அரசியலமைப்பு மீறல் குற்றத்தை தேர்தல் போர்வையில் சரிசெய்யமுடியாது – பதவியேற்பில் ரணில்

0 27

குமார்-ராஜா

ஒன்றிணைந்த இலங்கையில் அனைவருக்கும் நீதியான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும், மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை முற்றாக இல்லாதொழித்து, அனைத்து இன, மத மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ள பிரதமர், ஜனாதிபதி தேர்தலின்போது எல்.ரி.ரி.ஈ. யினருடன் உடன்படிக்கை செய்வதற்கு தான் போகவில்லையென்றும், தாய்நாட்டுக்காக தன்னுடைய வெற்றியை அர்ப்பணித்ததாகவும், தனது அந்தக் கொள்கையில் இன்றும் மாற்றமில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேலும் கூறியதாவது:
எமது நாட்டின் அடிப்படைச் சட்டம் அரசியலமைப்பே என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். வாக்களிக்கும் உரிமை எமக்கு கிடைத்து தற்போது 87 வருடங்களாகின்றன. இந்த 87 வருடங்களிலும் எமது நாட்டு மக்கள் எமது அரசியலமைப்பை பாதுகாத்தனர். அதைப்போன்று, அடிப்படை உரிமையையும் பாதுகாத்தனர். அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பு அந்த உரிமையை பாதுகாப்பதற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்டது.

2015 ஜனாதிபதி தேர்தலின்போதும் இதுவே இடம்பெற்றது. அரசியலமைப்பு மற்றும் மக்களின் உரிமை நசுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நீங்கள் அனைவரும் கைகோர்த்து நின்றீர்கள். நாம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதும் மக்களுக்கான உரிமையை அதிகமதிகமாக பாதுகாக்கும் நோக்கில்தான். அரசியலமைப்பை மீறியோ அதனை எதிர்த்தோ செயல்பட்டால், நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படாது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டின் பிரதமருக்கு பாராளுமன்றத்தில் உச்ச நம்பிக்கையிருப்பது அவசியம். பெரும்பான்மை ஆதரவின்றி பிரதமர் நாட்டை முன்னெடுத்துச்செல்ல முடியாது. அதேபோன்று, பிரதமர் ஒருவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின் அவர் அப்பதவியிலிருந்து விலகவேண்டியது அவசியம். அரசியலமைப்புக்கிணங்க புதிய பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட பின் நான்கரை வருடங்கள் நிறைவுறும்வரை அதனைக் கலைப்பதற்கு எந்தவித அதிகாரமும் எவருக்கும் கிடையாது. அவ்வாறு கலைக்கவேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிறைவேற்றுவது அவசியம்.

அவ்வாறான சட்டவிரோதமான தேர்தலொன்றுக்கு இடமளிக்க முடியாதென உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் 85ஆவது பக்கத்தில் இதுதொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 26ஆம் தேதி அலரி மாளிகையிலிருந்து நான் மக்களுக்கு தெரிவித்ததும் இதுவே. நாம் எமது போராட்டத்தை ஜனநாயகத்துக்காக மேற்கொள்வதாக நான் அன்று தெரிவித்திருந்தேன். உண்மைக்காகவும், அரசியலமைப்பை பாதுகாப்பதற்காகவும், சட்ட ஆதிக்கத்தை பாதுகாப்பதற்காகவும், ஒழுக்கம் மற்றும் தாற்பரியத்தை பாதுகாப்பதற்காகவும் நாம் இந்த போராட்டத்தில் வெற்றிகொள்வோமென்று அன்று தெரிவித்திருந்தேன். அதையே இன்றும் நான் உங்களுக்கு தெரிவிப்பதோடு, நாளையும் அதையே நான் உங்களுக்கு கூறுவேன். எனது வார்த்தைகளை எப்போதும் நான் பாதுகாப்பேன். செய்யக்கூடியதை மட்டுமே நான் சொல்வேன். சொல்வதை கட்டாயம் நான் செய்வேன்.
அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்தனர். இனபேதம், மதபேதம், கட்சி பேதங்களுக்கு அப்பால், இலங்கையரென்ற ரீதியில் தமது மனசாட்சியை மதிக்கும் பல இலட்சக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்தப் போராட்டத்துக்கென தம்மால் முடிந்த ஆதரவை வழங்கினர். அவர்கள் அனைவருமே தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக அதனைச் செய்யவில்லை. நாட்டுக்காகவும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவுமே அவர்கள் செயல்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துகொள்கின்றேன். அதேபோன்று, சிறந்த வழிகாட்டல்கள்மூலம் எமக்கு ஆதரவளித்த மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனைத்து மதத் தலைவர்களுக்கும் எனது கௌரவத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராளுமன்றத்தின் உயர் தன்மையை பாதுகாத்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக செயல்பட்ட சபாநாயகர், எமது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட எமது நீதிமன்ற நிறுவனங்களுக்கும் அதன் சுயாதீனத்தை பாதுகாத்தமைக்காகவும் நீதிமன்றத்துக்கும் நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்த சட்டத்தரணிகளுக்கும் நான் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேவேளை, சட்டத்தைப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்டுவதற்கு செயல்பட்ட அரசாங்க ஊழியர்கள், முப்படைகளையும் சேர்ந்த வீரர்கள், பொலிஸார் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.

கறுப்பு ஊடகவியலாளர்களின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் உண்மைக்காக போராடிய ஊடகவியலாளர்களுக்கும், இணையத்தளங்களூடாக முழு உலகுக்கும் உண்மையை வெளிப்படுத்தியதுடன் சுயாதீனமாக இரவு பகல் என பாராது உழைத்த அனைவருக்காகவும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் 2012 ஜனவரி மாதத்திலும் 2015 ஓகஸ்ட் மாதத்திலும் நாட்டின் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டோம். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கி, பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காகவும், அதனூடாக மக்கள் இறைமையைப் பாதுகாப்பதற்காகவே அந்த ஆணை எமக்கு கிடைத்தது.

கடந்த மூன்றரை வருடங்களாக நாம் அதிகளவிலான வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். தற்போதைய நீதிமன்றங்கள் உள்ளிட்ட பெருமளவிலான நிறுவனங்கள் சுயாதீனமாக செயல்படுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தினோம். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்ததன்மூலம் நாம் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த மூன்றரை வருடங்களாக நாம் விதைத்த சிறந்த விதைகளின் பலாபலன்களை இன்று நாடு அனுபவிக்கமுடிகிறது. அது, மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனினும், எம்மால் செய்யமுடியாத பல விடயங்கள் இருந்தன. சில செயல்திட்டங்கள் மந்தமாகவே இடம்பெற்றன. சில திட்டங்களை எம்மால் நிறைவுசெய்ய முடியாமல்போனது. எனினும், அர்ப்பணிப்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. நாம் எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம். குறிப்பாக, ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை நாம் விரைவுபடுத்துவோம். நாட்டின் சகல இன, மதங்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்குரிய சூழலை நாம் ஏற்படுத்தினோம். நாம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக எம்மை அர்ப்பணிப்போம்.

எமது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று, ஒன்றிணைந்த இலங்கையில் சகல பிரஜைகளும் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்வதற்காக நாட்டை பிளவுபடுத்தும் எல்.ரி.ரி.ஈ. அமைப்புடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்கு நான் செல்லவில்லை. அன்றும் நான் எனது தாய்நாட்டுக்காக ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அர்ப்பணித்தேன். இன்றும் நான் அதே கொள்கையுடனேயே உள்ளேன். அதில் மாற்றம் கிடையாது.

எதிர்காலத்தில் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து, விரிவான கூட்டணி உருவாக்குவதே எமது நோக்கமாகும். எதிர்கால சந்ததியினர் அச்சமின்றி, தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழ்வதற்கான கௌரவமான சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

நாட்டு மக்களின் கருத்துகளுக்கு செவிமடுத்து, அனைவரதும் உரிமையை பாதுகாக்கும் ஜனநாயக சூழலை இதன்மூலமே உருவாக்க முடியும். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் அடிமைப்படுத்த முடியாத, பலமான ஜனநாயக சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நான் மட்டுமன்றி, நீங்களும் நாட்டில் அனைவரும் அது போன்றதொரு இலங்கையையே எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து மக்களும் சகல பேதங்களையும் மறந்து, எமது தாய்நாட்டுக்காகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும், மக்கள் உரிமையையும் எதிர்கால சந்ததிக்கான சுதந்திரமான நாட்டை பெற்றுக்கொடுப்பதற்கும் எமது இந்த கூட்டணியோடு கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் எமது உள்ளத்தின் வேண்டுகோளுக்கு இடமளிப்போம் என்றும் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ