`சங்கீத கலாநிதி’ சௌமியா

0 20

பிரம்ம கான சபாவில் சௌமியாவின் கச்சேரி. 2017 இசை விழா சீசன். பைரவியில் தியாகராஜரின் “உபசாரமு…’’

‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ – மணிவாசகர் சொல்வார். சௌமியாவின் பாட்டையும் அதுபோலவே சொல்லத் தோன்றும்.

சகானாவில் ராகம்-தானம்-பல்லவி. ராக ஆலாபனையை முடித்தார். “ஆகா, ராம்நாட் கிருஷ்ணன் போல இருக்குது. அவ்வளவு பிரமாதம்; ஐம்பது வருஷங்களுக்கு முன்னர் கேட்டது.’’

  • அவையிலிருந்து எழுந்த குரலைத் திரும்பிப் பார்த்தேன். அவர் ஒரு ஞானஸ்தர்; கட்புலனற்றவர். முதல் நாள் மியூசிக் அக்கடமியில் அவரைப் பார்த்தேன். தினமும் பாண்டிச்சேரியிலிருந்து வருவதாக சொன்னார்.

கச்சேரி முடிந்ததும் மேடை அருகே வந்து, “சௌமியா, உனக்கு ‘சங்கீத கலாநிதி’ கிடைக்கவேண்டும்’’ என்றார். “அவற்றையெல்லாம் எதிர்பார்த்து நான் பாடவில்லை, மாமா…’’ என்று, மிக விநயமாகவே அப்போது சொன்னார் சௌமியா.

சங்கீத வித்வத் சபையின் 93ஆவது ‘சங்கீத கலாநிதி’ விருதை 2020 ஜனவரி முதலாம் தேதி பெறுகிறார் சௌமியா. வித்வத் சபையின் 93ஆவது மாநாட்டுக்கு அவர் தலைமைதாங்குவார்.

பாரம்பரிய சங்கீதத்தில் அவருடைய ஞானமும், அதனோடிணைந்து சிறக்கும் அவருடைய ஆய்வுத் திறனும், கூடவே அவரின் மனோ தர்மமும் அவருடைய சங்கீதத்துக்கு ஒரு கனமான முத்திரை சேர்க்கின்றன.

எல்லா மட்டங்களிலும் அது அத் தனித்த ரசனையோடு பெரிதளவாக நுகரப்பட்டாலும், அதற்கான பொதுவான அங்கீகாரங்களை, கௌரவங்களை அவர் பெறுகிறாரா என்ற ஓர் உணர்வு, இயல்பாக தலைப்பட்டது. எனினும், அது ‘லண்டனுக்கு வெகு தொலைவாகுமோ’ என்றும் எண்ணிக்கொள்வதுண்டு.

‘நாழிகை’ சஞ்சிகையின் இருபதாண்டு நிறைவில், 2014இல், லண்டனில் சௌமியா பாடினார். அவ்வேளையில் சென்னை சென்றபோது, ‘நாழிகை’யுடன், சௌமியாவின் கச்சேரியும் பேசுபொருளானது. அந்நியோன்யமான முதிர்ந்த பத்திரிகை நண்பர்கள் மூவர் தாமாகவே, சௌமியா தொடர்பில் இதே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அப்போது, ‘லண்டன் தொலைவிலில்லை’ என்று உணர்ந்தேன். ‘மற்றையவர்களிடம் இல்லாதது அவரிடமிருக்கிறது; மற்றையவர்களிடம் உள்ளது அவரிடம் இல்லை’ என்று, அவர்களில் எப்போதுமே அர்த்தபுஷ்டியான விகடத்துடன் பேசும் நண்பர் சொன்னார்.

தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதெல்லாம்கூட அப்போது அவருக்கு கிடைக்கவில்லை. சௌமியா இது தொடர்பில் என்ன நினைக்கிறார், அவருடைய மனநிலை என்ன என்று (நட்பு ரீதியில்) அவரிடம் கேட்கலாமா என்றும்கூட நினைந்தாலும், கேட்கவில்லை. பிரம்ம கான சபாவில் அவரிடமிருந்து வந்த அதே வார்த்தைகளைத்தான் அவர் அப்போதும் நிச்சயமாக சொல்லியிருப்பார்.

‘நல்லவற்றுக்கு காலம் மெல்லமெல்லவே வரும்’ என்று, ‘நாழிகை’ சஞ்சிகையை ஆரம்பித்த காலத்தில், சுஜாதா விஜயராகவன் கடிதமொன்றில் எழுதியிருந்தார்.

ஆக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சௌமியா, அநாயாசமான அவரின் அந்த இசைப் பயணத்தில், அவர் விருதுகளைத் ‘தாண்டி வந்துவிட்டார்’ என்பது, உணர்வாகியது.

சௌமியா சொன்னாலும், ஒரு கலைஞருக்கு உரித்தான விருதுகளும் கௌரவங்களும் அக் கலைஞருக்கு மாத்திரமல்ல, கலைக்கும், விருதுகளுக்கும்கூட கௌரவமானவை.

மத்திய அரசின் தேசிய விருதுகளுக்கு அப்பால், சென்னை சங்கீத வித்வத் சபையின் (மியூசிக் அக்கடமி) ‘சங்கீத கலாநிதி’ விருது ‘ஒஸ்கார்’ விருதுபோல, இசையில், நடனத்தில் ஒரு கலைஞருக்கான அதி உயர் கௌரவமாக அமைகிறது. 1929இல் இவ் விருது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எத்தனையோ கலைஞர்கள் ஒவ்வோராண்டும் இதற்காகக் காத்திருந்தார்கள்; காத்திருக்கிறார்கள். நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை, பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவ் விருதுக்கு விருப்புற்று, அது ஈடேறாமலேயே மறைந்தார். அப்படி, சங்கீத உலகின் பெரும்பெரும் ஜாம்பவான்களெல்லோரும் ஆவல்கொள்ளும் அந்தஸ்தை அவ்விருது கொண்டிருந்தபோது, அது வழங்கப்படுவது தொடர்பில் வித்வத் சபை பொதுவாக எப்போதுமே, விமர்சனங்களையும் கடும் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டே வருகிறது.

தன்னுடைய ஆத்மா அமைதியடையாது என்றுகூட, செயலாளராகவிருந்த கிருஷ்ணஸ்வாமி ஐயரிடம் ராஜரத்தினம்பிள்ளை தெரிவித்திருக்கிறார். எனினும், ராஜரத்தினம் பிள்ளையின் மது பழக்கத்துக்காகவே அவருக்கு அது வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

புல்லாங்குழல் மாலிக்கும் இதே காரணமே சொல்லப்பபட்டது. 1956ஆம் ஆண்டு ராஜரத்தினம்பிள்ளை மறைந்துவிட, அதே ஆண்டு, முதன் முதலாக நாதஸ்வர கலைஞர் ஒருவர் சங்கீத கலாநிதி விருதைப்பெற்றார். திருவீழிமிழலை சகோதரர்களில் ஒருவரான சுப்பிரமணிய பிள்ளைக்கு அது வழங்கப்பட்டது. அதன்பின்னர், திருவிடைமருதூர் வீருசாமிப்பிள்ளை, ஷேக் சின்னமௌலானா, வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் (தவில்) ஆகியோர் இவ் விருதைப்பெற்ற நாதஸ்வர, தவில் கலைஞர்கள். ஏ. கே. சி. நடராஜனும் (கிளாரினெட்) பெற்றார்.

சங்கீத வித்வத் சபையின் ‘சங்கீத கலாநிதி’ விருதை செம்மங்குடி சிறிநிவாச ஐயரே தீர்மானிக்கிறாரென்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே தொடர்ந்தது. அவருக்கு இணக்கமானவர்களுக்கும் அவருடைய சிஷ்யர்களுக்குமே இவ் விருது வாய்ப்பாவதாக, செம்மங்குடியின் வைரிகளான விமர்சகர் சுப்புடு, வீணை பாலசந்தர் போன்றவர்கள் குரலெழுப்பினார்கள். 1974இல் இவ் விருதை எம். எல். வசந்தகுமாரிக்கு வழங்க சுப்புடு போன்றவர்கள் விரும்பியபோது, எம். எல். வி.யின் குரு ஜி. என். பி.யுடனான பகைமையில் செம்மங்குடி அதனை மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழித்தே அது பின்னர் எம். எல். வசந்தகுமாரிக்கு வழங்கப்பட்டது.

வீணை பாலசந்தர் அந்த விருதை விரும்பியவேளையில், அவருக்கல்லாமல், அதே ஆண்டில் மைசூர் துரைசாமி ஐயங்காருக்கு (வீணை) அது வழங்கப்பட்டது. ஈற்றில், பாலசந்தருக்கு அந்த விருது கிட்டவேயில்லை.

இப்படியான சர்ச்சைகளில் ஒருதடவை, செம்மங்குடியே இன்னொரு தடவை ‘சங்கீத கலாநிதி’ விருதைப் பெற்றுக்கொள்ளட்டும் என்றும்கூட அதிருப்தி வெளிப்பட்டது.

எம். டி. ராமநாதன் விரும்பினார். ருக்மிணி அருண்டேல்கூட அவருக்காக அணுகிப் பார்த்தார்; கிடைக்கவில்லை. மதுரை சோமு மற்றொருவர்.

லால்குடி ஜெயராமன் விருதை ஏற்கவில்லை. வயலினுக்கு அக்கடமியில் பிரதான நேரம் அளிக்கப்படுவதில்லை எனக்கூறி அவர் மறுத்தார். ரி. என். கிருஷ்ணனுக்கு 1980இல் ‘சங்கீத கலாநிதி’ வழங்கப்பட்டிருந்தது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு பின்னரே தமக்கு அளிக்க நினைந்ததும், லால்குடி ஜெயராமன் மறுத்தமைக்கான காரணமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு, சர்ச்சைகளுடனுமே கலந்த ‘சங்கீத கலாநிதி’ விருது, 1985இல் டாக்டர் எஸ். ராமநாதனுக்கு வழங்கப்பட்டது. அக் காலப்பகுதியில், சர்ச்சைகள் எதுவுமற்ற விருதாக, வரலாற்றில் அது பேசப்படுகிறது.

எஸ். ராமநாதன் சௌமியாவினுடைய குரு. இப்போது, சௌமியாவும் அதேவிதமாகவே இவ் விருதைப் பெறுகிறார். சர்ச்சைகள் எதுவும் இல்லை.

எம். எல். வி.யிடம் சுதா ரகுநாதன், சங்கீதத்தோடு, எல்லோருடனும் இங்கிதமான பேணலையும் கற்றார் என்பார்கள். எஸ். ராமநாதனும், அவரின் உயர்ந்த பண்புகளில் எல்லோராலும் பேசப்படுபவர். சௌமியாவும் அத்தகையவரே.

எம். எல். வி.க்காக சுப்புடு அவாவிய 1974இல், 83 வயதான ஆந்திர இசையறிஞர் அனந்தகிருஷ்ண சர்மாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ வழங்கப்பட்டது. தாங்கிச் சென்று, அவரை மேடையில் அமர்த்தினார்கள். ‘கிருஷ்ணமாபேட்டை மயானமும் தேவாலய இடுகாடும் அருகில்தான் உள்ளன; 200 வயதான பேயையோ பிசாயையோ அங்கு தேடி, அடுத்த ஆண்டு விருதை வழங்கலாம்’ என சுப்புடு அப்போது எழுதினார்.

பொதுவாக, பல வித்வான்கள் தமது ஐம்பதை அண்மித்த காலப்பகுதிகளிலே இவ் விருதைப் பெற்றார்கள். செம்மங்குடி 39 வயதிலும், முசிரி சுப்பிரமணிய ஐயர் 40 வயதிலும் பெற்றனர். சௌமியா தனது ஐம்பதாவது வயதில் இதனைப் பெறுகிறார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ