மரண தண்டனை: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

0 15

மரண தண்டனை விடயத்தில், இலங்கை எதிர்மாறாக செயல்படுகிறது என, சர்வதேச மன்னிப்புச் சபை விசனம் வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது என, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் தாம் கடைப்பிடிக்கும் கொள்கைகளில் மறுசீரமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று உணரத் தொடங்கியிருப்பதுடன், மரண தண்டனையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இலங்கை அதற்கு மாறாக செயல்படுகிறது. இது, சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கைக்கான அங்கீகாரத்துக்கு பெரும் பாதகமாக அமையும் என்பதுடன், ஜனாதிபதி தனது தீர்மானத்தை மீள்பரிசீலனைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

மரண தண்டனைக் கைதிகள் வரிசையிலுள்ள நால்வருக்கு விரைவில் அத்தண்டனை அமுல்படுத்தப்படும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்திருந்தார். போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் தான் கையெழுத்திட்டுவிட்டதாக செய்தி ஆசிரியர்களுடன் நடாத்திய விசேட சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

‘ஜனாதிபதியின் இத் தீர்மானம் தொடர்பில் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனையை அமுல்படுத்தப்போவதை ஜனாதிபதி உறுதி செய்திருக்கின்றபோதிலும், மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் நபர்களுக்கு அவர்கள் தொடர்புபட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. இத்தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பதால் குறித்த மரண தண்டனைக் கைதிகள் கருணை மனுவுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது இதிலிருந்து மீள்வதற்கோ வாய்ப்பில்லாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது. அந் நான்கு கைதிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு இவ்விடயம் குறித்து அறிவிக்கப்பட்டமை தொடர்பில், இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

‘இலங்கையில் கடந்த 1976ஆம் ஆண்டின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே அமையும். 43 வருட காலத்தின் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளமை தொடர்பில் நாம் வெறுப்படைகின்றோம். மிகக் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதும், இழிவானதுமான இந்த தண்டனையை அமுல்படுத்துவதனூடாக நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கும் ஜனாதிபதி சிறிசேன முற்றுப்புள்ளி வைக்கின்றார்’.

இவ்வாறு, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் பிராஜ் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ