தாய்லாந்து முடிசூடலில் சைவமும் தமிழும்

0 44

பௌத்த இராசதானியின் முடிசூட்டு வைபவத்தில் சைவமும் தமிழும் காலம்காலமாய்ச் சிறக்கிறது. தாய்லாந்து மன்னர் ‘பத்தாவது ராமா’வின் முடிசூடல் கடந்த வாரம் முழுவதும், பாங்கொக்கில் பெரும் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 800 ஆண்டுகள் கால பாரம்பரியத்தைக்கொண்டது தாய்லாந்தின் இம் மன்னர் பரம்பரை.

தாய்லாந்தில் அரச மதமாக உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் இல்லாவிடினும், மன்னர், தேரவாத பௌத்தராக இருக்கவேண்டும் என்பதும், ஏனைய மதங்களோடு பௌத்த மதத்தை அவர் பேணிக் காக்கவேண்டும் என்பதும் வரையறையானது.

93 வீதத்துக்கும் அதிகமான பௌத்தர்களுடன், 0.06 வீதமானவர்கள் அங்கு இந்துக்களாகவிருக்கின்றனர். ஆனால், மன்னனின் முடிசூட்டல் சடங்குகளிலும், அரச மதச் சம்பிரதாயங்களிலும் பிராமணர்கள் அங்கு அதி முக்கிய இடம்பெறுகின்றனர்.

இறைவனின் மறு அவதாரமாகவே கொண்டாடப்படும் மன்னன், ‘தேவ ராஜா’ என்று அழைக்கப்படுகிறான். அந்தவிதத்தில், முடிசூடலுக்கு முன்னர், ஒன்பது நதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நீரால் அவனுக்கு ‘ராஜ அபிஷேகம்’ நடக்கிறது. முடிசூட்டு விழாவில், இப் பிராமணரே தம் கைகளால் முடியைச் சூடக் கொடுக்கின்றனர்.

‘தேவசதன்’ எனப்படும் சிவ-விஷ்ணு ஆலய பிராமணர்கள், மன்னனின் ஆஸ்தான அந்தணர்களாக விளங்குகின்றனர்.

அரசன் ‘சத்திரிய’ குலத்தவனாதல்வேண்டும் என்ற இந்து வேத தத்துவமும், தர்மத்துடன் நாட்டை அவன் ஆளுவதற்கான பௌத்த தத்துவமுமாக, இந்த இருவகைக் கோட்பாடுகள் தாய்லாந்தின் முடியாட்சியில் விளங்குகின்றன. இதனால், ‘தேவ ராஜா’, ‘தர்ம ராஜா’ என்றும் அழைக்கப்படுகிறான்.

இப்பொழுது, மே 4ஆம் தேதி, தாய்லாந்தில் நிகழ்ந்த மன்னன் வஜிரலோங்கோமின் முடிசூடல், 69 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு நடைபெற்றது. 1927இல் முடிசூடிய தந்தையார் பூமிபொல் அடுல்யதேஜ் (9ஆவது ராமா) 2016இல் காலமானதையடுத்து, அவரது மறைவின் துக்க அநுட்டிப்பு காலத்தின் பின்னர் கடந்த வாரம், முடிக்குரிய இளவரசரான இவர் முடிசூடினார். 23.6 மில்லியன் ஸ்ரேர்ளிங் பவுண்கள் அளவிலான செலவில் இம் முடிசூட்டு விழா அங்கு நடைபெற்றிருக்கிறது. தாய்லாந்து மக்கள் பெரும்பாலோர் தம் வாழ்நாளில் கண்ட ஒரே முடிசூட்டு விழா இது.

கீழைத் தேய நாடுகளில் பரவியிருந்த சோழ மன்னர் ஆட்சியின் விழுமியம் இது என்பதைச் சொல்கிறார் ‘தமிழ்த் தூது’ தனிநாயக அடிகளார். இம் முடிசூட்டு சடங்கில் ஓர் அங்கமாக, இப் பிராமணர்கள் இங்கு திருவெம்பாவை பாடல்களை இசைக்கின்றனர். தாய்லாந்தின் ‘தேவசதனி’ல் வதியும் இப் பிராமணர்கள் இராமேஸ்வரத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.

‘அங்குள்ள பழம்பொருள்துறை அறிஞர் இளவரசர் தானி என்பவரின் உதவியைக்கொண்டு, அப் பிராமணர்கள் இருக்கும் கோவில்களுக்குச் சென்றேன். கோவிலொன்றில் அவர்களுடைய அரச குருவைக் கண்டு, தாய் மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடும் தமிழ்ப் பாக்கள் யாவை என்று வினவியபொழுது, அரச குரு அவர்கள், ‘தாய்’ மொழியிலும், கிரந்தத்திலும் எழுதிய சில ஏடுகளை எடுத்துப் படித்தார். அவர்களுடைய ஒலித்தல்முறை மிகவும் வேறுபட்டிருந்தாலும், பண்டுதொட்டு வாழையடிவாழையாகப் பாடிவரும் பாணியில் அவர் அப் பாடல்களை இசைத்தனர். அவை, மணிவாசகப் பெருமானின், “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும்…’’ – எனத் தொடங்கும், திருவெம்பாவையின் முதல் இரு பாக்கள் என்று உணர்ந்தேன்.’ – இவ்வாறு, திருவாசகத்தின் யோக்கியதையாக திகழ்ந்த தனிநாயக அடிகளார் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

‘ஒருகால் இந்து சமயத்தைத் தழுவி, பிற்காலத்தில் புத்த மதத்தை மேற்கொண்ட காலத்திலும், தாய் மன்னர் இந்துப் பிராமணரைப் போற்றி, அவர்களின் சடங்குகளுக்கும், தமிழ் மொழிப் பாடல்களுக்கும் தம் அரண்மனையில் இடம் கொடுத்திருந்தனர். இது, தமிழ்ப் பண்பாடும், செல்வாக்கும் அங்கு எத்துணை வேரூன்றியிருத்தல்வேண்டும் என்பதை காட்டுகிறது’ என்று சொல்லும் அவர், தை மாதத்தில் தாய்லாந்தின் பேரூர்களிலெல்லாம் திருவெம்பாiவை, திருப்பாவை கொண்டாடப்பட்டதைச் சொல்கிறார். திருப்பாவைக் கொண்டாட்டங்களின்போது, வீதிகளில் மக்கள் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த பெரும் நிலை மரங்கள் இன்னமும் காணப்படுகின்றன என்று தனிநாயக அடிகளார் குறிப்பிட்டிருந்தபோது, மாமல்லபுரத்தில் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் நிர்மாணிக்கும் பரத இளங்கோ ஆசிய கலாசார ஆராய்ச்சி மையத்திலும் அது காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை அண்மையில் கண்டேன்.

பத்மாவின் நாட்டிய துறை ஆராய்ச்சியில் தாய்லாந்தும் தனித்து விளங்குகிறது. அருங்காட்சியகமும், ஆராய்ச்சி மையமுமாக அமையும் அவருடைய இந்த வரலாற்று நிறுவனத்தில், தாய்லாந்து தொடர்பிலான வெளிப்பாடுகள் கணிசமாக தெரிகின்றன.

‘முல்லைப் பண்’ என்று, சங்க இலக்கியங்களில் பேசப்படும் ‘மோஹன’ இராகத்தில் தாய்லாந்தின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

‘சீயம்’ என்று அழைக்கப்பட்ட தாய்லாந்தில், 1932இல் ஏற்பட்ட அமைதிப் புரட்சியையடுத்து, பாராளுமன்ற முறைமையுடனான முடியாட்சியாக அது இப்பொழுது விளங்குகிறது.

ஆக, பௌத்த தர்மத்தைத் தோற்றுவித்த புத்த பகவான் அவதரித்த நேபாளம், இந்திய துணைக்கண்டத்தில் ஒரே இந்து இராச்சியமாக திகழ்ந்தது. நேபாளத்திலுள்ள லும்பினியில் கௌதம சித்தார்த்தன் பிறந்தார்.

ஷா, ரானா பரம்பரை மன்னரின் ஆட்சியில், நேபாளத்து இந்து இராச்சியம் சுமார் 250 ஆண்டுகள் நீடித்தது. 1990களில் ஆரம்பித்த உள்நாட்டு யுத்தமும், மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சிகளும் தொடர்ந்த வேளையில், ஆட்சியிலிருந்த மன்னர் பிரேந்திரா, குடும்பத்துடன் படுகொலைசெய்யப்பட்டார்.

2001 ஜூன் முதலாம் தேதி, முடிக்குரிய இளவரசரான டிபேந்திரா தன்னிச்சையாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் மன்னர், மகாராணி உள்பட, அரச குடும்பத்தில் ஒன்பதுபேர் உயிரிழந்தனர். தன்னையும் சுட்டுக்கொண்ட முடிக்குரிய இளவரசர், ‘கோமா’ நிலையில், மூன்று தினங்கள் மன்னராகவிருந்து மரணமானார்.

மன்னர் பிரேந்திராவின் சகோதரர் கஜனேந்திரா மன்னராக பதவியேற்றிருந்தபோது, நேபாள அரசியல் நிர்ணய சபை, 2008இல் நேபாளத்தை ஜனநாயக சமஷ்டிக் குடியரசாக பிரகடனம்செய்து, முடியாட்சியையும் ஒழித்தது.

மத ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிக அந்நியோன்ய நட்புநாடுகளாக நேபாளமும் இலங்கையும் விளங்குகையில், நேபாள மன்னர்கள் இலங்கைக்கு பலதடவைகளில் விஜயம்செய்தனர். மன்னர் பிரேந்திராவும், மகாராணி ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மியும் 1979இல் அரச விஜயம் மேற்கொண்டபோது, அவர்களுடன் கைகுலுக்கியமை பத்திரிகையாளனின் சிறப்புரிமை.

  • மாலி

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ