கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி-2019: யாருக்கு உரிய கிண்ணம் இது?

0 17

  • அரவிந்தன்

மார்ட்டின் கப்டில் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவரது அணியினர் அவரைக் கட்டியணைத்து ஆறுதல்படுத்துகிறார்கள்.

அதே மைதானத்தில் வேறோர் இடத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவருடைய அணியினர் அவரைக் கட்டியணைத்துப் பாராட்டுகிறார்கள்.

இரண்டு கண்ணீருக்கும் இடையில் உள்ள வித்தியாசம், முன்னையது சோகக் கண்ணீர்; மற்றையது ஆனந்தக் கண்ணீர்.

வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுக்க ஓடிய கப்டில் கோட்டைத் தொடுவதற்குள் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜாஸ் பட்லரால் ‘ஸ்டெம்ப்’ சாய்க்கப்பட்டது. 16 ஓட்டங்களை எடுக்கவிடாமல் பந்து வீசவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்ச்சரால் கப்டிலையும் ஜிம்மி நீஷமையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் என்னும் நிலையில் பந்தை அடித்த கப்டில், எப்படியும் இரண்டு ஓட்டங்களை ஓடிவிடவேண்டும் என்னும் வெறியுடன் ஓடினார். ஆனால், இரண்டு ஓட்டங்கள் எடுப்பதற்கான வாய்ப்பு அற்ற ‘ஷொட்’ அது. களத் தடுப்பாளர் பந்தை எடுத்து பட்லரிடம் எறிய, பட்லர் அதைப் பத்திரமாக வாங்கி, ஸ்டெம்ப்களைச் சாய்க்கிறார். கப்டில் சரிந்து விழுகிறார். நியூஸிலாந்து ரசிகர்களின் மனங்களும் சரிந்து விழுந்தன.

போட்டியில் இரண்டு அணியினரும் சமமான எண்ணிக்கையில் ஓட்டங்களைப் பெற, ‘சூப்பர் ஓவர்’ போடப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் சமமான நிலையில் முடிய, இரண்டு அணிகளும் எடுத்த ‘பவுண்டரி’களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் (26-17) இங்கிலாந்து வென்று, கிண்ணத்தைக் கைப்பற்றியது. வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

விடாப்பிடியான போராட்டம்

இங்கிலாந்து அணி இந்தத் தொடரிலும், இறுதிப் போட்டியிலும் நன்றாகவே விளையாடியது. போட்டி ‘டை’யில் முடிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்தடுத்து ‘விக்கெட்’ வீழ்ந்தாலும் ஜாஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் நன்றாக ஆடி, அணியைச் சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். கடைசிப் பத்து ஓவர்களில் 72 ஓட்டங்கள் அடிக்கவேண்டும். கைவசம் ஐந்து விக்கெட்கள் இருந்தன. களத்தில் பட்லரும் ஸ்டோக்ஸும் இருந்தார்கள். இந்தக் கட்டத்தில்தான் இங்கிலாந்து தளம்பத் தொடங்கியது.

ட்ரென்ட் போல்ட் வீசிய அந்தக் கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்தால்தான் வெற்றி என்னும் நிலையைக் கொண்டுவந்ததே இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்களின் தவறு என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பதினைந்து ஓட்டங்களில் 14 ஓட்டங்களைத்தான் ஸ்டோக்ஸால் எடுக்க முடிந்தது. அதுவும், நியூஸிலாந்து களத் தடுப்பாளர் கப்டிலின் ‘ஓவர்த்ரோ’ என்னும் விபத்தால் 4 ஓட்டங்கள் வந்தன. இந்த அதிர்ஷ்டம் கைகொடுத்திருக்காவிட்டால் இரண்டு பந்துகளில் 7 ஓட்டங்கள் என்னும் நிலை வந்திருக்கும். பவுண்டரி அடித்தே ஆகவேண்டிய நெருக்கடியில் ஸ்டோக்ஸ் தள்ளப்பட்டிருப்பார். இப்படியாக, உபரி ஓட்டங்கள் வந்ததால் இரண்டு பந்துகளில் மூன்று ஓட்டங்கள் என்னும் நிலை உருவானது.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸால் இதையும் அடிக்க முடியவில்லை. ஐந்தாவது பந்தைத் தட்டிவிட்டு ஓடினார். இரண்டாவது ஓட்டத்தை எடுக்க வாய்ப்பில்லை என்னும் நிலையிலும், தானே மீண்டும் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகத் திரும்பி ஓடினார். மறு முனையில் இருந்தவர் ‘ரன் அவுட்’ ஆனார். அடுத்த பந்திலும் அதே நிகழ்ந்தது. இரண்டு ஓட்டங்கள் தேவை. அடித்த ‘ஷாட்’ இரண்டு ஓட்டங்களுக்குத் தேறாது. ஆனாலும், ஸ்டோக்ஸ் ஓட, மறு முனையில் இருப்பவர் ஆட்டமிழந்தார். போட்டி ‘டை’யில் முடிந்தது.

சூப்பர் ஓவர் போட்டியும் இதேபோல் ‘டை’யில் முடிந்தது.

சளைக்காத போட்டி

ஆட்டம் என்னும் அளவில் இதை மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும். இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல், கடைசிவரை போராடின. இறுதிவரை எந்த அணியாலும் மற்ற அணியை விஞ்ச முடியவில்லை. துடுப்பு வீச்சு, பந்து வீச்சு, களத் தடுப்பு ஆகிய அனைத்திலும் இரண்டு அணிகளும் சளைக்காமல் போராடின. ஆட்டத்தின் சாதக அம்சம் மாறிமாறி ஊசலாடியது. கடைசிவரை ஊசலாடிய அது, இறுதியில் சமநிலையில் நின்றது. இரண்டு அணிகளினதும் திறமைக்கான பொருத்தமான அடையாளம்தான்.

எனினும், இரண்டு அணிகளுமே வெற்றியை எட்டுவதற்கான சில வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். கடைசிப் பத்து ஓவரில் 72 என்னும் நிலையில் ஓவருக்கு 7.2 ஓட்டங்கள் எடுக்கவேண்டும். ஆனால், 6 ஓட்டங்கள் எடுக்கவே பட்லரும் ஸ்டோக்ஸும் கஷ்டப்பட்டார்கள். கடைசி ஓவரில் கப்டில் வீசிய ஓவர்த்ரோவுக்கு அவரைக் குறைசொல்ல முடியாது. ஏனென்றால், ஓட்டத்தை நிறைவுசெய்வதற்காக ஸ்டோக்ஸ் நீட்டிய துடுப்பில் பட்டுச் சென்றது பந்து.

ஆனால், சூப்பர் ஓவர் விஷயத்தில் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் செய்ததைத் தவறு என்றுதான் சொல்லவேண்டும். ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய போல்ட்டையே சூப்பர் ஓவர் வீச அழைத்தார் வில்லியம்சன். போல்ட்டின் அநுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியது என்றாலும், அன்றைய ஆட்டத்தில் மேட் ஹென்றி, டி கிராண்ட்ஹோம், லோக்கி பெர்குசன் ஆகியோர் போல்ட்டைவிடவும் சிறப்பாக வீசினார்கள். கிராண்ட்ஹோம் 10 ஓவர்களில் 25 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஹென்றி 40 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். போல்ட் விக்கெட் எதுவும் எடுக்காமல் 67 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். இந்நிலையில், கிராண்ட்ஹோம் அல்லது ஹென்றி சூப்பர் ஓவரை வீசியிருந்தால் இங்கிலாந்து 15 ரன் எடுத்திருக்குமா என்பது ஐயமே. இங்கிலாந்து ஆடிய 50 ஓவர்களில் ஓர் ஓவரில்கூட பத்து ஓட்டங்களை எடுக்கவில்லை.

சந்தி சிரிக்கும் விதி

தவறுகள், விபத்துகள், அற்புதமான பந்துகள், அபாரமான ‘ஷாட்’டுகள் ஆகியவற்றைக் கடந்து, இரண்டு அணிகளும் வெற்றிக் கோட்டை ஒரே நேரத்தில் தொட்டாலும், இங்கிலாந்துக்குக் கிண்ணம் கிடைத்ததற்குக் காரணம் ‘ஐசிசி’யின் சூப்பர் ஓவர் சார்ந்த விதிதான். ஆட்டம் ‘டை’ ஆனால் சூப்பர் ஓவர்; அந்த ஓவரும் ‘டை’ ஆனால், அணிகள் எடுத்த பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி என்பதே அந்த விதி.

இந்த விதி, துடுப்பு வீச்சை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதுவும், அதிரடி துடுப்பு வீச்சைக் கணக்கில் கொள்கிறது. ஓர் அணி 40 ஓவரில் 300 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்கிறது. எதிரணி ஒரு சில விக்கெட்களை மட்டுமே இழந்து 48 ஓவர்களில் அந்த இலக்கைக் கடக்கிறது என்றால், இலக்கைக் கடந்த அணிதான் வெற்றிபெறுகிறது. ஓட்டம் என்பதுதான் முக்கியமே தவிர, எவ்வளவு ஓட்டம் என்பது முக்கியமல்ல. 200 ஓட்டங்களை எடுக்கும் ஒருவரைக் காட்டிலும் 80 ஓட்டங்கள் எடுப்பவர் அதிக பவுண்டரிகளை அடித்துவிட முடியும்.

இனி, சர்வதேச தொடர்களில் ‘வெல் அல்லது வெளியேறு’ என்னும் அடிப்படையில் நடக்கும் போட்டிகளில் ஆடும் அணிகள் ஓட்டங்களை மட்டுமல்லாமல், பவுண்டரிகளைப் பற்றியும் கவலைப்படவேண்டியிருக்கும்.

பவுண்டரிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஐசிசி, வீழ்த்திய விக்கெட்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன்? கிரிக்கெட் உயர் மட்ட நிர்வாகத்தினரின் பார்வையில் துடுப்பு வீச்சின் மீதான மதிப்பு கூடுதலாக இருப்பதை இது அம்பலப்படுத்துகிறது.

இவ்வளவு கடுமையாக இரண்டு அணிகளும் போராடிய ஒரு போட்டியில், இத்தகைய அளவுகோலின் அடிப்படையில் முடிவை அறிவிப்பது அந்தப் போராட்டத்தையே சிறுமைப்படுத்துவதாக உள்ளது. பதிலுக்கு இன்னொரு சூப்பர் ஓவரை நடத்தியிருக்கலாம். அதிலும் ‘டை’ ஆனால், இன்னொன்றை நடத்தியிருக்கலாம். அல்லது கிண்ணத்தை இரண்டு அணிகளுக்கும் உரிமையாக்கியிருக்கலாம். 2002இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மழை காரணமாக இறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் மீண்டும் போட்டி நடாத்தப்பட்டது. அன்றும் மழை காரணமாக ஆட்டம் ரத்தானது. இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா, இலங்கை அணிகள் கூட்டாக வென்றதாக அறிவிக்கப்பட்டன. எந்த அணி அதுவரை அதிக பவுண்டரிகளை அடித்தது என்னும் கணக்கில் இறங்கவில்லை.

ஐசிசியின் சூப்பர் ஓவர் விதியை முன்னாள் ஆட்டக்காரர்கள் பிரெட் லீ, கவுதம் காம்பீர், முகம்மது கைப் ஆகியோரும் குறைகூறியுள்ளனர்.

வென்றிலன் என்றபோதிலும்

கேள்விக்குரிய இந்த விதியை விலக்கிவிட்டுப் பார்த்தால், இந்தப் போட்டி, உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிகளில் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் இந்த இரண்டு அணியினரும் வெற்றிக் கோட்டைத் தொட்டமை, இந்தத் தொடருக்குப் பொருத்தமான உச்ச தருணமாகவே அமைந்தது. அரை இறுதி, இறுதி ஆகிய போட்டிகளில் குறைவான ‘ஸ்கோரை’ வைத்துக்கொண்டு இந்தியா, இங்கிலாந்துபோன்ற வலுவான துடுப்பு வரிசைகொண்ட அணிகளைத் திணறச்செய்தமை, நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுக்கும் களத் தடுப்புக்கும் பெருமைசேர்ப்பதாக அமைந்திருக்கிறது. இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லாத இந்த இரண்டு அணிகளும் கிண்ணத்தின்மீது தங்கள் விரல் ரேகைகளை ஒரே நேரத்தில் பதித்திருப்பது ஆட்டத்துக்குச் சுவையைக் கூட்டுகிறது.

வெற்றியாளராக ஐசிசி இந்த இரண்டு அணிகளில் ஓர் அணியை அறிவித்திருக்கலாம். ஆனால், கிரிக்கெட் ஆர்வலர்களின் பார்வையில், இரண்டு அணிகளுமே கிண்ணத்தை வென்றுள்ளன.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ