பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றிய வெளியேற்றம் சர்வதேச அரசியலில் பெரும் தாக்கம் விளைக்கும்

0 21

பிரதமர் பதவியைக் காவு கொள்ளும் பிரித்தானிய அரசியலும். ஐரோப்பிய வெளியேற்றமும்
(பாகம் – 2)

வி. சிவலிங்கம்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாலும், தென் அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதாலும், வட அயர்லாந்து பிரித்தானியாவின் பகுதி என்பதால் அவர்களும் பிரிந்து செல்லவேண்டியுள்ளது. இதன் காரணமாக, வட, தென் அயர்லாந்துகளிடையே பாதுகாப்பு எல்லைகளை வரையறுக்கவேண்டிய நிலமைகள் ஏற்பட்டன. ஆனால், ‘பெரியவெள்ளி’ ஒப்பந்தத்தின் பிரகாரம், இரண்டு அயர்லாந்துக்குமிடையே தடைகள் இருக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இதனால், பிரித்தானியா வெளியேறும்போது, அயர்லாந்துப் பிரச்னை பெரும் தடையாக இருந்தது. தனியான விஷேச ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, பிரதமர் திரேசா மேக்கு ஆதரவு வழங்கிவரும் வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியன் கட்சியினரும் இரண்டு அயர்லாந்துகளிடையே தடைகள் போடப்படுவதை விரும்பவில்லை.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருள்கள் போக்குவரத்தில் சுங்கவரி, பொருள்கள் பரிசோதனை என, பல பிரச்னைகள் எழுந்தன. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்கம் தொடர்பான அலுவல்கள் முன்னிருந்தவாறு தடையின்றித் தொடரவேண்டுமென கன்சவேட்டிவ், தொழிற்கட்சி என்பவற்றுக்கிடையே பலமான ஆதரவு இருந்தது. ஆனாலும், வெளியேறுவது என மக்கள் தீர்மானித்தமையால் முதலில் முழுமையாக வெளியேறி, அதன் பின்னர் அவைபற்றிப் பேசலாம் என்ற கருத்துக்களும் நிலவின.

நாம், இவை பற்றிய சமீபகால நிகழ்வுகளைப் பார்க்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் என்பது, மூன்று நாடுகள் சம்பந்தப்பட்டதாக உள்ளது. அதாவது. தென் அயர்லாந்து, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன. இங்கு, ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அதாவது, இரு பிரதான கட்சிகளிடையேயும் விலகுவது, இணைந்திருப்பது தொடர்பாக பலமான ஆதரவு, எதிர்ப்பு நிலமைகள் உண்டு. இவை எவ்வாறான பலத்தில் உள்ளன என்பதை அறிவதும் அவசியமானது. இதனைக் கருத்தில்கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்கான தொடர்ச்சியான வாக்கெடுப்பும் நடாத்தப்பட்டது. இச் சிந்தனையின் பிரகாரம் பிரதமர் நான்கு முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

  1. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதானால், சகலமும் அடங்கிய நிரந்தர சுங்க இணைப்பு இருப்பதை ஏற்றுக்கொள்ளல்.
  2. ஐரோப்பிய சுயாதீன வர்த்தக சபையில் அங்கத்துவம் பெறுவதோடு, ஐரோப்பிய பொருளாதார பகுதியில் தொடர்ந்து இருப்பது.
  3. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான எந்த ஒப்பந்தமும் மக்களின் அனுமதியையும், பாராளுமன்ற ஆதரவையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக பெறவேண்டும்.
  4. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் (வெளியேறும் முயற்சியை முற்றாகக் கைவிடுதல் உள்பட) மக்கள் வாக்கெடுப்புக்கு விடுதல்.

மேலே குறிப்பிட்ட அம்சங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மென்மையாக அல்லது படிப்படியாக வெளியேறும் வகையைக் குறிக்கிறது. இவற்றைக் கட்சி மட்டத்தில் பிரதமர் கொண்டுசென்றபோது கட்சிக்குள்ளும், அமைச்சர்கள் மட்டத்திலும் வெளிப்படையான பிளவுகள் தெரிந்தன. கட்சியின் கட்டுப்பாடு குலைந்தது. அமைச்சர்கள் பலர் பிரதமரின் போக்குக் குறித்து கடுமையான கண்டனங்களையும், அவர் பதவி விலகவேண்டுமெனவும் குரல்கள் எழுப்பினர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்க வைக்க பிரதமர் மூன்றாவது தடவை முயற்சித்தபோது, அவ்வொப்பந்தம் முன்னரைவிட அதிகளவு மாற்றத்தைக் கொண்டிருக்கவேண்டும் என சபாநாயகர் கட்டளையிட்டார். ஏனெனில், ஒரே ஒப்பந்தத்தினைப் பாராளுமன்றம் இரண்டு தடவைகள் விவாதிப்பது அர்த்தமற்றது என்பதாகும். ஒரு தடவை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சித்தபோது அவரது கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகள் அதனைச் சமர்ப்பிக்க முடியாத நிலைக்குத் தள்ளின.

இச் சந்தர்ப்பத்தில் இக் கட்டுரையைப் படிக்கும் வாசகரின் கவனத்திற்கு பின்வரும் அம்சத்தைத் தருவது முக்கியமானதாகும். அதாவது, பாராளுமன்றத்தில் வெளியேறும் ஒப்பந்தம் ஒவ்வொரு தடவையும் சமர்ப்பிக்கும்போது, அது முன்னரைவிட பாரிய அளவில் மாற்றமானதாக அமைதல் அவசியம் என்பதாலும், பிரதமரால் பாரிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ள முடியவில்லை என்பதாலும், அவர் அவ்வொப்பந்தத்தினை இரு பிரிவுகளாக்கி, ஒரு பிரிவை மட்டுமே சமர்ப்பித்தார். இந்த ஒப்பந்தத்தில் இரு பிரிவுகள் இருந்தன. முதலாவது பகுதி, வெளியேறும் ஒப்பந்தத்தின் சட்டபூர்வமான பகுதி அதாவது, இரு சாராரும் வெளியேறும்போது கடைப்பிடிக்கவேண்டிய சட்டபூர்வமான பகுதியாகும். அடுத்தது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு எவ்வாறாக அமையும்? என்பது குறித்த அரசியல் பிரகடனமாகும். இதில், அரசியல் பிரகடனத்தை அவர் கைவிட்டார். இதற்கான பிரதான காரணம், எதிர்கால அரசு எவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது என்பதால் அதனைக் கைவிட்டதாகக் கருதுகின்றனர்.

மிகுந்த பல முயற்சிகளின் பின்னர், பிரதமர் நான்காவது தடவையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, அவரது ஆட்சிக்கு ஆதரவு வழங்கிவரும் ஜனநாயக யூனியன் கட்சியின் 10 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர். ஆளும் கன்சவேட்டிவ் கட்சிக்குள் காணப்பட்ட பிளவுகள், தேசிய ஐக்கிய அரசு ஒன்றினை உருவாக்கும்படி முன்னாள் பிரதமர் ஜோன் மேஜர் அறிக்கை விடும் அளவுக்குச் சிக்கலாகின. அது மட்டுமன்றி, இந்த இழுபறி தொடர்ந்து செல்லுமாயின், தேர்தலுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என பிரதமர் திரேசா மே பயமுறுத்தும் அளவுக்கு நிலைமைகள் சென்றன. பிரதமரின் இவ் வார்த்தைகள், தமது அரசின்மீது தாமே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிவதுபோல அமைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கென மக்கள் தீர்மானித்ததற்கிணங்க, பிரதமர் பிரமாணம் 50ஐ செயல்படுத்தியதால், மார்ச் 29ஆம் தேதி (29-03-2019) அதாவது, ஐரோப்பிய ஒன்னியத்திலிருந்து வெளியேறும் இறுதி நாள் அண்மித்துச் சென்றது. ஆனாலும், ஏதுவித முடிவும் காணப்படாமையால், 50 பிரமாணத்தைச் செயல்படுத்தவேண்டாமெனக் கோரி, 60 இலட்சம் மக்கள் கையொப்பமிட்டு அரசிடம் சமர்ப்பித்தனர்.

மார்ச் 29ஆம் தேதி நெருங்கும் நிலையிலும், வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் தயாராகாத நிலையிலும் மார்ச் 26ஆம் தேதி, பிரதமர் பாராளுமன்றத்தில் புதிய அறிவித்தலை விடுத்து, உறுப்பினர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதாவது, தற்போது சமர்ப்பித்துள்ள வெளியேறும் ஒப்பந்தத்தினைப் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளுமானால், தான் திட்டமிட்டதற்கு முன்னதாகவே பிரதமர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். பிரதமரால் நாடனகாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வெளியேறும் ஒப்பந்தம் 344 வாக்குகள் எதிராகவும், 286 வாக்குகள் ஆதரவாகவும் வாக்களிக்கப்பட்டு, 58 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், முன்னர் இவ் வெளியேறும் ஒப்பந்தத்தினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது 230க்கு 149 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதாவது, எதிர்த்து 81 வாக்குகள் அதிகமாக வாக்களிக்கப்பட்டது. ஆனால், தற்போது 58 வாக்குகளாக குறைவடைந்தது. இவை, பாராளுமன்றத்தின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர்த்தின.

பாராளுமன்றம் வெளியேறும் ஒப்பந்தத்தினை நிராகரித்தமையால், பிரமாணம் 50இன் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது மேலும் 14 நாள்கள் நீடிக்கப்பட்டது. அதாவது, ஏப்ரல் 12ஆம் தேதி (12-04-2019) என நிர்ணயிக்கப்பட்டது. இத் தேதியை மேலும் நீடிக்கவேண்டுமெனில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இதர 27 உறுப்பு நாடுகள் தீர்மானிக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டது.

ஆக, மேற்குறித்த நிலமைகளை அவதானிக்கும்போது, தற்போதைய பாராளுமன்றத்தின்மூலம் இப் பிரச்னையைத் தீர்மானிக்க முடியாது அல்லது அதன் எல்லையை எட்டிவிட்டது என்ற முடிவுக்கே வரமுடியும். அதாவது, பாராளுமன்றம் நிராகரித்துள்ளமை மட்டுமல்ல, வெளியேறும் ஒப்பந்தம் ஒன்று இல்லாமல் வெளியேற முடியாது என்ற கருத்தையும், ஒப்பந்தத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியும் அவை நிராகரிக்கப்பட்டமை அடையாளப்படுத்தியது.

இந் நெருக்கடிகள் முடிவுகளை எட்டாத நிலையில், இறுதித் தேதி ஏப்ரல் 12ஆம் தேதியும் நெருங்கியமையால் ஐரோப்பிய ஒன்றியம் தனது முடிவை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 10ஆம் தேதி கூடி, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியாவே முடிவு செய்யவேண்டும் எனக் கூறி, பந்தை அவர்கள் பக்கம் போட்டது. அதாவது, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதா? அல்லது ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்வதா? அல்லது காலத்தை நீட்டி, எதிர்வரும் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதா? என்பதை பிரிட்டனே முடிவு செய்யவேண்டும்.

இப் பிரச்னைகள் தொடர்பாக மக்களின் அபிப்பிராயத்தை நோக்கின், ஒப்பந்தமில்லாமலேயே வெளியேறவேண்டிய நிலை எற்படலாம் என, நாட்டின் பாதிப் பிரிவினர் கருதினர். வெளியேறவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் இதே அபிப்பிராயம் நிலவியது. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) நடாத்திய ஆய்வில், வெளியேறவேண்டும் என வாக்களித்த பிரிவினரில் 80 சதவீமானோர் பிரதமர் திரேசா மே விலகுவதற்காக நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து மிகுந்த சந்தேகத்தை எழுப்பினர். இணைந்திருக்கவேண்டுமென வாக்களித்தவர்களில் 85 சதவீமானோரும் அதே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். 63 சதவீமானோர் சாதகமற்ற ஒப்பந்தத்தை நோக்கிச் செல்வதாகக் கருதினர். அது மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்கவேண்டுமென்பதற்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. எனவே, இரண்டாவது வாக்கெடுப்புக்கான ஆதரவு உண்டு என்பதே கவனத்திற்குரியது.

சமீபகால மாற்றங்கள்
பாராளுமன்றத்திலும், நாட்டிலும் மிகவும் கடுமையான பிளவுகள் உள்ள நிலையில் பிரமாணம் 50 இன் செயல்பாடுகளை மேலும் நீடித்தல் அவசியம் என்ற கருத்து பலமாக நிலவியது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, 10.4.2019ஆம் தேதி கூடிய ஐரோப்பிய சபை வெளியேறும் தேதியை 31.10.2019 வரை நீடித்தது. இதன் பின்னணியில் இருந்த காரணங்களை அறிதல் அவசியம்.

வெளியேறும் ஒப்பந்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற பாராளுமன்றத்துக்குப் போதுமான காலத்தை வழங்குதல். அடுத்ததாக, 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையான காலப்பகுதியில் வெளியேறும் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிடில், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலை பிரித்தானியாவில் நடத்தவேண்டும் என்பதாகும். அது மட்டுமல்ல, பிரித்தானியா ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை நிறைவேற்றாத பட்சத்தில், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும். அதாவது, வெளியேறும் ஒப்பந்தம் எதிர்காலத்தில் பேசப்படமாட்டாது என்பதாகும். அத்துடன், 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிவரையான காலப்பகுதியை ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவுகள் பற்றிய பேச்சுவார்த்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அரசியல் பிரகடனம் பின்னரே பேசப்படும்.

இவ்வாறான நெருக்கடியான கால அட்டவணையை பிரித்தானிய அரசால் நிறைவேற்ற முடியவில்லை. பிரதமர் திரேசா மே பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் வெளியேறும் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலை நடத்தப்போவதில்லை எனவும், ஜூன் மாதம் முதலாம் தேதி ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்திருந்தார். இருப்பினும், பாராளுமன்றத்தைத் தம்மால் திருப்திப்படுத்த முடியவில்லை எனக் கூறிய அவர், தனது புதிய எண்ணத்தை வெளியிட்டார். இதுவரை எதிர்க்கட்சியுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர்த்து வந்த பிரதமர், தனது முயற்சிகளுக்குத் தனது கட்சி பூரண ஆதரவைத் தராததால் எதிர்க் கட்சியுடன் பேசி, புதிய வழியைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார். இம் முடிவு, கன்சவேட்டிவ் கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்தது.

தனது கட்சிக்குள் ஆதரவை இழந்த பிரதமர், அதன் பின்னரே எதிர்க் கட்சியுடன் பேசி ஒரு பொது வேலைத் திட்டத்தினைத் தயாரிக்க முடிவு செய்தார். இதனை ஏற்கெனவே தீர்மானித்திருந்தால் நிலமைகள் சுமுகமாக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அது மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் புதிதாக வெளியேறும் ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றுவதாக இருந்தால் இதுவே சாதகமான வழியாக அமைய முடியும்.

இரு தலைவர்களும் சந்தித்து தற்போதுள்ள நிலமை குறித்துத் தத்தமது நிலைப்பாடுகளை முதலில் வெளியிட்டனர். இவற்றில், பொது உடன்பாடு எட்டக்கூடியதான வெளி காணப்படவில்லை. பிரதமர் தனது அணுகுமுறையின் பாதையை விளக்கினார். அதேபோலவே, எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோபனும் சுங்க இணைப்புடன் கூடிய தமது திட்டத்தை விளக்கினார். அதன் பின்னர் இரு சாராரும் குழுக்களை அமைத்து கருத்துக்களைப் பரிமாறினர். ஆனாலும், இரு சாராரும் தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து அசைந்து கொடுக்கவில்லை. இப் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட பிரதான வேறுபாடுகளைக் குறிப்பிடுவதாயின், வர்த்தக கொள்கை, நுகர்வோர் மற்றும் தொழிலாளர் உரிமை, பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பனவற்றில் அதிகளவு வேறுபாடுகள் காணப்பட்டன.

இப் பேச்சுவார்த்தைகளின்போது காணப்பட்ட புதிய அம்சம் என்னவெனில், பிரதமர் திரேசா மே பதவியிலிருந்து விலகிய பின்னர் புதிதாக வரும் அக் கட்சியின் பிரதமர் இப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பாரா? என்பதும், இரண்டாவது வாக்கெடுப்பின் அவசியம் குறித்த விவாதங்கள் அதிகரிப்பதால் நிலமைகள் மாறலாம் என்ற அச்சமும் காணப்பட்டது. அத்துடன், இப் பேச்சுவார்த்தைகளை மே மாதத்திற்கு முன்பதாக முடித்தால் மாத்திரமே ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்களைத் தவிர்க்க முடியும் என அரசு கருதியதால், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அரசு முயற்சித்தது. பிரதமரின் இப் புதிய முயற்சிகள் தொடர்கையில் நாட்டின் நிலமை விரைவாக மாறிச் சென்றது. ஆளும் கன்சவேட்டிவ் கட்சிக்கான ஆதரவு 26 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைந்து செல்வதாக அபிப்பிராய வாக்கெடுப்புகள் எச்சரித்தன. ஐரோப்பிய எதிர்ப்புக் கட்சிகளுக்கான ஆதரவு அதிகரித்தன. தொழிற்கட்சிக்கும், பிரித்தானிய சுதந்திரக் கட்சிக்குமான ஆதரவு அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்தன. இங்கு மிக அவதானத்திற்குரிய அம்சம் எதுவெனில், ஐரோப்பிய வெளியேற்றம் குறித்து இரு பிரதான கட்சிகளான கன்சவேட்டிவ் கட்சி, தொழிற்கட்சி என்பன தெளிவற்ற கொள்கைளைக் கொண்டிருந்தமையால், அக் கட்சிகளுக்கான ஆதரவு குறைந்து, முழுமையாக வெளியேறவேண்டும் எனக் கூறும் சுதந்திரக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துச் சென்றமையாகும்.

ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல்
28 உறுப்பு நாடுகளைக்கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு 751 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஐரோப்பிய மக்கள் தொகையில் இனவாரியான அல்லது சிறுபான்மைச் சமூகங்களின் தொகை ஐரோப்பிய ஒன்றிய சமூகத்தின் 10 சதவீதமாகும். அதன்பிரகாரம் சுமார் 36 உறுப்பினர்கள் சமீபத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார்கள். இவர்களில் 19 பேர் ஆண்களும், 17 பேர் பெண்களுமாவர். இவர்களில், 6 பேர் தேசிய சிறுபான்மையினராகும். உதாரணமாக லுத்துவேனியாவில் வாழும் ரஷ்யர்கள், ஹங்கேரியில் வாழும் ரோமானியர்கள் என்போர். தெரிவு செய்யப்பட்ட 36 பேரில் 7 பேர் ஆபிரிக்க வம்சாவழியினராகவும், 6 பேர் கறுப்பு இன பெண்களுமாவர். கடந்த தேர்தலில் ஒருவரே பெண் உறுப்பினராக தேர்வானார். தற்போது இது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், 6பேர் வட ஆபிரிக்க வம்சாவழியைச் சார்ந்தவர்களாகவும், மேலும் 6பேர் மத்திய கிழக்கு வம்சாவழித் தோன்றலாகவும் உள்ளனர். இதில் இன்னொரு விசேட அனுபவம் எதுவெனில், பிரித்தானியாவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் தென் ஆசிய சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர்.

இத் தெரிவினைக் கட்சி அடிப்படையில் அவதானித்தால், 17பேர் இடதுசாரி அரசியலைச் சார்ந்தவர்களாகவும், 8பேர் லிபரல் கட்சிக்காரர்களாகவும், 11பேர் வலதுசாரி அரசியல் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். அத்துடன், சிறுபான்மைச் சமூகங்களைச் சார்ந்தவர்களைத் தேர்வு செய்த நாடுகளை அவதானிக்கையில், இவர்களில் 7பேர் பிரித்தானியாவிலிருந்தும், 6பேர் பிரான்ஸிலிருந்தும், 5பேர் ஜேர்மனியிலிருந்தும், 4 பேர் சுவீடனிலிருந்தும் தெரிவாகினர். இங்கு மேலும் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில், 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் 13 நாடுகளிலிருந்து மட்டுமே சிறுபான்மை இனக்குழுமத்தைச் சார்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான பிரித்தானிய தேர்தல்
இத் தேர்தல் கடந்த மே மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்தல் நடத்தப்படுவதற்கான காரணம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு 23.03.2019 ஆகும். இதனைப் பிரித்தானியா பூர்த்தி செய்யாமையால், 11.04.2019 இல் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், வெளியேறும் இறுதி நாள் 31.10.2019 எனப் பின்போடப்பட்டது. அதுவரை ஐரோப்பிய சட்டம் பிரித்தானியாவில் செல்லுபடியாகும் என்பதால் இத் தேர்தல் நடைபெற்றது.

ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் பிரித்தானியா 9ஆவது தடவையாக பங்குபற்றியது. இத் தேர்தல் சில முக்கியமான தடயங்களைப் பதித்துள்ளது. கடந்த தேர்தலில் பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் தலைவராக நைஜல் பராஜ் தலைமைதாங்கிப் போட்டியிட்டார். இக் கட்சிக்குள் காணப்பட்ட உள் போட்டிகள் காரணமாக அவர் அக் கட்சியிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறலாமெனக் கருதிய அவர், வெளியேறும் கட்சி (Brexit Party) என்ற பெயரில், தேர்தலுக்கு 45 நாள்களுக்கு முன்னர் அதனை ஆரம்பித்தார். பிரித்தானிய மக்கள் பிரதான கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்திருந்த நிலையில், தமது எண்ணங்களை மக்கள் மாற்று வழிகளில் இத் தேர்தலில் வெளியிட்டனர். இத் தேர்தலில் இக் கட்சியே மிகப் பெரிய தேசிய கட்சியாக ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டது. அதேபோலவே, தொழிற்கட்சியின் வாக்குகளும் சிதறி, தொடர்ந்து ஐரோப்பாவுடன் இணைந்து இருக்கவேண்டும் எனக் கருதிய மக்கள் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கும், பசுமைக் கட்சி, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி என்பவற்றுக்கும் பெரும் தொகையில் வாக்களித்தனர்.

ஒட்டுமொத்த வாக்களிப்பை அவதானிக்கும் போது, வெளியேறுவதை ஆதரித்து 5.9 மில்லியன் மக்களும், இணைந்திருப்பதை 6.9 மில்லியன் மக்களும் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இத் தேர்தல் முடிவுகள், நாடு மிகவும் பிளவுபட்டு இருப்பதை உணர்த்தின. ஒட்டுமொத்தமாக நாட்டின் மூன்றில் ஒரு மக்கள் அதாவது, 36.9 சதவீத மக்கள் இத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட 1.5 சதவீதத்தினர் குறைவாக வாக்களித்துள்ளனர். அதாவது, கடந்த தேர்தலில் விலகுவதை ஆதரித்து 17.4 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். ஆனால், தற்போதைய தேர்தலில் 17.2 மில்லியன் மக்களே வாக்களித்தனர்.

நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் கவனத்திற்குரியன.
வெளியேறும் கட்சி – 29 ஆசனங்கள்
லிபரல் ஜனநாயக் கட்சி – 16
தொழிற் கட்சி – 10
பசுமைக் கட்சி – 7
கன்சவேட்டிவ் கட்சி – 4
இத் தேர்தல் முடிவுகள் நாட்டில் ஒரு பொதுத் தேர்தலை வற்புறுத்துவதாக உள்ளது. ஆனாலும், ஆளும் அரசு தேர்தலை நடாத்தாமல் காலத்தைக் கடத்தும் நோக்கில் செயல்படுகிறது. பாராளுமன்றத்தின் தற்போதைய நிலையில், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, பொதுத் தேர்தல் அல்லது இரண்டாவது அபிப்பிராய வாக்கெடுப்பே இவ்விறுக்கமான நிலையிலிருந்து கடப்பதற்கான வழிமுறையாகவும் தெரிகிறது. தொழிற்கட்சியினர் பொதுத் தேர்தலை வற்புறுத்த, லிபரல் ஜனநாயக் கட்சியும், ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியும் இரண்டாவது வாக்கெடுப்பை வற்புறுத்துகின்றன.

இத் தேர்தலின் பின்னர் கன்சவேட்டிவ் கட்சிக்குள் புதிய தலைவரை அல்லது புதிய பிரதமரைத் தெரிவு செய்யும் தேர்தல் ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, பிரதமர் திரேசா மே தனது முயற்சிகளுக்குக் கட்சியும், பாராளுமன்றமும் ஆதரவு தரவில்லை என்பதால், தாம் பதவியைத் துறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

கன்சவேட்டிவ் முக்கியஸ்தர்களில் சுமார் 12பேர் கட்சியின் தலைமைக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். இதில் சிலர், கட்சியின் அதிகளவு விருப்புக்குரியவராக தற்போது பேசப்படும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் வெற்றிபெறுவதைத் தடுக்கும் நோக்கில் போட்டியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது முன்னணி அபேட்சகராகப் போட்டியிடும் இவர், எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதி (31.10.2019) வெளியேறும் ஒப்பந்தம் சாத்திமானாலென்ன, இல்லாவிட்டாலென்ன, பிரித்தானியா பிரிந்து செல்லும் எனக் கூறுகிறார். ஆனால், கட்சியின் பல முக்கியஸ்தர்கள் அவ்வாறான நிலை ஏற்பட தாம் அனுமதிக்கப்போவதில்லை என பகிரங்கமாகத் தெரிவிக்கின்றனர். ஏனைய ஐரோப்பிய தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவாதங்களைத் தாம் தொடர்ந்து அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றனர். நாட்டிலுள்ள பெரும் வர்த்தக நிறுவனங்கள் இப் பிரச்னை தொடர்ந்து நீடிப்பதைத் தாமும் விரும்பவில்லை எனக் கூறுகின்றன.

இக் கட்டுரை எழுதும்வரை பிரித்தானிய பிரதமர் தெரிவுகான தேர்தல் நடைபெறவில்லை. இப் பின்னணியில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக எடுக்கும் முடிவு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் பின்னணியில் பார்க்கப்படுவது அவசியம் எனக் கருதுகிறேன். ஏனெனில், பிரித்தானியா உலகின் நிதிச் சந்தையில் பிரதான பங்கினை வகிக்கிறது. பிரித்தானியாவின் உள்நாட்டு சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகள், அதன் அரசியல் அமைப்பில் காணும் பிரச்னைகள் உதாரணமாக, ஸ்கொட்லாந்துப் பிரிவினை, ஐரோப்பிய ஒன்றிய வெளியேற்றத்தால் இரண்டு அயர்லாந்துகளிடையே ஏற்படும் சிக்கல்கள் போன்றன கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அதேபோலவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடிகள் உதாரணமாக, பெருமளவு அகதிகளின் வருகை, அதனால் ஏற்படும் கலாசார எதிர்ப்பு, வலதுசாரி தீவிரவாத சக்திகளின் திடீர் வளர்ச்சி, அதனால் ஏற்படும் தேர்தல் முடிவுகளின் மாற்றங்கள், அடையாளம் தொடர்பான விவாதங்கள் உதாரணமாக, முஸ்லீம் பெண்களின் ஆடை விவகாரங்கள் பிரதானமானவை.

அதேபோலவே, எனைய உலக நாடுகளில் இடம்பெறும் சம்பவங்கள் உதாரணமாக, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உதாரணமாக, நவ தாராளவாத பொருளாதார நடவடிக்கைகள், சீனப் பொருளாதார வளர்ச்சி காரணமாக அமெரிக்க அரசியலில் காணப்படும் மாற்றங்கள் என, பலதரப்பட்ட நிலமைகள் கவனத்துக்குரியன.

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் என்பது, உள்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது, சர்வதேச அரசியலிலும் பிரதான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால். இப் பிரச்னை மிகவும் கவனத்திற்குரியது.

(முற்றும்)

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ