யாழ்ப்பாணத்தின் ஓர் இசை வடிவம்

0 8

அவருடைய சங்கீதமும் அவருடைய பண்புகளும் சார்ந்து, அந்தக் காலத்தில் – அந்தக் குழாத்தில், ராம் குமாரசாமி தனித்த சில மதிப்புக்களைக்கொண்ட ஒருவராகவே திகழ்ந்தார். ரஸிக ரஞ்சன சபா, சங்கீத வித்வத் சபை, அண்ணாமலை மன்றம், பின்னர் இளம் கலைஞர் மன்றம், நுண்கலை மன்றம், எஸ். ரி. ஆர். இல்லத்து உள்ளரங்கு என்பன, யாழ்ப்பாணத்தில் அப்போது இசை விழாக்களுக்கும் இசைக் கச்சேரிகளுக்குமான பொதுவான அரங்குகளாகவிருந்தன. ரசனையும், விமர்சனமும் கூடவே இங்கு எதிரொலிகளாய்க் கேட்கும். இலங்கை வானொலியிலும் கலைஞர்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு, அரை மணி, முக்கால் மணி, ஒரு மணிநேர கச்சேரிகள் நடைபெற்றன.

1930 – 60 காலப்பகுதி கர்நாடக இசையின் பொற்காலம் எனப்படுகையில், அப்பொற்காலத்து தாக்கம் யாழ்ப்பாணத்திலும் தோற்றியது. புத்துவாட்டி சோமு, ஊரிக்காடு நடராஜா போன்றவர்களுக்குப் பின்னால் இசைப் புலவர் என். சண்முகரத்தினம், பரம் தில்லைராஜா, ராம். குமாரசாமி என்போர் வாய்ப்பாட்டில் பெரும் வித்வான்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் மூவருமே இலங்கை வானொலியின் அதி உயர்பிரிவு கலைஞர்களாக, ஒரு மணி நேர கச்சேரியும் அளித்தார்கள்.

பெண்களில் நாகேஸ்வரி பிரம்மானந்தா, சரஸ்வதி பாக்கியராசா, சத்தியபாமா ராஜலிங்கம் ஆகியோர், மற்றும் சிலருடன் ஒரு ‘மும்மணிகளாhக’ அடையாளம் பெற்றார்கள்.

சென்னை அரச கலைக் கல்லூரியில் திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளையிடம் பயின்றவர் ராம் குமாரசாமி. ஆனால், பிருக்காக்கள் மிளிரும் அவருடைய கச்சேரியில், ஒரு ஜி. என். பி. பாணி சாயல் தெரியும்.

அடாணாவில் கோபாலகிருஷ்ண பாரதியின் “கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே…’’ அந்தக் காலத்தில் முசிரி சுப்பிரமணிய ஐயரிலிருந்து கே. வி. நாராயணஸ்வாமி, மகாராஜபுரம் சந்தானம் என பல வித்வான்களும் எடுப்போடு பாடும் கீர்த்தனை. அரச கலைக் கல்லூரியில், முதலமைச்சர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு அது பிடித்துவிட்டது. மீண்டுமொருமுறை அதனைப் பாடக் கேட்டார். அப்படி அந்த ஆவலைத் தூண்டிய பாடகர் ஓர் இலங்கையர் என்று தெரியவே ராஜாஜி அவரிடம், இந்தியாவிலேயே தங்கினாலென்ன என்று கேட்டாராம்.

ஒரு சம்பிரதாய கர்நாடக இசைக் கச்சேரியின் நேர்த்தியான, துல்லியமான அநுபவம் எப்போதும் ராம் குமாரசாமியின் கச்சேரிகளில், அது வானொலியாக இருந்தாலென்ன, மேடைக் கச்சேரியாகவிருந்தாலென்ன கிட்டும். அவரின் மேடைக் கச்சேரிகள், கேட்கவும் பார்க்கவும் ஈர்ப்புடன், ரஞ்சகமாயிருக்கும். வசீகரமான தோற்றமுடையவர்.

அந்தக் காலத்து ‘சங்கீத யாழ்ப்பாணமும்’ பொதுவான சங்கீத உலகு போன்றதுதான். எனினும், ராம் குமாரசாமி மற்றையவர்களை மதிப்பதிலும், மனந் திறந்து பாராட்டுவதிலும், ஊக்குவிப்பதிலும் தனியானவர்; எல்லோராலுமே விரும்பப்படுபவர்.

அரிதான விதத்தில், யாழ்ப்பாணத்தில் ஒரு கலைக் குடும்பம் அவருடையது. யாழ்ப்பாணத்தில் மேம்பட்ட இசை, நடனத்துக்கு நாற்றிட்ட ஒரு குடும்பம் அது. இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை சு. நடேசபிள்ளை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, யாழ். நடன பாடசாலையை வி. ஆர். இராஜநாயகமும், ராம் குமாரசாமியின் தந்தையார் டபிள்யூ. எம். குமாரசாமியும் ஆரம்பித்தார்கள்.

கேரளாவிலிருந்து, பிரபல கதகளி நடன கலைஞர்கள் கோபிநாத் – தங்கமணி, செல்லப்பன் – பவானி போன்றவவர்களையெல்லாம் அழைத்து, நடனமும் இசையும் கற்பித்தார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு மிருதங்க வாத்திய மரபைத் தோற்றுவித்த ஏ. எஸ். இராமநாதனையும் இவர்களே வரவழைத்தார்கள். இதுதவிர, வட இலங்கை சங்கீத சபையின் தோற்றத்திலும் டபிள்யூ. எம். குமாரசாமி முக்கியமானவர்.

இசையும் நடனமும் குடும்பத்துள்ளேயே இசைந்தாட, ‘யாழ். கலைமன்றம்’ உருவானது. ராம் குமாரசாமியின் சகோதரி சத்தியபாமா இராஜலிங்கமும் பிரபலமான இசைக் கலைஞரானபோது, மற்றைய சகோதரி திரிபுரசுந்தரி யோகானந்தம் நடன கலைஞரானார். வழுவூர் இராமையாபிள்ளையின் முதல் இலங்கை மாணவி இவர். அரங்கேற்றத்துக்கு யாழ்ப்பாணம் வந்த வழுவூரார், ‘கலை மன்றத்தை’ ஆரம்பித்துவைத்தார்.

தந்தையாருக்குப் பின்னர் ராம் குமாரசாமி ‘கலைமன்றத்தை’ நிர்வகித்தார். வட இலங்கைச் சங்கீத சபையிலும் ராம் குமாரசாமியின் சேவை பல காலம் சிறந்தது.

இசையிலும் நடனத்திலும் குடும்பத்தில் மேலும் ஆற்றல் மிகப்பட்டபோது, அவர்களில் ராம் கரிசனைகொண்டார். சத்தியபாமாவின் புதல்வி கிருஷ்ணப்பிரியா அமெரிக்காவில் வசித்து, அண்மைக்காலம் வரை பல ஆண்டுகள், மார்கழி இசைவிழாவில் சென்னையில் தொடர்ந்து பாடினார்.

மேலை நாடு முழுவதும், நடனத்துக்கு பாடுவதில் தனித்த இடம் வகிக்கும் யாதவன், அருமையான பாடகர். இவர், திரிபுரசுந்தரியினுடைய புதல்வர்; லண்டனில் வசிக்கிறார். இவருடைய சகோதரிகள் நந்தினி, ராதினி லண்டனில் நடன ஆசிரியைகள். ஆக, இவர்கள் எல்லோரிலும் ராம் குமாரசாமியின் மேலான அக்கறை மேம்பட்டது. அது, கர்நாடக இசையினதும் பரதநாட்டியத்தினதும் புலம்பெயர் நாட்டுப் பரம்பலில் துணையாகிறது.

சிங்கப்பூர் அரசின் அழைப்பில், கர்நாடக இசையின் சீரமைப்பில் ராம் குமாரசாமி அங்கும் உதவியிருக்கிறார்.

இலங்கையில், ‘83 கலவரங்களையடுத்து, ராம் குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இசைவிழா காலங்களிலும் மற்றும் வேளைகளிலும் இலங்கைக் கலைஞர்களுக்கு அவர் அங்கு பெரும் அநுசரணையாகவிருந்தார். அடையாறில், டாக்டர் பத்மா சுப்ரமண்யத்தின் இல்லத்துக்கு அடுத்த இல்லத்தில் அவர் வசித்தார். அங்கிருக்கும்வரை, இந்தியா செல்லும் வேளைகளிலெல்லாம் அவரைத் தவறாறு சந்திப்பது வழக்காகவிருந்தபோது, பின்னர் அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததும் அவரின் உடல் நலமும் குன்ற ஆரம்பிக்க, இடையிடையே தொடர்ந்த தொலைபேசி உரையாடல், இப்போது நின்றுபோயிற்று. 86 வயதில் ராம் காலமானார்.

– மாலி

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ