
மனித குலம் முழுமைக்குமான சமாதானம்
— July 20, 2019 0 14‘மனிதனின் இந்த ஓர் அடி, மனுக் குலத்தின் அசுர பாய்ச்சல்.’
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாள், பூமிக் கிரகத்திலிருந்து, 2 லட்சத்து 40 ஆயிரம் மைல் தொலைவில் ஒலித்த மனிதக் குரல் இது.
‘ஈகிள்’ விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெரா, மனிதனின் அந்த காலடியையும் அவனின் அந்தக் குரலையும் பூமிக்கனுப்ப, அந்த வரலாற்றுக் கணத்தை 650 மில்லியன் மக்கள் தத்தம் உணர்வுகளோடு கண்டார்கள்; கேட்டார்கள்.
சந்திரனில், நீல் ஆம்ஸ்ரோங் கால் பதித்த நாள்.
102 மணி (4 நாள்கள்) 45 நிமிட பயணத்தில், 1969 யூலை 20, பி.ப. 8:17க்கு ஈகிள் கலம் சந்திரனில் தரையிறங்கியது.
மைக்கல் கொலின்ஸ், கட்டளைக் கலம் கொலம்பியாவிலேயே தங்கியிருக்க, நீல் ஆம்ஸ்ரோங்கும், அவர் பின்னால் பஸ் அல்ட்ரினும் ஈகிள் சந்திர கலத்திலிருந்து சந்திரனில் இறங்கினார்கள். சந்திர பரப்பில் 21 மணிநேரம் தங்கியிருந்த இவர்கள், 7 மணிநேரம் அங்கு தூங்கினார்கள். ஆக மொத்தம், எட்டு தினங்களும் 3மணி 18 நிமிடமுமாக இவர்களின் இந்த வரலாற்று பயணம் அமைந்தது.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையிலான ‘பனிப் போர்’ காலத்தில், இரு நாடுகளுக்குமிடையேயான விண்வெளி ஓட்டப் போட்டியில் அமெரிக்கா ஈட்டிய வெற்றியாகவும் இது அமைந்தது. 1957இல், ‘ஸ்புற்னிக்’ செய்மதியை சோவியத் யூனியன் முதன்முதலாக விண்வெளிக்கனுப்பியதுடன் இப் போட்டி ஆரம்பித்தது. தொடர்ந்து, சோவியத் விண்வெளிவீரர் யூரி ககாரின், விண்ணில் சஞ்சரித்த முதல் மனிதனாக 1961 ஏப்ரல் 12இல் சாதனையை ஏற்படுத்தினார்.

ஜனாதிபதி ஜோன் எவ். கெனடி 1962இல், இப் போட்டியின் இலக்காக சந்திரனை நோக்கினார். மனிதனை அங்கு அனுப்பி மீட்கும் ‘அப்போலோ’ திட்டம், 25 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது. 4 லட்சம் பேர்வரையில் பணியிலமர்ந்தனர்.
மூன்று விண்வெளி வீரர்களுடன் அப்போலோ-1 பயணத்துக்கு தயாரானபோது, ஏவு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவரும் பலியானார்கள். அப்போலோ-8, அப்போலோ-10 சந்திரனின் சுற்று எல்லையுள் நுழைந்தாலும் இலக்கை அடையவில்லை. 1969 யூலை 16இல் ஏவப்பட்ட அப்போலோ-11 கெனடியின் இலக்கை அடைந்தபோது, ஜனாதிபதி கெனடி உயிருடன் இருக்கவில்லை.
மிக நீண்டதூர தொலைபேசி அழைப்பாக, சுமார் இரண்டரை லட்சம் மைல்களுக்கு அப்பால் முதன்முதலாக, ஜனாதிபதி நிக்சன் சந்திர மண்டலத்துக்கு பேசினார். ஜோன் கெனடி 1963இல் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
‘பூமிக் கிரகத்திலிருந்து வந்த மனிதர்கள் நாம், இங்கு சந்திரனில் கி.பி. 1969 யூலை கால்பதிதோம். மனித குலம் முழுமைக்குமான சமாதானத்துக்காக நாம் வந்தோம்.’
சந்திரனில் – போட்டியின் முடிவிடத்தில், பொறித்து வைக்கப்பட்டுள்ள வாசகம் இது.
நாட்டப்பட்ட அமெரிக்க கொடியும், ‘ஈகிள்’ கலமும் சந்திரனில் இருக்கின்றன. ஈகிள் கலத்தில் இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
- மாலி
Leave a reply