1942இல், இலங்கையில் ‘முதலாவது’ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்!

0 17

யப்பானிய பேரரசர் அகிஹிற்ரோ பதவி துறந்திருக்கிறார். 85 வயதான அவர், 30 ஆண்டுகள் பதவியிலிருந்தார். முதுமையும், உடல் நலமின்மையும் காரணமாக, தனது கடமைகளைத் தன்னால் சரிவர ஆற்றமுடியவில்லை என்று தெரிவித்து, அதற்காக பதவியிலிருந்து விலகுவதற்கான அநுமதியைப் பெற்று, அவர் வைபவ ரீதியாக இன்று பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி தாமாகவே பதவியிலிருந்து விலகிய முதலாவது மன்னராக, அகிஹிற்ரோவின் இப் பதவிதுறப்பு பைவம் யப்பானில் வரலாறு சமைக்கிறது. அவரது மூத்த புதல்வரான முடிக்குரிய இளவரசர் நருஹிற்ரோ நாளை சிம்மாசனத்தில் அமர்கிறார்.

அரிசியல் அதிகாரம் எதனையும் கொண்டிராத, ஒரு தேசிய சின்னமாகவே யப்பானின் முடியாட்சி விளங்குகின்றது. எனினும், அதில் மக்களின் பேரபிமானத்தை பெரிதும் வென்றவராக மன்னர் அகிஹிற்ரோ திகழ்ந்தார். அவர் மன்னராகுமுன்னர், இளவரசராக இலங்கை வந்திருந்தார்.

1981இல், ஜே. ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலம். யப்பானின் முடிக்குரிய இளவரசரின் வருகையின்போது, ‘ஈழநாடு’ பத்திரிகைக்காக அவருடன் கைலாகு கொடுத்து, அவரின் இலங்கை விஜயம் முவதிலும் அவரைத் தொடர்ந்தமை நினைவில் எழுந்தாலும், பல பின்னணி சம்பவங்களும், இப்போதைய காலகட்டமும் இன்னமும் முக்கியமானவையாக வரலாற்றுடன் நினைவில் பதிவாகின்றன.

இப்போது நடைபெற்ற ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ இலங்கையை மாத்திரமன்றி, உலகையும் திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது. முஸ்லிம் தீவிரவாதமாக அடையாளப்படுத்தப்பட்டு, சர்வதேச அரங்கில் அறியப்படுகிறது. இது, இலங்கையில் நடைபெற்ற ‘இரண்டாவது’ ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’.

யப்பான் பேரரசரின் பதவிதுறப்புத்தான் இதனை இப்போது நினைவில் கொணரவைத்தது. இலங்கைமீது அந்த முதலாவது ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’, இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, யப்பானால் நிகழ்த்தப்பட்டது. பலத்த படை இழப்புக்களும், உயிரிழப்புக்களுமான அந்த வான் தாக்குதல், 1942 ஏப்ரல் 5, ஈஸ்டர் ஞாயிறு தினம் நிகழ்ந்தது.

சிங்கப்பூர் வீழ்ச்சியுற்று, கடல் பலத்தையும் பிரிட்டன் பெருமளவில் இழந்த நிலையில், இலங்கையில் நிலைகொண்டிருந்த பிரிட்டனின் கிழக்கிந்திய படையணி சோர்வுநிலையிலிருந்தது. அத்தருணத்தில், இலங்கையின் தென்புறமாக, 200 மைல் தொலைவில் நகர்ந்த யப்பானிய விமானந் தாங்கிக் கப்பல்களிலிருந்து புறப்பட்ட சுமார் நூறு போர் விமானங்களின் தாக்குதல், கொழும்பில் அந்த ஈஸ்டர் ஞாயிறு தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்தது.

நான்கு மாதங்களுக்கு முன்னர், 1941 டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை, ஹாவாய் தீவின் ‘முத்து துறைமுக’ (Pearl Harbour) தாக்குதலில் அமெரிக்காவுக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்த அதே விமானப் படைத் தலைவரின் தலைமையில், இக் கொழும்பு தாக்குதல் நடைபெற்றது.

இப்போது போலவே, அப்போதும் தாக்குதல் குறித்து கிழக்கிந்திய படையணிக்கு முதல்நாளில் தகவல் கிடைத்தது. எனினும், பெருமளவு படைகள் மாலைதீவிலேயே நிலைகொண்டிருந்தன. கப்பல் தளங்களிலும் விமான தளங்களிலும் இலக்குவைக்கப்பட்ட இத் தாக்குதல்களில், பிரிட்டிஷ் படையணிகளின் விமான எதிர்ப்புத் தாக்குதல்களும் நிகழ்ந்தன.

தாக்குதல் ஆரம்பித்த வேளையில் பொரளை, புனித லூக் தேவாலயத்தில் ஈஸ்டர் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. உள்ளூரவர்களும் இராணுவ உத்தியோகத்தர்களுமாக தேவாலயம் நிரம்பியிருந்தது.

கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் என்று, தப்பாக இலக்கு வைத்ததில், அங்கொடை மனநோயாளர் மருத்துவ நிலையம் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

அரைமணிநேரம் நீடித்த யப்பானிய விமான குண்டுவீச்சில் யப்பானிய விமானங்கள் சில கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

நான்கு தினங்களின் பின்னர் திருகோணமலை துறைமுகமும் யப்பானிய விமானங்களின் தாக்குதலுக்குள்ளானது. சீனன்குடா விமான தளத்துக்கு அருகாக, எண்ணெய்த் தாங்கிகள்மீது, ஒரு தற்கொலைத் தாக்குதலாகவே யப்பானிய விமானமொன்று மூன்று விமானிகளுடன் மோதி எரிந்தது. எழுநூறு பேர் வரையில் உயிரிழந்தனர். ஏழு தினங்கள்வரை தீ எரிந்துகொண்டிருந்தது.

‘இலங்கையையும் அதன் கடற்படைத் தளங்களையும் நோக்கி, யப்பானிய படையணி முன்னேற ஆரம்பித்தமை, யுத்தத்தின் ஆபத்தான ஒரு தருணமும், எனக்கு வெகுவாக எச்சரிக்கையூட்டிய ஒன்றுமாகும்’ என்று, பிரிட்டிஷ் பிரதமர் வின்சன்ற் சேர்ச்சில் இவ்வேளையில் தெரிவித்தார்.

பொதுநல நாடுகளில் யுத்த முயற்சிகளைத் தகர்ப்பதும், கிழக்கிந்திய படையணியை ஆசிய பிராந்திய கடற்பரப்பிலிருந்து வெளியேறவைப்பதும் யப்பானின் நோக்கமாகவிருந்தது. இலங்கையில் அப்போது, அதற்கு ஆதரவான ஒரு போக்கும் ஒரு தரப்பில் இருந்தது. பிரிட்டன் மீதான ஓர் அதிருப்தி பரவ ஆரம்பித்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தில் அங்கம்வகித்த இளம் உறுப்பினர்களான ஜே. ஆர். ஜயவர்த்தனவும் டட்லி சேனநாயக்கவும் பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்கான கூட்டு முயற்சிகளில், அப்போது யப்பானுடன் பேச்சுக்களை நடாத்தினார்கள்.

யுத்தம் முடிந்த பின்னர், உலக நாடுகளுடன் யப்பானை மீள இணைத்துக்கொள்ளும் ‘சன்பிரான்சிஸ்கோ உடன்படிக்கை’யில் ஜே. ஆர். ஜயவர்தன மிக முக்கிய பங்காற்றினார்.

சன்பிரான்சிஸ்கோவில், 1951 செப்ரெம்பர் 8ஆம் தேதி அந்த உடன்படிக்கை கைச்சாத்தானபோது, இலங்கையின் நிதி அமைச்சராகவிருந்த அவர், ‘அன்புதான் உலக மகா சக்தி’ என்ற புத்தரின் போதனையைச் சாற்றி எடுத்த நடவடிக்கைகளும், ஆற்றிய உரையும் பிரசித்தமானது.

இரு நாடுகளுக்குமிடையே ஜே. ஆர். மூலமான இந்த நட்பின் அடையாளமே, ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாகவிருந்தபோது, 1982 பெப்ரவரி 15ஆம் தேதி, யப்பானிய மக்களால் இலங்கை மக்களுக்கு அளிக்கப்பட்ட ‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி சேவை.

ஜயவர்த்தனபுரவில் அமைந்த புதிய பாராளுமன்ற கட்டமும் இத்தகைய ஒரு வெளிப்பாடானதேதான்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ