ஐரோப்பிய ஒன்றிய வெளியேற்றத்தின் பின்னர் குடிவரவுக் கொள்கை என்ன?

0 72

வி. சிவலிங்கம்

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர் பலர் தமது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே அம்மையாரின் பிரித்தானிய – ஐரோப்பிய ஒப்பந்தம் (UK – EU deal) விவாதிக்கப்படவுள்ளது. இவ் விவாதம் பல சந்ததியினரின் வாழ்வில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. தொழில் வாய்ப்புக்கள், வர்த்தக கட்டுப்பாட்டு அம்சங்கள் என்பன குறித்த பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் பல, அச்சத்தைத் தருவனவாக உள்ளன. இவ்வொப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே மென்மையான விலகல் ( Soft Exit) சாத்தியமாகும். அவ்வாறில்லையெனில், மிகவும் பாரதூரமான விளைவுகளை ஒப்பந்தம் அற்ற (No Deal) நிலமைகள் ஏற்படுத்தும். ஓப்பந்தம் அற்ற நிலை ஏற்படுமாயின் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்கும் வகையில் அரசு எடுத்துள்ள உபாயங்கள் மிகவும் பயமுறுத்துவனவாக உள்ளன. நாட்டின் பிரதான பெரும் சாலைகளில் பொருள்களை எடுத்துச் செல்லும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கலாம் எனவும், இதனால் மருந்து வகைகள், உணவுப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் செய்திகள் வெளியாகின்றன. சுயாதீனமான மக்களின் தடையற்ற இடப்பெயர்வு கட்டுப்படுத்தப்படுவதால், ஒப்பந்தத்தின் பின்னர் நிலமைகள் எவ்வாறிருக்கும் என்ற அங்கலாய்ப்பு மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ளது. எனவே, இக் கட்டுரை, பிரதமரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய ( UK – EU Deal) ஒப்பந்தமானது குடிவரவு தொடர்பாக கூறும் அம்சங்கள் சிலவற்றை நோக்குகிறது. ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் விவாதங்களை அவதானிக்கும்போது நான்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

1. ஓப்பந்தம் அற்ற நிலை.

2. பிரதமர் தெரேசா மேயின் ஒப்பந்தம்.

3. அவ்வாறில்லையெனில், திருத்திய மென்மைப் போக்குள்ள புதிய ஒப்பந்தம்.

4. இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு.

இவற்றில் பிரதமர் தெரேசா மேயின் ஒப்பந்தம் அவரது கட்சியினராலும், எதிர்க் கட்சியினராலும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரும் இணைந்து, சற்று மென்மையான ஒப்பந்தத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பும் உள்ளது. இவை யாவும் பிரதமரின் கன்சவேட்டிவ் கட்சியினரின் முடிவில்தான் உள்ளன. பிரதமர் மேயினால் பேசி முடிவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தினை அவரது கட்சியினர் பலர் எதிர்ப்பதால் அவரால் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க
முடியவில்லை. ஆனாலும், அடுத்த சில வாரங்களில் பிரதமர் தனது ஒப்பந்தத்தினை பாராளுமன்ற ஒப்புதலுக்கு வழங்கவுள்ளார்.

பாராளுமன்ற விவாதங்களின்போது எதிர்க் கட்சியான தொழிற் கட்சியினர் பல திருத்தங்களைச் சமர்ப்பிக்கவுள்ளனர். இத் திருத்தங்களைக் கன்சவேட்டிவ் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்களாயின் தொழிற் கட்சியின் ஆதரவுடன் அதனை நிறைவேற்றமுடியும். அவ்வாறான முடிவை நோக்கிய பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெறுகின்றன. தொழிற் கட்சியின் திருத்தங்களைக் கன்சவேட்டிவ் கட்சியினர் ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாயின் பிரதமரின் ஒப்பந்தத்தினைத் தோற்கடித்து, தேர்தலை நோக்கி நிலமைகளைத் தள்ளுவது; அதன் பின்னர் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவது அல்லது தற்போது மக்கள் இப் பிரச்னை தொடர்பாக போதுமான தகவல்களைப் பெற்றுள்ளதால் இரண்டாவது சர்வசன வாக்கெடுப்பை நோக்கி ஆளும் கன்சவேட்டிவ் அரசை நெருக்குவது என்பன இப்போது காணப்படும் தெரிவுகளாக உள்ளன.

அரச தரப்பினர் சமீப காலமாக ஒப்பந்தம் நிராகரிக்கப்படலாம் என்பதைக் கவனத்தில்கொண்டு, அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு சில முன்னேற்பாடுகளுக்குத் தயாராகி வருகின்றனர். உதாரணமாக, போக்குவரத்து நெரிசல், மக்கள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் சுமார் 3 ஆயிரத்து 500 ராணுவத்தினரைத் தயாராக்கி வருகின்றனர். உணவுப் பொருள்களுக்கும், மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கருதி, மூன்று மாதங்களுக்குத் தேவையானவற்றை இருப்பில் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துறைமுகங்களில் இறக்குமதிப் பொருள்களுக்கான சோதனைகளால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதால், முன்னர் கைவிடப்பட்ட துறைமுகங்கள் புனரமைப்புச் செய்யப்படுகின்றன.

அரசாங்கத்தின் இந்த ஏற்பாடுகள், மக்கள் மனதில் ஐரோப்பிய வெளியேற்றத்தால் தமது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுமா? என்ற பலவித சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் தரப்புக்குள் ஐக்கியமில்லை. பிரதமரின் ஒப்பந்தம் கட்சிக்குள் மேலும் பிளவுகளைத் தந்துள்ளது. கட்சியின் பாதிப் பேர் அந்த ஒப்பந்தத்தினைத் தற்போது ஆதரிக்கின்றனர். எதிர்ப்போர், நாட்டின் ஜனநாயகம் குறித்தே பேசுகின்றனர். மறு பக்கத்தில், மக்களை ஒடுக்க ராணுவத்தைத் தயாராக்குகின்றனர். பொருள்கள் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் ராணுவத்தின் மூலமாக உணவையும், மருந்துகளையும் விநியோகிக்கத் திட்டமிடப்படுகிறது.

குடி வரவு

இவ்வாறான சிக்கலான அரசியல், பொருளாதார பின்னணியில், குடிவரவு பிரச்னை மேலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியா திறமையுள்ளவர்களுக்கே கதவுகளைத் திறக்கவுள்ளது. இதன் விபரங்களை சற்று விபரமாக நோக்கலாம். ஏனெனில், இந்த முடிவுகள் வேலை பெறுவோர், வேலை வழங்குவோர், கொள்கை வகுப்பாளர்கள் போன்றோர் மத்தியில் பாரிய கேள்விகளையும், கவலைகளையும் தோற்றுவித்துள்ளன. ஏனெனில், 2020ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியாவுக்குள் ஐரோப்பிய பிரஜைகள் எவரும் முன்னர்போல் தடையின்றி வந்துசெல்ல முடியாது. தகைமையும், திறனும் உடையவர்களுக்கே முன்னுரிமை என்பதால், பிரத்தியேக சலுகை இல்லை என்கின்றனர்.

மார்ச் 2019 முதல் 2020 இறுதி வரை

இக் காலப் பகுதி என்பது, இடைக்கால ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் காலமாகும். அதாவது, தற்போது காணப்படும் தடையற்ற காலத்துக்கும், 2020இன் பின்னர் முற்றாகத் தடைசெய்யப்படும் காலத்துக்குமிடையேயான இடைக்கால ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் காலமாகும்.

இவ்விடைக் காலத்தில், பிரித்தானியா தற்போது அனுபவிக்கும் சகல உரிமைகளையும், கடமைகளையும் கொண்டிருக்கும். இருப்பினும், இந்த ஒப்பந்தம் பிரித்தானிய பாராளுமன்றத்தால் ஒப்புதல் மேற்கொண்டால் மாத்திரமே சகல விடயங்களும் செயல்பாட்டுக்கு வரும்.

2020ஆம் ஆண்டின் பின்னர் குடிவரவு நிலமை என்ன?

பிரித்தானியாவில் சுமார் 35 லட்சம் ஐரோப்பியர்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் வதிவிட உரிமை தொடர்பாக பிரித்தானிய அரசு இரண்டு வகையான வசிப்பிட உரிமையினை வழங்கவுள்ளது.

1. தங்கும் தகைமை ( Settled Status)

2. தங்கும் தகைமை பெறுவதற்கு முன்னதான உரிமை ( Pre settled Status)

தங்குவதற்கான தகைமை (Settle Status)

இத் தகைமையானது, 2020ஆம் ஆண்டு முடிவுவரை தங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள், பிரித்தானியாவில் காலவரையறையின்றித் தங்கும் உரிமையை வழங்குகிறது. அதாவது, ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஒருவர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேறாமல் தங்கியிருப்பின், அவர் காலவரையறையின்றித் தங்கும் உரிமையைப் பெறமுடியும். அத்துடன், அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையும் வைத்திருக்க உரிமை உண்டு.

அதேபோன்று, 2020ஆம் ஆண்டு முடிவுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய பிரஜைகள் அங்குள்ள நாடுகளில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் தங்கியிருப்பின் அவர்கள் அவ்வந் நாடுகளில் நிரந்தரமாக தங்கிவாழ உரிமை உண்டு.

தங்கும் உரிமை பெறுவதற்கு முன்னதான தகைமை. (Pre settled Status)

பிரித்தானியர் அல்லாத ஏனைய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் 5 வருடங்கள் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் தங்கியிராத நிலை காணப்படின் அவர்களும் நிரந்தரமாக தங்க அநுமதிக்கப்படுவர். ஆனால், அவர்கள் 5 வருடங்கள் தொடர்ச்சியாக தங்கியிருப்பதற்கான தகுதியைப் பெறும் வாய்ப்புகள் வழங்கப்படும்.

5 வருடங்கள் தொடர்ச்சியாக தங்குதல் என்பதன் விளக்கம் என்ன?

ஒருவர் பிரித்தானியாவில் தொடர்ச்சியான 12 மாதங்களில் 6 மாதங்களுக்கு மேலாகத் தங்கியிருக்காவிடில் அவருக்கு நிரந்தரமாகத் தங்கும் உரிமை மறுக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

சுருக்கமாகக் கூறின், தொடர்ச்சியான 12 மாதங்களில் 6 மாதங்களுக்குமேல் அவர் நாட்டில் தங்குதல் பிரதானமானது.

தங்கும் (Pre settled or Settled) அல்லது அதற்கு முன்பதான தகைமை உடைய ஒருவர் தனது விண்ணப்பத்தினை அனுப்பும் காலம் என்ன?

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, பிரித்தானியாவில் சுமார் 35 லட்சம் ஐரோப்பியர்கள் வாழ்வதால், அவர்களின் இருப்புத் தொடர்பான முடிவுகள் விரைவில் எடுக்கப்படவேண்டியுள்ளன. எனவே, 2021ஆம் ஆண்டு யூன் 30ஆம் தேதிக்கு முன்பதாக அவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும். அதுவே விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி தினமாகும். ஏனெனில், 2019ஆம் ஆண்டு மார்ச் 30 முதல் 2020ஆம் ஆண்டு டிசெம்பர் 31வரையான காலம் என்பது, மாற்றங்களுக்கான இடைக்காலம் என்பதால் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைகள்

பிரதமரின் ஒப்பந்தத்தினை அவரது கட்சியினரில் சுமார் 70 உறுப்பினர்கள் உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிகிறது. அத்துடன், தற்போது அரசாங்கத்துக்குப் பெரும்பான்மையை வழங்கிவரும் வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியன் கட்சியினர் ( Democratic Unionist Party ) ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 200பேர் ஒப்பந்தம் இல்லாத வெளியேற்றத்தை நிராகரிக்கும்படி கடிதம் ஒன்றைப் பிரதமரிடம் வழங்கியுள்ளனர். அதாவது, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பெரும் பாதிப்புகள் உண்டு என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கு புரிந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவரை, 2019ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் தேதிக்கு இடையிலான காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பார்த்தோம். ஆனாலும், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதிமுதல் நாட்டின் நிலமைகள் எவ்வாறிருக்கும் என்பது குறித்தோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரித்தானியாவுக்குமிடையிலான எதிர்கால உறவுகளின் தாற்பரியம் குறித்தோ எவையும் இல்லை. இவைபற்றி யாரும் விவாதிப்பதாகவும் இல்லை. அவ்வாறான விவாதங்கள் இருப்பின் அவை மிகவும் பயமுறுத்தல்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றன.

அரசியல் பிரகடனம்

இப் பின்னணியில், பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ‘அரசியல் பிரகடனம்’ ஒன்றினை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையில் பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான எதிர்கால உறவுகளுக்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படைகள் சில வெளியிடப்பட்டுள்ளன. இப் பிரகடனத்தின் பிரகாரம் பார்க்கையில், இரு தரப்பிலுமுள்ள பிரஜைகள் அதாவது, பிரித்தானிய – ஐரோப்பிய பிரஜைகள் பரஸ்பரம் குறுகியகால அடிப்படையில் வீசா அநுமதியில்லாமல் சென்று, திரும்ப அநுமதிக்கப்படுவர்.

அதேவேளை ஆய்வு, கல்வி, பயிற்சி, இளைஞர் பரிமாற்றம் போன்றவற்றுக்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வர்த்தக நோக்கங்களுக்காக தற்காலிகமாகத் தங்குவதற்கான ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள நிலமைகளை அவதானிக்கும்போது, இவற்றை முழுமையாக விவாதித்துத் திட்டங்களை வகுப்பதற்கான கால அவகாசம் உண்டா? என்ற கேள்வி எழுகிறது. அரச தரப்பு மற்றும் எதிர்க் கட்சிகளுக்கு வெளியில், பிரமாணம் 50இன் செயல்பாட்டை சிலகாலம் ஒத்திவைப்பது பலவகைகளில் பயனுள்ளது என விவாதிக்கப்படுகிறது. ஏனெனில், பிரமாணம் 50 செயற்பாட்டில் உள்ளதால் அதில் வரையறுக்கப்பட்ட கால அளவின் அடிப்படையில் தயாரிப்புகள் துரித கதியில் நிகழ்கின்றன. ஆனால், அரசியல் பலப்பரீட்சை இவ் விவாதங்களுக்கான வாய்ப்புகளைத் தருவதாக இல்லை. ஆளும் கன்சவேட்டிவ் கட்சிக்குள் காணப்படும் பிளவுகள் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் காணப்படுகின்றன. இதனால், இரு பிரதான கட்சிகள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதால் அரசியல் தோல்விகள் ஏற்படலாம் என இருசாராரும் கருதுகின்றனர். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை ஆதரித்த மக்களில் பலர் தற்போது மனமாற்றம் கொண்டுள்ளனர். இதனால், தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டிலும் மாற்றங்களைக்காண முயற்சிக்கின்றனர்.

சமீப காலமாக அரச தரப்பினர் ஒப்பந்தம் சாத்தியமில்லை எனக் கருதி, அவ்வாறான ஒரு சூழலில் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைத் தடுக்க சில ஏற்பாடுகளைச் செய்துவருவது, தமது கட்சியின் ஐரோப்பிய எதிர்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்மேல் மக்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நடத்தப்படுவதாக சில செய்தி ஊடகங்கள் ‘கிண்டல்’ செய்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற எடுக்கும் முயற்சிகள், மக்களின் வாழ்வில் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்பதற்கான எந்தவித நம்பிக்கையும் அற்ற சூழலே தற்போது காணப்படுகிறது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ