தடைப்பட்ட தடைப்பட்ட அரசியலமைப்பு பணியை புதிய அரசாங்கத்தில் தொடர முடியும் – லால் விஜேநாயக்க

0 11


புதிய அரசாங்கத்தினூடாக, தற்போது தடைப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு பணிகளை தொடரவேண்டும் என, புதிய அரசியலமைப்பு குறித்து மக்கள் கருத்துக் கோருவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான சட்டவல்லுநர் லால் விஜேநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று, கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“புதிய அரசியலமைப்பு குறித்து மக்கள் கருத்துக் கோருவதற்காக எனது தலைமையின் கீழ் 20 நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பேச்சு நடாத்தி, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 300 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சமர்பித்தோம்.

“பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனை ஊடாக அரசியலமைப்புச் சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டபோது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுவரை 88 கூட்டங்கள் நடாத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டதுடன், உப குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. எதிர் தரப்பு உறுப்பினர்களும் அதில் பங்கேற்றனர்.

“அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டதற்கு யாருக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறமுடியாது.
பாராளுமன்றத்தில் 5 நாள் விவாதமும் இடைக்கால அறிக்கைகள்மீது நடைபெற்றது.
அதில் மாற்று யோசனைகளும் முன்வைக்கப்பட்டு, அறிக்கைப் படுத்தப்பட்டது. குறித்த அறிக்கைமீது பேசப்படவிருந்த நிலையிலேயேதான், ‘ஜனாதிபதி தேர்தல்’ என்ற விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டு, இந்த விவகாரம் ஓரங்கட்டப்பட்டது.

“இது அரசியலமைப்புச் சபையின் தவறாகும். இந்த அறிக்கையை பரிசீலனைசெய்து, இறுதி வரைபு தயாரிக்கப்படவேண்டும். எனினும், அடுத்த புதிய பாராளுமன்றத்திலும் இந்த அறிக்கையை முன்வைத்து புதிய அரசியலமைப்பு உருவாக்கற் பணிகளை தொடரமுடியும். எமது குழுவினால் கருத்துக் கோரப்பட்டு, பதிவு செய்யப்பட்ட இலட்சத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட பதிவுகள் உள்ளன.

“இதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஒன்றும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை நான் கண்டிக்கின்றேன். அதிகாரங்கள் சரிவர பகிரப்படாமையே ஜனாதிபதி – பிரதமருக்கு இடையிலான மோதலுக்கு காரணம். அதற்கு, புதிய அரசியலமைப்பினூடாகவே தீர்வு காணமுடியும்.

“ஒன்றும் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி கூறுவது தவறானதாகும். மக்கள் கருத்துக்கோரல் இடம்பெற்று, பின்னர் பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இதுகுறித்து தனக்குத் தெரியாது எனக் கூறியிருந்தார். அவருக்கு நெருக்கமான உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையில் இருந்தார்கள். அதிக நாட்கள் பேசப்பட்டன. அவருக்கு அது அறிக்கையிடப்பட்டிருக்கும். ஆனால், உலகத்தை சுற்றியதாக அவர் கூறுவது எனக்குத் தெரியாது. அதனுடன் நான் தொடர்புபட்டிருக்கவில்லை.

“நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமாகும். இன்று பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையே மோதல் நிலவுகிறது. அதிகாரங்கள் என்ன என்பதைப் புரிந்து, பகிர்ந்து கொள்வதற்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படுகின்றது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை ஏற்பட்ட பிழைகளைத் திருத்திக்கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும்’’ என லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ