நீதிமன்ற உத்தரவையும்மீறி, தேரரின் உடல் ஆலய வளாகத்தில் தகனம்!

0 20

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் பிக்குவின் உடலை, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம்செய்ய தடை விதித்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், இன்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிக்குவின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம்செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம், தேரரின் உடலை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் தீர்ப்பளித்தது. எனினும், நீதிமன்ற உத்தரவினை கருத்தில்கொள்ளாது, பொதுமக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில், தேரரின் உடல் நீராவியடி ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.

கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்திருந்த நிலையில், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் மக்களுடன் முரண்பட்டிருந்தார். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், இரு தரப்பும் சமாதான முறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனினும், இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து, கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் குறித்த பௌத்த தேரரின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், தேரர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார். உயிரிழந்த தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து, பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்தோடு, தேரரின் உடலை அங்கு தகனம் செய்யவேண்டுமென தேரரருக்கு ஆதரவான சிலர் கூறியமையால் நேற்று அங்கு சில மணித்தியாலங்கள் பதற்றமான சூழல் நிலவியிருந்தது.
இதனையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம்செய்ய இடைக்கால தடைவிதித்து, உத்தரவிட்டார். அத்தோடு, இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார். நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை அவரின் பூதவுடலை குறித்த பகுதியில் புதைக்கவோ அல்லது எரிக்கவோகூடாது என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில், தேரரின் பூதவுடல் பழைய செம்மலை நீராவியடியில் வைக்கப்பட்டிருந்தது. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். பௌத்த மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பௌத்த தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தேரரின் இறுதிச்சடங்கு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றினால் அறிவிக்கப்படவிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினரும், தற்போது விகாரையில் விகாராதிபதியாக உள்ள தேரரும் இன்று காலை மன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதற்கமைய தேரர்கள் மற்றும் தமிழ், சிங்கள சட்டத்தரணிகள் பலரும் முல்லைத்தீவு நீதிமன்றில் கூடினர்.

இதன்போது, பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள விகாரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தேரருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கும் சென்று வழக்கு விசாரணைகளைப் பார்வையிட்டார்.

பல மணி நேர விவாதத்துக்கு பின்னர், குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியது. இத்தீர்ப்பில், தேரரின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், தேரரின் உடலை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல், கொலம்பே மேதாலங்கார தேரரின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளமருகே தகனம் செய்யும் நடவடிக்கைகளை தேரர்கள் குழுவினர் முன்னெடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இதன்போது, சம்பவ இடத்திற்குச் சென்ற சட்டத்தரணி கே. சுகாஸ், தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தேரரின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குற்றம் என தேரர்களுக்குத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தேரர் ஒருவர், இந்நாட்டில் தேரர்களுக்குத்தான் முதலிடம் எனத் தெரியாதா என, சட்டத்தரணியிடம் கூறினார்.
தொடர்ந்து பதிலளித்த சட்டத்தரணி சுகாஸ், இது ஆலயப் பகுதி, இங்கு அவ்வாறு தகனம் செய்ய முடியாது எனக் கூறிய போதும், இது ஆலயப் பகுதி அல்ல, அரச காணி எனவும் தேரர் பதிலளித்தார்.

தொடர்ந்து, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடல், நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்தின் அருகே, நீதிமன்ற உத்தரவையும் மீறி, பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர், சிங்கள பொதுமக்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. இதன்போது, நீராவியடி ஆலய நிர்வாகத்தினர், பிரதேச மக்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பிற பிரதேசங்களிலிருந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொதுமக்கள் எனப்பலரும் பொலிஸார்மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த வேளை பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை நிலவியதை அவதானிக்க முடிந்தது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ