பாராளுமன்ற இடைநிறுத்தம்: பொறிஸ் விஷப் பரீட்சை?

0 16

-யோகி

பிரிட்டனில், பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்திவைக்க, பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை, பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் ஆலோசனையில், மகாராணி நேற்று இதற்கான சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற நடவடிக்கைளை நடைபெறவிடாது இடைநிறுத்திய பிரதமரது இச் செயல், பல அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘பிறெக்சிற்’ என்ற, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்தேயாகவேண்டும் என்ற பிடிவாத போக்குக்கு பாராளுமன்றத்தில் எழக்கூடிய எதிர்ப்புக்களிலிருந்து தப்புவதற்காக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மேற்கொண்ட குறுக்குவழியே பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தும் இந் நடவடிக்கையென அரசியல் வட்டாரங்களில் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது. பொதுவாக, அரசாங்க விவகாரங்களில் மகாராணி பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க செயல்படுவதே சம்பிரதாயமானதாகும்.

பாரளுமன்ற அமர்வுகள் தொடரும் பட்சத்தில், பிறெக்சிற் விவகாரத்தில் அரசாங்கம் தோல்யடையும் என்பது உறுதியான நிலையில், அடிப்படை ஜனநாயக உரிமைகளையே மீறும்வண்ணம் பிரதமர் இவ்வாறு செயல்பட்டுள்ளார் என குற்றஞ்சுமத்தப்படுகிறது. பிரதமரின் இந்த ஜனநாயக மீறல் நடவடிக்கை பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. பிரதமரின் ஆளும் கட்சி உறுப்பினர்களே பிரதமரின் ‘பிறெக்சிற்’ மிதவாத போக்கினை எதிர்த்து வாக்களிக்கும் பட்சத்தில், அரசாங்கம் பதவியிழக்க நேரும் நிலைமையைத் தவிர்ப்பதற்கு பிரதமர் முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல எதிர்க் கட்சிகளும், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முதல் தடவையாக ஒன்றாக இணைந்து, பிரதமரின் இச் செயலைக் கண்டித்துள்ளன. ஆட்சியில் இணைந்துள்ள ‘டியுபி’ கட்சி பிரதமரின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது. ‘பிறெக்சிற்’ கட்சியோ, எரியும் கூரையில் பிடுங்கியது லாபம் என்ற தோரணையில், அரசியல் லாபம் தேடி, பிரதமரை உற்சாகப்படுத்தியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரம எதிரியான ‘பிறெக்சிற்’ கட்சி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிரதமர் ஜோன்சனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.

ஒக்ரோபர் 3ஆம் தேதி, பாராளுமன்றத்தின் கோடை விடுமுறை முடிந்து, உறுப்பினர்கள் பாராளுமன்றம் திரும்பும் நிலையில், புதிய கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கைகளைப் பிரகடனப்படுத்தும் இராணியின் உரையை ஒக்ரோபர் 10ஆம் தேதி நடாத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதற்கிடைப்பட்ட காலவேளையில் பாராளுமன்ற விவாதங்கள் நடைபெறாhமலிருப்பதற்கு வாய்ப்பாக பாராளுமன்றத்தை பிரதமர் இடைநிறுத்துகிறார்.

ஜனநாயக விதிமுறைகளுக்கு முரண்பாடான செயல் இது என சகல எதிர்க்கட்சிகளும் குரல்கொடுத்தாலும், இது அரசியலமைப்புக்க அமைவான செயல்பாடே என, பிரதமர் தரப்பு தெரிவிக்கிறது.

பிரிட்டனில் எழுந்துள்ள இந் நிலைமையை உள்நாட்டு பிரச்னை என ஐரோப்பிய ஒன்றியம் கருதினாலும், நிலைமையை அது மிக அவதானமாக கவனித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் பபற்றியும் ஆராய்ந்துவருகின்றது.

ஆக, ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பான நிலையில், அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில், அரசாங்கம் பதவியிழந்து, இடைக்கால அரசாங்கம் ஒன்று அமையலாம்; அல்லது, பொதுத் தேர்தல் ஒன்றும் நடைபெறலாம்.

ஆனால், ஒக்ரோபர் 31வரை பிரதமர் தாக்குப்பிடித்துவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிவிடவும் முடியும்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ