அப்போது பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த சார்ள்ஸ் டி கோல் இதனை ஆதரிக்கவில்லை. பின்னர், 1967ஆம் ஆண்டு இரண்டாம் முறையும் விண்ணப்பித்தனர். இருப்பினும், சார்ள்ஸ் டி கோல் 1969ஆம் ஆண்டில் பதவி விலகிய பின்னரே அது சாத்தியமாயிற்று. அதாவது, 1973ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி பிரித்தானியா இணைந்தது.

தொழிற் கட்சி

இக் காலப் பகுதியில் எதிர்க் கட்சியான தொழிற் கட்சி இம் முடிவை எதிர்த்தது. அதற்காக வெளியிடப்பட்ட நியாயங்களே எமது கவனத்திற்குரியன. பிரித்தானியாவின் வரலாற்றிலே பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்கான முதல் முயற்சி இது எனவும், இதன் மூலம் பல நூற்றாண்டுகளாக சுயாதீனமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதெனவும் இவர்கள் கூறினர். பிரித்தானிய மக்களின் அதிகாரத்துக்குட்படாத வேறு குழுவினர் அம் மக்களிடம் எவ்வாறு வரி அறவிட முடியும்? எனவும் கேள்வி எழுப்பினர். இவ்வாறான கேள்விகளை தொழிற் கட்சியினர் அன்று எழுப்பியிருந்தனர்.

ஆனால், இன்று கன்சவெட்டிவ் கட்சியினர் அதே கேள்விகளை முன்வைத்தே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் எனக் கோரிவருகின்றனர். பிரித்தானியாவின் இறைமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரங்களை இழந்துவருவதாகவும், தனது பொருளாதார வளர்ச்சி குறித்து வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாதவாறு ஐரோப்பிய ஒன்றியம் தடுத்து வருவதாகவும், பிரித்தானியா சட்டங்களை இயற்றும் நாடு என்ற நிலையிலிருந்து மாறி, சட்டங்களை ஏற்கும் குடியேற்ற நாடாக மாறியுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

பிளவுகள்

கன்சவேட்டிவ் கட்சியைச் சார்ந்தவர்களே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குக் காரணமாக இருந்தவர்கள். அவர்களே ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானிய மக்களின் இறைமையைப் பறித்துள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். இதன் காரணமாக, கன்சவேட்டிவ் கட்சிக்குள் இரு பிரிவினர், ஆதரவாகவும், எதிராகவும் வளர்ந்து சென்றனர். இதனால், அக் கட்சிக்குள் யாரைப் பிரதமராக்குவது? என்ற போட்டி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கட்சிக்குள் நீண்ட காலமாக இடம்பெற்ற இப் போட்டி நிலமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் 2016இல் பிரதமர் டேவிட் கமரோன் மக்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளித்துப் பதவிக்கு வந்தார்.

இணைந்திருப்பதா? விலகுவதா? என மக்கள் வாக்கெடுப்பு நடத்திய அவர், தாம் இணைந்திருப்பதையே ஆதரிப்பதாகக் கூறிப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், மக்கள் அவரது விருப்பத்துக்கு மாறாக வாக்களித்தமையால் அவர் பதவியை மட்டுமல்ல, அரசியலிலிருந்தும் விலகினார். கன்சவேட்டிவ் கட்சிக்குள் காணப்பட்ட இப் பிளவுகள், அக் கட்சியின் பிரதமர்களின் நியமனங்களில் மிகவும் வெளிப்பட்டன. 80களில் மாக்கிரட் தச்சர் பிரதமராக இருந்தபோது, அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கை விமர்ச்சித்தார். அதன் பின்னர் ஜோன் மேஜர் பிரதமரானபோது, ஐரோப்பிய ஆதரவாளராக இருந்தார்.

இப் பிளவுகள் பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் தாக்கங்களை ஏற்படுத்தின. பிரித்தானியாவில் மாக்கிரட் தச்சர் பிரதமராக இருந்த வேளையில், அமெரிக்காவில் டொனால்ட் றீகன் ஜனாதிபதியாக இருந்தார். இக் காலத்தில்தான் திறந்த பொருளாதாரக் கோட்பாடுகள் மிகவும் வற்புறுத்தப்பட்டன; தீவிரமாக அமுலாக்கப்பட்டன. கட்டுப்பாடற்ற பொருளாதார நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் பலவும் பின்பற்றத் தொடங்கின. 80களில் சோவியத் நாட்டில் சிதைவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய பாதுகாப்பு என்ற போர்வையில் ‘நேட்டோ’ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன. ரஷ்ஷிய குடியரசுக்கு அண்மையிலுள்ள நாடுகளில் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டன.

மாக்கிரட் தச்சர் காலம்

மாக்கிரட் தச்சர் காலத்தில் திறந்த பொருளாதார நடவடிக்கைகள் பிரித்தானியாவில் மிகவும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டன. பிரித்தானிய அரசியல் வரலாற்றிலே கோட்பாட்டு அடிப்படையில் திட்டமிட்டு அமைந்த ஓர் அரசாக தச்சர் அரசு கூறப்படுகிறது. குற்றச் செயல்கள் குறித்துக் கடுமையான தண்டனைகள், அந்நியர் வருகைமீது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள், தேசிய பொதுச் செலவினங்களில் குறிப்பாக, நலன்புரி கொடுப்பனவுகள், தேசிய சுகாதாரச் சேவைகளில் குறைப்பு, ராணுவத்துக்கு அதிக ஒதுக்கீடு, தனியார் துறைக்கும், புதிய வர்த்தகத்துக்கும் ஊக்குவிப்பு, மானியங்களில் குறைப்பு, தொழிற்சங்க நடவடிக்கைகளில் கடுமையான கட்டுப்பாடு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம், வருமான வரிக் குறைப்பு என, பல நடவடிக்கைகள் நாட்டிலுள்ள கன்சவேட்டிவ் கட்சி ஆதரவாளர்களை விலகவிடாமல் வைத்திருக்க உதவியது. அவரது நடவடிக்கைகளின் தாத்பரியங்களை ஒரு சாரார் ஆதரித்தே சென்றார்கள். ஏனெனில், அவரது கொள்கைகளால் மக்களில் ஒரு பிரிவினர் நன்மை பெற்றார்கள். அந்த ஆதரவு அதிகரித்தே சென்றது.

இக் கொள்கைகளின் விளைவாக, பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியாகிய சமூக ஜனநாயகக் கட்சி மிகவும் சீர் குலைந்தது. அது மட்டுமல்ல, மிகவும் பலமான தொழிற்சங்கமாகிய சுரங்கத் தொழிலாளர் சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் தீர்வு இல்லாமல் வருடங்களைத் தாண்டியது. போராட்டம் பிசுபிசுத்தது. இறுதியில், பலவீனப்படுத்தப்பட்டது. மாக்கிரட் தச்சர் அரசின் நடவடிக்கைகள், சமூகத்தின் உயர் பிரிவினருக்கு வாய்ப்பை அளித்த வேளையில், பின்தங்கிய பிரிவினர் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். வேலை அற்றோர் தொகை அதிகரித்தது. உள்ளூராட்சி சபைகளின் கட்டுப்பாட்டிலிருந்த வீட்டு வசதிகள் தனியாருக்கு விற்கப்பட்டன. அதனால், வீடில்லாதவர் தொகை அதிகரித்தது. அதற்கான மானியங்கள் குறைக்கப்பட்டதால் வறுமையில் வாழ்பவர்கள், தொழிலாளர்கள், வேலையற்றோர், குறைந்த சம்பளங்களில் வாழ்வோர் எனப் பல பிரிவினரும் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

தொழிற் கட்சி மாற்றங்கள்

ஒரு புறத்தில் இந்த நெருக்கடிகள் அதிகரித்தபோது, தொழிற் கட்சிக்குள் புதிய விவாதங்கள் எழுந்தன. தொழிலாளர்களின் வாக்குகள் மட்டும் தொழிற் கட்சியைப் பதவியில் அமர்த்தப் போதாது எனவும், மத்திய தர வர்க்கத்தினரின் ஆதரவு அவசியம் எனவும் விவாதங்கள் எழுந்தன. அத்துடன், மக்களின் அத்தியாவசிய சேவைகள் தேசியமயமாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் மாற்றங்கள் தேவை எனவும், தனியார், பொதுத் துறை என்பவற்றுக்கிடையே இணைப்பு அவசியம் என்ற விவாதங்கள் எழுந்தன. பிரித்தானிய தொழிலாள வர்க்கம் பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது, அந்த நெருக்கடிகளைத் தணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களிலிருந்து நிவாரணங்களைப் பெறலாம் என்ற விவாதங்கள் எழுந்தன.

ஐரோப்பிய ஒன்றியம் குறித்து மிகவும் கடுமையான போக்குகளைக் கொண்டிருந்த தொழிற் கட்சியினர், ஐரோப்பாவிலுள்ள தொழிற்சங்கங்களுடனும், தமக்குச் சார்பாக பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் அமைந்த சோசலிச அரசுகளுடன் தொடர்புகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக, ஐரோப்பிய ஆணைக்குழுவின் பல சட்டங்கள் தொழிலாளர்களுக்கு உதவியாக அமைந்தன. குறைந்த பட்ச சம்பளம், மனித உரிமை மீறல் என்பவை குறித்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட மூலங்கள் படிப்படியாக வெஸ்ற்மின்ஸ்ரர் பாராளுமன்ற சட்டங்களை விட அதிக சக்தி வாய்ந்தவையாக தொழிற்கட்சியினர் படிப்படியாகக் கருதினர். மாக்கிரட் தச்சரின் நவ தாரளவாத பொருளாதார கோட்பாடுகளில் பலவும், ஐரோப்பிய ஒன்றிய செயல்பாடுகளும் தொழிற் கட்சி மட்டத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியதன் விளைவாக ரோனி பிளேயர் தலைமையிலான பிரிவினர் தொழிற் கட்சியின் பெயரை ‘புதிய தொழிற் கட்சி’ என மாற்றினர். மாக்கிரட் தச்சரின் மக்களைப் பாதிக்கும் கொள்கைகளை குறிப்பாக, பொருளாதார தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களினதும், நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சனைகளையும் தமது கையில் எடுத்தனர். தொழிற் கட்சியின் செயல்பாடுகளுக்கான நிதியின் பெரும் பகுதியை தொழிற் சங்கங்களே வழங்கின. இதனால், தொழிற் கட்சி பெருமளவில் தொழிற்சங்க வாதிகளின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கியே செயல்பட்டது. இதனால், தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு மக்கள் பாதிக்கப்பட்ட வேளையில் தொழிற் கட்சி அரசால் எதுவும் செய்யமுடிவதில்லை. இதனைக் கன்சவெட்டிவ் கட்சி மக்களுக்கு உணர்த்தி வந்தது. தொழிற் சங்கங்களே நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் எதிரிகள் என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருந்தது.

மாக்கிரட் தச்சரின் வீழ்ச்சி

மாக்கிரட் தச்சர் தலைமையிலான அரசு மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. ஆனாலும், மத்திய தர மற்றும் தொழிலாளர் மத்தியிலே செல்வாக்கைப் படிப்படியாக இழந்து சென்றது. 1990ஆம் ஆண்டில் மாக்கிரட் தச்சரின் பிரதிப் பிரதமராகவிருந்த ஜிவ்ரி ஹோவ், பிரதமரின் ஐரோப்பிய எதிர்ப்பு, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ராஜிநாமாச் செய்ததைத் தொடர்ந்து, தச்சரின் அரசு ஆட்டம் காணத் தொடங்கியது. பொருளாதாரத்தின் வளர்ச்சியும் குறைந்தது. கன்சவெட்டிவ் கட்சிக்குள் காணப்பட்ட பிளவுகள் வெளியே புலப்பட்டன. தச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் குரல்கள் ஒலித்தன. ஆனால், அவருக்குப் பதிலாக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள ஜோன் மேஜர், தாம் எதிர்பார்க்கும் தேர்தல் வெற்றியைத் தருவாரா? என்பதில் சந்தேகம் அடைந்தனர். இங்குள்ள பிரதான வேறுபாடு எதுவெனில், மாக்கிரட் தச்சர் ஐரோப்பிய ஒன்றிய இணைவுக்கு எதிராகவும், ஜோன் மேஜர் அதற்கு ஆதரவாகவும் இருப்பதுவாகும். எனவே, இதில் ஐரோப்பிய ஆதரவாளர்களே தமது பலத்தை நிருபித்துள்ளனர். அதன் விளைவாக ஜோன் மேஜர் கட்சியால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ஜோன் மேஜர் வருகை

இவர் பிரதமரானதும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக பல மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தச்சரின் சில முக்கியமான கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக, பணவீக்கத்தைக் கீழ் நிலையில் வைத்திருப்பது, குறைந்த வரிப் பொருளாதாரமாக வைத்திருப்பது, அரச செலவினங்களை மிகவும் குறைத்து வைத்திருப்பது, தனியார் துறைக்கு ஊக்கமளிப்பது என்பன சிலவாகும். ஜோன் மேஜர் தீவிர வலதுசாரி அல்ல என எண்ணிய அவரது சகாக்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், தச்சரின் கொள்கைகளில் எவை பயனளித்தனவோ அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை. அதாவது, தச்சரின் கொள்கைகளில் மனித முகத்தைக் காண அவர் முயற்சித்தார். கோட்பாட்டு நிலைகளைத் தவிர்க்க எண்ணினார். படிப்படியாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துசெல்ல எண்ணினார்.

இதன் அடிப்படையில், கட்சியின் செயல்பாடுகளையும் ஐரோப்பிய ஆதரவு நிலைக்கு எடுத்துச் செல்லும் விதத்தில், அதற்குப் பொறுப்பாக ஐரோப்பிய ஆதரவு முக்கிய உறுப்பினரான கென் கிளார்க்
என்பவரைக் கொள்கை வகுக்கும் குழுவில் அமர்த்தினார். ஆனாலும், எதிர்ப்புகள் அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான போக்குகள் பலமாக காணப்பட்டன. கட்சிக்குள் உள்ள பல முக்கியஸ்தர்கள் தச்சரின் ஆதரவாளர்களாவர். அவர்களை நீக்குவது அல்லது அவர்களின் போக்குகளை மாற்றுவது என்பது இன்னொரு போராட்டமாகவே அமைந்தது. அவ் வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும்பொருட்டு, ‘மாஸ்ரிச் ஒப்பந்தம்;’ ( ஆயயளவசiஉhவ வுசநயவல ) கைச்சாத்திடும் நிலை ஏற்பட்டது. இவ்வொப்பந்தம் பிரித்தானியாவை ஐரோப்பிய நாணய வலையத்திற்குள் இணைப்பதாகும். இப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதை அவர் தவிர்த்தார். ஆனாலும், அவ்வொப்பந்தத்துக்கு எதிரானவர்கள், பலமான அணியாக பாராளுமன்றத்துக்குள் செயல்பட்டனர். சுமார் 50 உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை பலமாக எதிர்ப்பவர்களாகவும், மேலும் 80பேர் அவர்களின் வழிநடத்தலில் செல்லத் தயாராகவும் இருந்தனர். இதனால், கட்சியின் கட்டுப்பாட்டை மேஜர் இழந்தார்.

மாக்கிரட் தச்சர் மூன்று தேர்தல்களில் வெல்வதற்கான இன்னொரு காரணம், தொழிற் கட்சிக்குள் பலமான தலைவர் இருக்கவில்லை. இருந்தவர்களில் பலர் தீவிர இடதுசாரிப் போக்கினை உடையவர்கள். இதனால் மக்கள், குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால், 1997ம் ஆண்டு அவ்வாறு இருக்கவில்லை. கட்சி பல அடிப்படைகளில் மாற்றத்தைக் கொண்டிருந்தது. அதேபோன்று, லிபரல் ஜனநாயகக் கட்சியும் சில பகுதிகளில் கன்சவேட்டிவ் ஆதரவு இடங்களில் பலம் பெற்றது. ரோனி பிளேயர் தலைமையிலான புதிய தொழிற் கட்சி பலமான கட்சியாகவும், மத்திய தர வர்க்கத்தினரின் நம்பிக்கையைப் பெற்றதாகவும் மாற்றமடைந்திருந்தது.

இதன் விளைவாக, 1997இல் இடம்பெற்ற தேர்தலில் கன்சவெட்டிவ் கட்சி 31 சதவீத வாக்குகளையே பெறமுடிந்தது. பதிலாக, 1992இல் இடம்பெற்ற தேர்தலில் 42 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 170 பாராளுமன்ற உறுப்பினர்களை 1997 தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சி இழந்தது. இதற்கான பிரதான காரணம் என்ன? மூன்று தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அக் கட்சி, இவ்வாறு படுதோல்வி அடையக் காரணம் என்ன? மக்களின் பொதுச் சேவைக்கான செலவினங்களை, குறிப்பாக சுகாதார சேவை, கல்வி என்பவற்றுக்கான செலவினங்களை அரசு கட்டுப்படுத்தியது. நாட்டு மக்களின் அன்றாட பிரச்னைகளில் கவனத்தைக் குவிப்பதைக் கைவிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கோட்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ