இலங்கையில் மோடியின் அந்தோனியார் ஆலய விஜயம் சர்வமத சமரசமா?

0 19

-ஆர்.மணி

அறிவு ஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் என்று, பலரின் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி விட்டு, நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் பாரதீய ஜனதா கட்சி இந்தியாவில் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுவிட்டது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று, இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டார். மக்களவையின் மொத்த எண்ணிக்கை 542 இடங்கள். இதில், பாஜக 303 இடங்களை வென்றுவிட்டது. மே 26ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பில் மோடியுடன் சேர்த்து, 58 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டுவிட்டனர். இந்த அமைச்சரவையின் முக்கிய அம்சங்கள் இவைதான்;

  1. மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் இம்முறை மோடி அமைச்சரவையில் இடம் பெறவில்லை. முதல் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்து, ராஜ்நாத் சிங் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக மாறி விட்டார்.
  2. புதிய வரவுகளில் முக்கியமானவை; உள்துறை அமைச்சராக பாஜக தேசீய தலைவர் அமீத்ஷா பொறுப்பேற்றுக்கொண்டமை. வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்ஷங்கர் வந்தமை மற்றும், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டமை. ஜெயஷங்கரும், நிர்மலா சீதாராமனும் பிறப்பால் தமிழர்கள் அதாவது, அவர்களது தாய் மொழி தமிழ் என்பது முக்கியமானது.
  3. அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மோடிக்கு அடுத்த அசைக்க முடியாத சக்தியாக அமீத்ஷா விஸ்வரூபம் எடுத்து விட்டமை இந்த தேர்தலின் மற்றுமொரு முக்கிய நிகழ்வு. பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது போன்ற விஷயங்களுக்காக நியமிக்கப் பட்ட எட்டு அமைச்சரவை குழுக்கள் அனைத்திலும் அமீத்ஷா உறுப்பினராக இருக்கிறார்.
    இந்த தேர்தலின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இந்தியாவின் 29 மாநிலங்களில், பாஜக இதுவரையில் கால்பதிக்காத இடங்களில்கூட இந்த தேர்தலில் அது தடம் பதித்ததுதான். மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா மாநிங்கள்தான் இவை. மேற்கு வங்கத்தின் 42 எம்.பி தொகுதிகளில் 18 இடங்களை பாஜக வென்றுவிட்டது. இது, இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது. மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 22 இடங்களை வென்றது. 35 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 40 இடங்களில் கட்டுப்பணம் இழந்தது. கட்டுப்பணத்தை மட்டும் மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் தக்கவைத்துக்கொண்டது. இரண்டாவது, ஒரிஸ்ஸா மாநிலத்தின் 20 தொகுதிகளில் பாஜக 8 தொகுதிகளை வென்றுவிட்டததுதான்.

கடந்த தேர்தலில் 44 இடங்களை வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால், கடந்த முறையை போலவே, மக்களவையில் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காமல் போய்விட்டது. ஏனெனில், மொத்தமுள்ள 542 இடங்களில் பத்தில் ஒரு பங்கு இடமாவது அதாவது, 55 எம் பி க்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆகவே, 55 எம் பி க்கள் இல்லாததால் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரசுக்கு இல்லாமல் போனது.

பெரும்பாலான வட மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்தியாவின் எம்.பி தொகுதிகளை வென்ற பாஜக, தமிழகம் மற்றும் கேரளாவில் மண்ணை கவ்வியது. தமிழகம் மற்றும் புதுவையின் தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் பாஜக – அதிமுக – பாமக – தேமுதிக கூட்டணி வென்றது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனீ மக்களவை தொகுதியில் வென்றார். பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே மண்ணைக் கவ்வியது.

மோடியின் இந்த வெற்றிக்கு மாபெரும் காரணம், தேசீய அளவில் எதிர்கட்சிகளிடம் இல்லாமல்போன ஒற்றுமைதான் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது. காங்கிரஸ் – இடதுசாரிகள் – பகுஜன் சமாஜ் கட்சி – சமாஜ்வாதி கட்சி – திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஏற்பட்டிருந்தால் 300 இடங்களில் பாஜகவை தோற்கடிக்க முடிந்திருக்கும் என்று ஒரு புள்ளி விவரம் தெளிவாக கூறுகிறது. தேர்தலுக்கு பிந்திய கூட்டணிதான் சாத்தியம், தேர்தலுக்கு முந்திய கூட்டணி சாத்தியமில்லை என்று, காங்கிரசுடனான உறவுபற்றி வாய் கிழிய பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்று வரலாறு காணாத தோல்வியை தழுவிக்கொண்டிருக்கிறது. மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தம் மூன்று இடங்களே கிடைத்துள்ளன. இதில், இரண்டு தமிழகத்தில் இருந்தும், ஒன்று கேரளத்திலிருந்தும் கிடைத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடங்கள். இரண்டும் தமிழகத்திலிருந்தே கிடைத்திருக்கின்றன. ஆகவே, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இந்தியாவின் 27 மாநிலங்களிலும் பிரநிதித்துவம் இல்லை என்பது ஒரு மாபெரும் சாதனைதான் ……

தேர்தல்களுக்கு நெருக்கமான சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து இந்திய வான்படை நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்துபோனதாக மோடி அரசு மார்தட்டிக் கொண்டது. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்தது. ஒருவர்கூட இறக்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். சர்வதேச செய்தி ஊடகங்கள் இந்தியாவின் கூற்றை எள்ளி நகையாடின. தேர்தல் வெற்றிக்காக மோடியின் நாடகம் இது என்று பாகிஸ்தானும், சர்வதேச ஊடகங்களும் தெரிவித்தன. ஆனால், இதனை தேர்தல் வெற்றிக்கு மோடி நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்பதை தேர்தல் முடிவுகள் எதிர்கட்சிகளுக்கு உணர்த்தி விட்டது.

இனி, அடுத்து என்ன நடக்கப்போகிறது இந்தியாவிலும், தமிழகத்திலும் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வியாகும். தமிழகத்தில் உள்ள அஇஅதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசு சொற்ப எம்எல்ஏக்கள் ஆதரவில்தான் தன்னுடைய வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறது. சிபிஐ நடத்தும் சில வழக்குகளில் அஇஅதிமுகவின் சில முன்னணி அமைச்சர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறார். இதனால், அவர் எந்த நேரமும் சிபிஐ போலீசாரால் கைதுசெய்யப் படுவார் என்று ஜூன் இரண்டாவது வாரத்திலிருந்து தமிழக ஆளும் வட்டாரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவலான, வலுவான ஒரு கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் வரவிருக்கும் பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல், அதாவது ராஜ்ய சபா தேர்தலில் அஇஅதிமுகவால் மூன்று இடங்கள் வெல்லமுடியும், அதில், இரண்டு இடங்களை பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், அஇஅதிமுக இதனை கொடுக்க மறுத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே, அஇஅதிமுகவை வழிக்குக் கொண்டுவர மோடி அரசு சிபிஐ அமைப்பை பயன்படுத்திக்கொள்ளும் என்று அஇஅதிமுக வின் மூத்த தலைவர்களே தனிப்பட்ட முறையில் பேசும்போது பத்திரிகையாளர்களிடம் கூறுகின்றனர்.

“தமிழகத்துக்கான நலத்திட்ட உதவிகள் இனிமேல் கணிசமாக குறைக்கப்படும். எந்தளவுக்கு தமிழகத்தை தண்டிக்க முடியுமோ அந்தளவுக்கு மோடி தண்டிப்பார். மோடியும், அமீத்ஷா வும் தமிழகத்தில் பாஜக மண்ணைக் கவ்வியதை இப்போதைக்கு மன்னிக்க மாட்டார்கள்” என்கிறார் தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவர். “கேரளாவிலும் பாஜக படுதோல்வி கண்டது. கேரளத்தின் மொத்தமுள்ள 20 எம் பி தொகுதிகளில் ஒன்றைக்கூட பாஜக வெல்லவில்லை. ஆனால், தேர்தலுக்கு பிறகு கேரளா சென்ற மோடி, கேரளத்தின்மீது தனக்கு தனி அக்கறை இருப்பதாக சொன்னார். இதற்கு காரணம், கேரளாவில் பாஜக தோற்றாலும், அங்கே பாஜகவின் அமைப்புரீதியிலான அரசியல் பலம் கணிசமாக தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பதுதான். ஆனால், தமிழகத்தில் நிலைமை முற்றிலும் வேறு. தமிழகத்தில் பாஜக வுக்கு சொல்லும் அளவுக்கு சொற்ப ஆதரவும் இல்லை, பற்றிக்கொண்டு படர கொழு கொம்புகளும் இல்லை” என்று மேலும் சொல்கிறார் அந்த பாஜக தலைவர்.

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க நடிகர் ரஜினிகாந்தை மோடி விரும்புகிறார் என்று ஒரு வலுவான தகவல் நிலவுகிறது. மோடியின் பட்டாபிஷேகத்துக்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு வந்தது. பட்டாபிஷேகத்துக்கு போன ரஜினிகாந்துக்கு உட்கார நாற்காலி கிடைத்தது. ஆனால், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு நாற்காலி கிடைக்கவில்லை. உடனே, மூத்த மத்திய அரசு அதிகாரிகள் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைமை செயலாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியை லதா ரஜினிகாந்துக்கு ஒதுக்கி, அதில் லதா உட்காரவைக்கப்பட்டார். ஜுன் நான்காவது வாரத்தில் ரஜனிகாந்துக்கு பிரதமர் மோடி சந்திக்க அழைப்பு கொடுத்திருப்பதாக வலுவான தகவல் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்த சந்திப்பில், பாஜகவுக்கு ரஜினிகாந்தை இழுப்பதோ அல்லது ரஜினியை தனிக் கட்சி ஆரம்பிக்க சொல்லி, அதனை பாஜகவுடன் கூட்டணி சேரவைத்து, தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர மோடியின் கட்சி விரும்பவதாகவும் சில பாஜக பிரமுகர்கள் சொல்லுகின்றனர். ஆனால், ரஜினியின் மனநிலை அறிந்தவர்களுக்கு இதெல்லாம் எவ்வளவு கடினமானது என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது.

மோடி இரண்டாவது முறையாக பிரதமரானவுடன் முதலில் மாலைதீவுக்கு போனார். பின்னர் இலங்கைக்கு போனார். இலங்கையில் ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் அங்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மூன்று தேவாலயங்களில் ஒன்றான புனித அந்தோனி தேவாலயத்துக்கு போன மோடி, அங்கு கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், பல முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களுடன் பேசினார். தேவாலயத்தில் அங்கி அணிந்த கிறிஸ்த்துவ பாதிரியார்களுடன் மோடி நின்றுகொண்டிருந்தமை காலத்தின் கோலம்தான். பெரும்பான்மை இந்து மத வெறியின் கதாநாயகனாக விளங்கும் மோடி, ஒரு மாற்று மதத்தின் வழிபாட்டுத் தலத்தில் நின்றுகொண்டிருப்பது என்பது, அனைத்து மதங்களையும் மதிக்கும் தன்மை தனக்குண்டு என்ற பொய்ப்பித்தலாட்ட நாடமா அல்லது, தான் உண்மையிலேயே இந்து மதத்துக்காக மட்டும் ஆட்சிக் கட்டிலில் இல்லை; மாறாக, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் தன்மையையும் கொண்டிருக்கிறேன் என்பதை உலகுக்கு உணர்த்தும் எண்ணத்திலா என்பது, தற்போதைக்கு மோடிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்தான். தேவாலயத்துக்கு போன மோடி, ஏதாவது ஒரு பள்ளிவாசலுக்கு இந்தியாவுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ போவாரா என்பது முக்கியமான கேள்விதான். ஆனால், அதற்கான பதில் இதுவரையில் மோடியிடமிருந்தும் வரவில்லை; இதுவரையில் மோடியை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்தும் வரவில்லை.

இலங்கையின் சமீபத்திய குண்டுவெடிப்புகளுக்கு காரணமான ஐஎஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக குற்றஞ்சாட்டி, தமிழகத்தின் கோவையில் சில இஸ்லாமியர்களை இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் தீவிரவாத எதிர்ப்பு படையான தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) கைதுசெய்திருக்கிறது. இது, இந்தியாவில் உள்ள ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு, சங்கிகளுக்கு காதில் தேனாய் வந்து பாயும் செய்திதான் என்பதில் சந்தேகமில்லை.

மோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் அமைதிக்கே ஆபத்தை விளைவிக்கும் ஒரு துன்பியல் நிகழ்வு என்று, சர்வதேச புகழ்பெற்ற ‘தி எகானமிஸ்ட்‘ வார இதழ் தலையங்கம் எழுதியது. இதனை ஒப்புக்கொள்ள ஒருவர் விஞ்ஞானியாய் இருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதே இன்றைய நிதர்சனம் ………

.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ