தமிழர் பிரச்னையை ஆராய புதுடில்லி வாருங்கள் – இலங்கை வந்த பிரதமர் மோடி கூட்டணியினருக்கு அழைப்பு

0 26

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வ.நதிருந்தார். இன்று காலை இலங்கையை வந்தடைந்த இந்திய பிரதமரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.

தொடர்ந்து, ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினால் தாக்குதலுக்குள்ளாகிய கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை இந்திய பிரதமர் பார்வையிட்டார்.
இதன்போது கொழும்பு மாவட்ட போராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ உட்பட பலரும் உடனிருந்தனர். தாக்குலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியதுடன், கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைபெற்றுவருபவர்களின் புகைப்படங்களையும், ஆலயத்தில் சேதமடைந்த பகுதிகள் தொடர்பான தரவுகளையும் ஆராய்ந்தார்.

அதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப்பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார். அங்கு அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டதுடன், 19 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு, மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் அமைச்சர்கள் பலரும் இந்தியப் பிரதமருக்கு கைலாகு கொடுத்து வரவேற்பளித்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய அமைச்சர் குழுவினருக்குக் கைலாகு கொடுத்து வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில், இந்தியப் பிரதமரின் வருகையை நினைவுகூரும் முகமாக அசோக மரம் ஒன்றும் நாட்டப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் பிரதமருக்கு அளிக்கப்பட்ட விருந்துபசார நிகழ்வில், அமைச்சர்கள், ஆளுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். மதிய நேர விருந்துபசார நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி மாளிகையிலுள்ள நினைவுப் பதிவேட்டிலும் இந்தியப் பிதமர் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் இந்தியப் பிரதமருக்கு, நினைவுச் சின்னமொன்றையும் ஜனாதிபதி வழங்கினார்.
ஜனாதிபதி மாளிகையில் இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத தாக்குதலின் காரணமாக பதற்றநிலை காணப்படும் இந்த சூழ்நிலையில், தனது நாட்டுக்கு வருகைதந்து, உலகத்தினருக்கு வழங்கிய நற்செய்தி தொடர்பில் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். அயல் நட்பு நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நம்பிக்கை மற்றும் நட்புறவு, இந்திய பிரதமரின் இந்த விஜயத்தின்மூலம் மேலும் வலுவடைந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விஜயமானது, இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் அயல் நட்பு நாடுகளுக்கு உறுத்துணையாக இருப்பது தனது கடமையாகுமென்று இந்திய பிரதமர் நரேந்தர மோடி தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த இந்திய பிரதமர், இந்தியா இலங்கைமீது வைத்துள்ள நம்பிக்கை எதிர்காலத்திலும் இவ்வாறே பாதுகாக்கப்படுமென தெரிவித்தார். அத்தோடு, அனைத்து தரப்புகளின் உதவியுடன் சகல இனத்தோருக்கும் நீதியை நிலைநாட்டும் வகையில் கடமையாற்றிவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்திய பிரதமர் தனது மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்காகிய இரு நாடுகள் என்ற வகையில், பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கவேண்டுமென்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டுமென்றும் இருநாட்டு தலைவர்களும் இணக்கப்பட்டனர்.
இருநாடுகளுக்கிடையில் நீண்டகால ஆழமான நட்புக்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை, ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட கொள்கையே காரணமாக அமைந்திருப்பதாகவும், இருநாடுகளுக்குமிடையிலான உறவினை மேலும் வலுபடுத்திக்கொள்ளவேண்டுமென்றும் இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கினர்.
தனக்கு வழங்கிய உற்சாகமான வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் தனது நன்றிகளை தெரிவித்தார்.

பின்னர் இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் ஆரம்பத்தில், நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றமைக்காக இரா. சம்பந்தன் வாழ்த்துத் தெரிவித்தார்.

திட்டமிட்டிருந்ததை விடவும் குறைவான நேரமே இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில், சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ இந்தியா ஆகக்கூடிய கரிசனை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
இக்கோரிக்கையை செவிமடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்து தன்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியாவுக்கு வருகைதருமாறும், இதுகுறித்து விரிவாகப் பேசமுடியும் எனவும் தெரிவித்த இந்தியப் பிரதமர், கூட்டமைப்பின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படி அங்கிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

பின்னர் பலாலி விமான நிலையத்தைப் பற்றியும், கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். முதலில் சிறிய விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்தலாம் எனவும் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.
இதனைச் செவிமடுத்த இந்தியப் பிரதமர், குறித்த விடயத்தில் கவனம் செலுத்தும்படி தூதரக அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இன்றைய விஜயத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், அவர் பேச்சுக்களை நடத்தினார்.

இத்துடன், இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகளையும் கொழும்பில் இந்தியப் பிரதமர் சந்தித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையிலான பயணங்களை மேற்கொண்டு, பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நரேந்திர மோடி, மீண்டும் இன்று பிற்பகல்வேளை இந்தியா புறப்பட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை வழியனுப்பிவைத்தார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ