பிரிட்டிஷ் மக்களின் கவலைகளும் மனமாற்றங்களும் கவனத்தில் வேண்டும் – ‘சொந்த செலவில் சூனியம்’ – 2

0 47

வி. சிவலிங்கம்

(பகுதி-2)

தற்போதைய நெருக்கடிகள்

வரலாற்று அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைப்புத் தொடர்பாக பிரித்தானிய அரசில் ஏற்பட்ட விளைவுகளை முன்னர் பார்த்தோம். இனி, 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பொதுசன வாக்கெடுப்பின் பின்னர் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அவதானிக்கலாம். ஏனெனில், சுமார் 45 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலகுவாகப் பிரிந்து செல்வதற்கான சூழல்களை ஏற்படுத்தியுள்ளதா? 28 நாடுகளுடன் பின்னிப் பிணைந்துள்ள ஐரோப்பிய பொருளாதாரத்திலிருந்து விலகுவதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன? 2016ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதா; இல்லையா? என, ஒற்றைப் பரிமாணத்தில் கேள்வியை எழுப்பி, மக்களிடமிருந்து சரியான பதிலை எதிர்பார்க்க முடியுமா? அவ் வாக்களிப்பின்போது, மக்களுக்கு அதன் விளக்கங்கள் போதுமானதாக வழங்கப்பட்டதா? அவ் வாக்களிப்பு வேளையில் சில நிறுவனங்கள் மிக அதிக பணங்களைச் செலவுசெய்து மக்களின் அபிப்பிராயங்களை மாற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகிறதே, அவ்வாறானால் மக்களின் அபிப்பிராயம் திட்டமிட்டு மாற்றப்பட்டதா? கன்சவெட்டிவ் கட்சி தனது உள்கட்சி முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள மேற்கொண்ட தந்திரம் இன்று அக் கட்சியையும், நாட்டையும் மிகவும் பாதித்துள்ளதே, ஜனநாயகம் சரியாக செயல்படுகிறதா? ஐரோப்பாவிலிருந்து வெளியேறுவதன்மூலம் பிரித்தானிய பாராளுமன்றம் இறைமையைப் பெற்றுக்கொள்ளுமா? என, பல கேள்விகள் எழுகின்றன.

பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவு தொடர்பாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் தோல்வியையே சந்திக்கிறார். ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட ஒப்பந்த நகலினைப் பாராளுமன்ற ஒப்புதலுக்கு முன்வைத்த வேளையில், அவரது கட்சியினர் அவ்வொப்பந்தத்துக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக பயமுறுத்தினர். இதனால், அவ்வொப்பந்த நகலை முன்வைக்கமுடியாது பின்வாங்கியதோடு, தொடர்ந்தும் தாமே பிரதமர் என்பதை உறுதி செய்துகொள்ள தனது கட்சியிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.

வெளியேறும் ஒப்பந்தம்

அவ்வொப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கையில், ஒப்பந்தம் பிரித்தானியாவின் முக்கிய குறிக்கோள்களை சில விட்டுக்கொடுப்புகளுடன் நிறைவேற்றியுள்ளதாகவும், அதுவே ஒரேயொரு ஒப்பந்தம் எனவும் கூறியுள்ளார். ஆனால், இவ்வொப்பந்தம் சார்பாக நாட்டின் சட்ட மா அதிபர் வழங்கிய அபிப்பிராயங்களை அரசு முழுமையாக வெளியிடவில்லை. இது, பாராளுமன்ற அதிகாரத்தை மீறியதாகும் என எதிர்க் கட்சிகள் அழுத்தியதால் அதனை முழுமையாக வெளியிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தடைகள்

பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பான வாதங்களின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்பது கோட்பாடு சம்பந்தமான பிரச்னை அல்ல எனவும், மக்களின் அன்றாட வாழ்வு சம்பந்தமானது எனவும், ஐரோப்பிய உறவுகளின் பரந்த தாத்பரியங்களை, உறவுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, பழங்கள் பறிப்பதுமுதல் குற்றவியல் நீதிவரை, மோட்டார் வண்டி உற்பத்தி, ஐயர்லாந்து சமாதான ஒப்பந்தம், பல்கலைக்கழகங்கள் என நீண்டு செல்வதாகவும் ஆனால், தற்போதைய இரு சாராரினதும் அணுகுமுறைகள் விபத்தை நோக்கி அதாவது, ஒப்பந்தம் அற்ற நிலையை நோக்கி நகர்வதாகக் கூறினர்.

தற்போதய விவாதங்கள் மிகவும் தீவிர நிலையை நோக்கி நகர்வதற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான 50ஆவது பிரமாணத்தை மிக விரைவாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமையாகும். இதன் காரணமாக, அப் பிரமாணத்தின் பிரகாரம், குறிப்பிட்ட காலத்தில் சில முடிவுகளை நோக்கி இரு சாராரும் செல்லவேண்டும். அதன் பிரகாரம், 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதிக்கு முன்பதாக விலகுவதற்கான முதலாவது கட்டம் பூர்த்தி செய்யப்படவேண்டும். இந்த முதலாவது கட்டம் என்பதில் சுங்கம், வரி விதிப்பு, எல்லைப் பாதுகாப்பு என்பவை தெளிவாக்கப்பட வேண்டும்.

பிரமாணம் 50இன் பிரகாரம் விலகுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான கால இடைவெளி 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியுடன் முடிவடைகிறது. ஆனால், பாரிய முடிவுகள் எடுக்கப்படவேண்டியுள்ளன. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் பிரித்தானிய பொருளாதாரத்தின் எப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படும் என்ற ஆய்வுகள் இல்லை. வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் ஐரோப்பாவிலிருந்து குறித்த கால வெளியில் கிடைக்கும் விதமாக இதுவரை ஏற்பாடுகள் உள்ளன. விலகியதும், அதன் பாதிப்பு மிகப் பாரதூரமாக அமையும். பிரித்தானியாவிலிருந்து தினசரி பலநூறு தடவைகள் விமான சேவை நடத்தப்படுகிறது. விலகியதும் விமான சேவையும் ஸ்தம்பிதமடையும். ஏனெனில், பயணிகள் வீசா பெறவேண்டும். ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்குள் வருபவர்கள் தொடர்பான விபரங்களைப் பெறுவதில் கால தாமதம் ஏற்படலாம் அல்லது குற்றச் செயல்கள் புரிந்தோர் பலர் உள்ளே வரலாம் அல்லது, அவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க ஏற்பாடுகள் தேவை. பிரித்தானிய வைத்திய சாலைகளில் ஐரோப்பிய பெண்களே பணி புரிகின்றனர். அவர்களது வருகை தடைப்பட்டால் பிரித்தானிய பெண்களே அந்த வேலைகளைச் செய்யவேண்டும். ஆனால், அதற்கான பயிற்சி பெற்றவர்களின் தொகை குறைவாக உள்ளது. இதனால், வைத்தியசாலைகளில் நெருக்கடி ஏற்படும். ஐரோப்பிய உணவு இறக்குமதி காரணமாக பிரித்தானியாவில் சில உணவு வகைகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, அந்த விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல, பிரித்தானிய உணவு வகைகள் ஐரோப்பிய ஏற்றுமதிக்கென உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வுற்பத்திகள் தடையானால், விவசாயிகள் வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் இழப்பர். மில்லியன் வரையிலான போலந்து நாட்டுப் பிரஜைகள் பிரித்தானியாவில் வாழ்கின்றனர். தமது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற அச்சத்தில் இவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் தொடர்பான முடிவு விரைவாக எடுக்கப்படாவிடில் அவர்களைச் சட்ட விரோத பிரஜைகள் எனக் கருத வாய்ப்பு உண்டு. தற்போதைய நிச்சயமற்ற நிலை தொடர்வதால், பிரித்தானிய நாணயத்தின் பெறுமதி மிகவும் வீழ்ச்சி அடைந்து செல்கிறது. இதனால், பிரித்தானியர்கள் பலர் விடுமுறையில் ஐரோப்பா செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், பல உல்லாச பயண நிறுவனங்களின் வருமானம் குறைந்து, பெரும் தொகையானோர் வேலைகளை இழக்கவுள்ளனர்.

பிரபுக்கள் சபை

அரசியல் அமைப்பு ரீதியாகவும் தடைகள் உள்ளன. உதாரணமாக, தெரேசா மேயினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்தம் பிரபுக்கள் சபையிலும் நிறைவேற்றப்படவேண்டும். ஆனால், தற்போதுள்ள நிலையில் பிரபுக்கள் சபை பல திருத்தங்களை முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறானால், மேலும் காலம் எடுக்கலாம். அத்துடன், ஐரோப்பிய ஆணைக்குழுவும் பிரித்தானிய வெளியேற்றம் எவ்வாறு அமையும் என்பதற்கான தனது பார்வையையும் வரைய வேண்டியுள்ளது. இவை, மேலும் பல விவாதங்களைத் தூண்டலாம். உதாரணமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றாக வெளியேறியுள்ளதா? அல்லது பகுதியாகவா? என்பதைத் தெரிவிக்கவேண்டும். முற்றாக எனில் ஐரோப்பாவிலும், பிரித்தானியாவிலும் வாழும் பிரித்தானியர்கள், ஐரோப்பியர்களின் எதிர்காலம் தெளிவாக்கப்படவேண்டும். மீன்பிடி எல்லைகள், வட அயர்லாந்து, தென் அயர்லாந்துக்கிடையேயான எல்லைப் பாதுகாப்பு என, பல பிரச்னைகள் உண்டு.

கன்சவேட்டிவ் கட்சிக்குள் உள்ள, வெளியேற்றத்தை விரும்பாத உறுப்பினர்கள் சிறுபான்மையோராக இருப்பினும், பலமானவர்கள் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அவர்கள் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை ஆதரித்தபோதிலும், பிரித்தானியா தொடர்ந்தும் சுங்க (ஊரளவடிஅள ரniடிn) இணைப்பில் இருப்பது அவசியம் எனக் கோருகின்றனர். ஏனெனில், பெருந்தொகையான உணவுப் பொருள்கள் வட அயர்லாந்திலிருந்து தென் அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்கும் செல்கின்றன. இவை சுங்கத் திணைக்களத்தால் இடையில் தடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டால், உணவுப் பொருள்கள் பெரிதும் பழுதுபட வாய்ப்பு உண்டு. வட அயர்லாந்தின் பொருளாதாரமும் அதில் தங்கியுள்ளது.

தெரேசா மேயின் புதிய ஒப்பந்தம் என்ன?

பிரித்தானியா ஐரோப்பிய சந்தையிலிருந்து வெளியேறுவதற்கான ஆரம்ப ஏற்பாடுகளைக் கூறும் முதற் கட்ட யோசனைகள். அதாவது, இரு பகுதி வர்த்தகத்தினை முற்றாக முறித்துக் கொள்வதா அல்லது சுங்க இணைப்பினைத் தொடர்ந்து வைத்திருப்பதா? வட, தென் அயர்லாந்துக்கிடையே எல்லைத் தடைகள் இருக்குமா? அவ்வாறெனில் எவ்வாறு அமையும்? என்பதைக் கூறுவதாகும். பிரதமரின் கருத்துப்படி, இரு பகுதியினரும் ஐரோப்பிய ஒற்றைச் சந்தை, சுங்க இணைப்பு என்பவற்றை இதுவரை கொண்டிருந்தமையால் கிடைத்த நலன்களைத் தொடர்ந்தும் பேணும்பொருட்டு, ஏற்படுத்தியுள்ள சட்டப் புத்தகம் என்கிறார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்தமையால் ஐரோப்பிய நீதிமன்ற சட்டங்கள் பிரித்தானியாவுக்குள்ளும் செல்லுபடியாயின. பிரித்தானிய பிரஜைக்கு பிரித்தானியாவில் நீதி கிடைக்கவில்லையெனில், அவர் ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையீடுசெய்ய வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், தற்போது விலகினால் அந்தச் சந்தர்ப்பங்கள் கிடைக்காது. எனவே, தற்போதைய முதல்கட்ட வேலைகள், நிதி தொடர்பான பிரச்னைகளைக் கையாளுதல், பிரஜைகளின் உரிமைகள், வட அயர்லாந்துக்கும், தென் அயர்லாந்துக்குமிடையேயான எல்லை விவகாரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

வட அயர்லாந்து – தென் அயர்லாந்து எல்லை விவகாரங்கள்

இந்த இரு பகுதிகளும் இணைக்கப்படவேண்டும் எனக் கோரி, மிக நீண்ட காலமாக பிரச்னைகள் நிலவிவந்ததைப் பலரும் அறிவர். இணைக்கவேண்டும் எனக் கோரி ஐரிஷ் விடுதலை ராணுவம், அதன் அரசியல் பிரிவான சின்பெயின் என்பன வன்முறைப் போராட்டங்களை நடாத்திவந்தன. அதேவேளை, வட அயர்லாந்து பிரித்தானியா யூனியனின் ஒரு பகுதி என இன்னொரு பிரிவினர் போராடினர். வட அயர்லாந்தில் கத்தோலிக்க மதத்தவர்கள் சிறுபான்மையினராகவும், புரட்டஸ்தாந்து மதத்தவர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். ஆனால், தென் அயர்லாந்தில் கத்தோலிக்கரும், பிரித்தானியாவில் புரட்டஸ்தாந்து மதத்தவரும் பெரும்பான்மையிராக உள்ளனர். ஐரிஷ் விடுதலை ராணுவத்தினர் வட அயர்லாந்தில் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள், 1997இல் ரோனி பிளெயர் தலைமையில் தொழிற் கட்சி அரசு ஏற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ‘பெரிய வெள்ளி ஒப்பந்தம்’ என்ற பெயரில் புரிந்துணர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக, அங்கு நீண்ட காலமாக நடைபெற்ற வன்முறைப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

பிரித்தானியாவும், தென் அயர்லாந்தும் ஐரோப்பிய சந்தையில் அங்கத்தவர்களாக இருந்தமையால் வட, தென் அயர்லாந்தினிடையே எல்லைத் தடைகள் எதுவும் இருக்கவில்லை. அது மட்டுமல்லாமல், அவ்வாறான தடைகளை இரு சாராரும் விரும்பியதில்லை. தற்போது, பிரித்தானியா ஐரோப்பிய சந்தையிலிருந்து விலகினால் வட அயர்லாந்தும் அச் சந்தையிலிருந்து விலகவேண்டும். இதனால் இரு பகுதிகளிடையே நடைபெற்ற தடையற்ற வர்த்தகம் குறிப்பாக, வட அயர்லாந்தின் 25 சதவீத வர்த்தகம் தென் அயர்லாந்தில் தங்கியுள்ளது. அதாவது, உணவுப் பொருள்களின் தடையற்ற வர்த்தகம் வட அயர்லாந்து, தென் அயர்லாந்து, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றிற்கிடையே எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் நடைபெறுகிறது. தடைகள் போடப்பட்டால் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, கள்ள வியாபாரம் பெருகி பயங்கரவாதிகள் பணம் திரட்ட வாய்ப்பு ஏற்பட்டு, மீண்டும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வட அயர்லாந்துக்கும், தென் அயர்லாந்துக்குமிடையே சுமார் 300 மைல் நீளமான எல்லை உண்டு. தினமும் சுமார் 30 ஆயிரம் மக்கள் எல்லையைக் கடக்கின்றனர். இச் சுதந்திர போக்குவரத்து தடைப்படுமானால் அல்லது வரி விதிப்பு மேற்கொண்டால் இதில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏனெனில், இரண்டு அயர்லாந்துகளிடையே தனித்தனி வரி விதிப்பு ஏற்படும். வர்த்தக விதிகள் மாற்றம் பெறும். பிரித்தானியா குடி வரவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில், எல்லைத் தடுப்பு அவசியமாகிவிடும். தற்போது இரு பகுதிக்கும் அல்லது பிரித்தானியாவுக்கும் தடையின்றி ஐரோப்பியர்கள் சென்று வரலாம்.

வட அயர்லாந்தின் பிரதான கட்சியாகிய ஜனநாயக யூனியன் கட்சி (னுநஅடிஉசயவiஉ ருniடிnளைவ ஞயசவல) தெரேசா மே அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது. சுங்க இணைப்பிலிருந்து பிரித்தானியா விலகுவதை அவர்கள் ஆதரிக்கின்றனர். ஆனால், வட, தென் அயர்லாந்துகளிடையே எல்லைத் தடை போடுவதை அவர்கள் விரும்பவில்லை. இது, அவர்களின் குழப்ப நிலை ஆகும். இதன்காரணமாக வட, தென் அயர்லாந்துகளிடையே மென்மையான தடைகளை அதாவது கமரா போன்ற இலத்தினியல் உபகரணங்களின் மூலம் எல்லைகளைக் கண்காணிக்கலாம் என்கின்றனர்.

பின்தடை ஏற்பாடு (க்ஷயஉமளவடியீ)

வட, தென் அயர்லாந்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கென புதிய திட்டத்தை தெரேசா மே அறிவித்தார். அதன் பிரகாரம், வட அயர்லாந்து விஷேச ஏற்பாட்டின்கீழ் கொண்டு வரப்படுகிறது. அதனை ‘பின்தடை’ (க்ஷயஉமளவடியீ) ஏற்பாடு என அழைக்கின்றனர். இதன் பிரகாரம் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது, முற்றாக துண்டிக்கப்படுவதற்கு முன்னர் மாற்று ஏற்பாடு மேற்கொள்ளும்வரை ஐரோப்பிய ஒன்றியத்தால் கிடைக்கும் பலன்களை வட அயர்லாந்து அனுபவிக்க முடியும்.

ஆனால், இந்த ஏற்பாடுகளை வட அயர்லாந்து நிர்வாகம் ஏற்கவில்லை. இதன் உண்மை நிலையை நாம் வரலாற்று நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடியும். வட அயர்லாந்திலுள்ள குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் அதாவது, தென் அயர்லாந்துடன் இணைப்பை விரும்புவர்களை ஜனநாயக யூனியன் கட்சியினர் பலமாக எதிர்க்கின்றனர். ஏனெனில், அவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினர் என்பதால், தாம் தென் அயர்லாந்துடன் இணைக்கப்பட்டால் சிறுபான்மையினராகி, தற்போது அநுபவிக்கும் சலுகைகளை இழக்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. தற்போது, வட அயர்லாந்தினை தனித்துவமான பிரிவாகக் கணித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால், தாம் மீண்டும் தனிமைப்படுத்தப்படலாம் என்பதால் அந்த ஏற்பாட்டினையும் எதிர்க்கின்றனர். அதுமட்டுமல்ல, இந்த ஏற்பாடு என்பது தென் அயர்லாந்தினதும், குடியரசு (சின்பெய்ன்) ஆதரவாளர்ளினதும் வலைக்குள் செல்ல வாய்ப்பு உண்டு எனவும் கருதுகின்றனர். இச் சந்தேகங்கள் காரணமாக, தெரேசா அம்மையாரின் இப் புதிய ஒப்பந்தத்தினை ஆதரிக்க முடியாது எனத் தெரிவிக்கின்றனர். அக் கட்சியைச் சார்ந்த 10 உறுப்பினர்களின் ஆதரவே கன்சவேட்டிவ் கட்சிக்கான பாராளுமன்றப் பெரும்பான்மையை வழங்குவது கவனத்திற்குரியது. எனவே, இக் கட்சியினரின் ஆதரவு விலக்கப்பட்டால் அரசு கவிழ்ந்து விடும். தேர்தலை நோக்கிச் செல்லவேண்டி ஏற்படும். தேர்தலை நோக்கிச் சென்றால் தொழிற்கட்சியே பதவிக்கு வரும் வாய்ப்பு உண்டு.

வெளியேறும் ஒப்பந்தம்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, தொடர்ச்சியாக நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் முதலாவது கட்டமே இதுவாகும். அடுத்த கட்ட முடிவுகளின் போக்கை இதுவே தீர்மானிக்கும். அதாவது, எதிர்கால வர்த்தக நடவடிக்கைகளின் வடிவத்தை இவை தீர்மானிக்கும். இந்த ஒப்பந்தம்பற்றிய முடிவுகளை எடுக்காமல் எதிர்காலம் பற்றிய பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லமுடியாது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரித்தானிய அரசுக்குமிடையேயான இவ்வொப்பந்தம் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு பிரதமர் எடுத்த முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது. ஏனெனில், அவரது கட்சிக்குள் பலமான எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் எதிர்வரும் 2019 மார்ச் 29ஆம் தெதிக்கு முன்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பிரதமர் பெறவேண்டும். ஏனெனில், இவ்வொப்பந்தமே மார்ச் 29 முதல் டிசம்பர் 2020வரை செயலில் இருக்கும். வட அயர்லாந்து தொடர்பான ‘பின்தடை’ ஏற்பாடு தற்காலிகமானது எனக் கூறப்பட்ட போதிலும், அதற்கான மாற்று ஏற்பாடு காணப்படாவிடில் அதுவே நிரந்தர செயல்பாடாக அமையும்.

எதிர்கால எதிர்வு கூறு

கடந்த 30 மாதங்களாக கன்சவேட்டிவ் கட்சி நடாத்திய பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாததாகவும், உட்கட்சிக்குள் ஆதரவு அற்றதாகவும், எதிர்க் கட்சிகள் பலமாக எதிர்ப்பதாகவும் உள்ளது. இதனால், பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. முதலீடு செய்பவர்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழந்துள்ளனர். நாணயம் மதிப்பிழந்துள்ளது. முதலீடும், அபிவிருத்தியும் பாதிப்படைந்துள்ளன. இதனால், பிரித்தானியாவின் வெளியுலக மதிப்பு நகைப்புக்கிடமாகிறது. நாடு இணைந்திருப்பதா? பிரிந்து செல்வதா? எனப் பிளவுபட்டுச் செல்கிறது. கன்சவேட்டிவ் கட்சிக்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் உடன்பாடு எட்டப்படாத நிலை தொடர்ந்து காணப்படுகிறது. தற்போது எவரும் வாரம் ஒன்றுக்கு 360 மில்லியன் மீதப்படுத்தலாமென கூறத் தயாராக இல்லை.

ஆனால், 2016ஆம் ஆண்டில் மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்தியபோது மக்களுக்குக் கிடைத்த தரவுகளைவிட தற்போது மிக அதிகளவு தரவுகள் அவர்களைச் சென்றடைந்துள்ளன. ஐரோப்பாவிலிருந்து வருகைதருவோரின் தொகை படிப்படியாகக் குறைவடைந்து செல்கிறது. இந் நிலையில் இரு கட்சிகளும் நாட்டின் நலனைக் கவனத்தில்கொண்டு, இணைந்து ஒரு முடிவுக்குச் செல்லவேண்டுமென முன்னாள் பிரதமர் ரோனி பிளேயர் கூறுகிறார். தற்போதைய ஒப்பந்தம் குறித்த சந்தேகங்கள் தொடர்ந்தும் நிலவுமானால், இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அருகிவிடும் என எச்சரிக்கிறார். ஐரோப்பிய ஒன்றியமும் தனது அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராகவேண்டும் எனவும், பிரித்தானிய மக்களின் கவலைகளும், மாற்றங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் கோருகிறார்.

ரோனி பிளேயரின் கருத்துப்படி, பிரதமர் தெரேசா மே தனது ஒப்பந்தத்தினை பாராளுமன்றமும், கட்சியும் நிராகரித்துள்ளதால், அதற்கான புதிய ஆதரவை மக்களிடம் கோரவேண்டும். ஐரோப்பாவின் எல்லைகளைக் கடக்கும் பிரஜைகளின் பிரச்னைகளுக்கும் எல்லைப் பாதுகாப்புக்கும் புதிய முறைகள் அணுகப்பட வேண்டும் என்கிறார்.

தற்போது, பிரதமர் தெரேசா அம்மையாரின் ஐரோப்பிய ஒப்பந்தத்தினை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு மீண்டும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சமர்ப்பிப்பதென நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இவ் விவாதங்கள் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் இந்த நிலமைகளை கன்சவெட்டிவ் கட்சியினரே ஏற்படுத்தினார்கள். அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களே வீழ்ந்துள்ளனர். இவற்றைப் பார்க்கும்போது, எம்மவர்கள் கூறுவதுபோல, சொந்தச் செலவில் தமக்கே சூனியம் வைத்ததாற் போலுள்ளது அல்லவா?

முற்றும்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ