கேட்க ஒரு சங்கீதம்!

0 111

….. எப்படிச் சொல்லலாம்?

மகாராஜபுரம் சந்தானம், நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரியைக் கேட்டால், நாமும்கூட பாடலாம் என்றவிதமான ஓர் உணர்வு ஏற்படும். ஆழ்ந்த வித்வப் புலமையின் லாவக வெளிப்பாடு அது.

பூஷணி கல்யாணராமன் கச்சேரி கேட்டால், எல்லோருக்குமே சங்கீதம் கேட்கத் தோற்றும் – இப்படிச் சொல்லலாம்.

உன்னதமான ஒரு சங்கீத பாணியின் அசல் ஜொலிப்பு அமைதியாய் ஒளிரும்; கொள்ளையாய் ஆட்கொள்ளும்.

‘முற்றுமுழுதான இசை அர்ப்பணம்’ – இப்படித்தான் அவரை விமர்சகர்கள் முத்தாய்ப்பிடுவார்கள்.

இது, சங்கீத சாம்ராஜ்யத்தில், ஆர்ப்பாட்டமேதுமில்லாத, அமைதியான ஓர் இடத்தில் பூஷணி கல்யாணராமனைக் கொலுவைத்திருக்கிறது.

அரியக்குடி இராமானுஜ ஐயங்காரைக் கர்நாடக இசையின் பொற்காலப் பிதாமகராக சொன்னால், ஜி. என். பாலசுப்பிரமணியம் (ஜி. என். பி.) அப் பொற்காலத்துப் புதுமைவாதி. தாளக் கட்டுப்பாட்டிலும் கமக பிரயோகங்களிலும் அவர் கர்நாடக இசையை மேலும் பரவலான ரசனைக்குரியதாக்கினார்.

தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன் ஜி. என். பி. யின் சிஷ்யர். ஜி. என். பி. பாணியில் தனக்கான ஒரு தனித்துவத்துடன், ‘கலைஞர்களின் கலைஞர்’ என்று சிறந்த, இப் பொற்காலத்தின் ஒரு மாமேதை. அவருடைய அந்த சங்கீத பாணியின் வாரிசு பூஷணி கல்யாணராமன்.

இலங்கையில் வேலணையைச் சேர்ந்த பூஷணி, கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். தந்தையார் குலசேகரம் கொழும்பில் பண்ணிசையில் சிறந்து திகழ்ந்தவர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ‘சங்கீத பூஷணம்’. தந்தையாரிடமிருந்து சின்ன வயதில், அதிகாலை வேளைகளில் பெற்ற கண்டிப்பான பயிற்சி பூஷணியின் இசையின் மூலாதார மூச்சு.

சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் சங்கீத வித்வான் கற்கையை மேற்கொண்ட வேளையில், தஞ்சாவூர் கல்யாணராமனின் சிஷ்யையுமானார். அது, கல்யாணராமன் அவரது 63ஆவது வயதில் காலமாகிவிட்ட பின்னரும், அவரின் இசையும் அவரின் பெயரும் பூஷணியில் தொடர சங்கல்பமானது. குருவாக பெற்றவரைக் கணவராகவுமடைந்து பெற்ற பாக்கியம் இது.

யாழ்ப்பாணத்து அழகு தமிழ், பூஷணியின் இசைக்கு ஒரு தனி மெருகு. சில ஆண்டுகளுக்கு முன்னர் லூவிஷ்யம் சிவன் கோவில் மண்டபத்து ஒரே மேடையில், அடுத்தடுத்து நிகழ்ந்த நெய்வேலி சந்தானகோபாலனதும் பூஷணியினதும் கசேரிகளைப் பார்த்தவர்களுக்கு இது தெள்ளென புரிந்திருக்கும். சந்தான கோபாலனின் எழில் வனைவு; அதில் பூஷணியின் மெல்லிதான நகாசுவேலை என்பதுபோல் தெரிந்த கச்சேரிகள். அந்த ‘நகாசு வேலை’, அந்தத் தமிழ் இனிமை.

முசிரி சுப்பிரமணிய ஐயர், ரி. எம். தியாகராஜன், ராஜம் ஐயர் என்று, வித்வான்கள் சிலர் சங்கீதத்தைக் கற்பித்தலிலும் தனித்து விளங்கினார்கள். பூஷணி கல்யாணராமன் அந்தப் பேற்றையும் பெற்றவர். சென்னை, கர்நாடக இசைக் கல்லூரி, கலாஷேத்ரா ஆகிய இரு நிறுவனங்களினதும் இறுதி ஆண்டு இசை மாணவர்களுக்கான செம்மைப்படுத்துகையாளராக பணியாற்றுகிறார். இது தவிர, ஆர்வமிக்க பலருக்கு தமிழுலகு முழுவதிலும் அவர் ஒரு ‘ஸ்கைப்’ குரு.

அகில இந்திய வானொலியின் தேசிய நிகழ்ச்சிகளிலும்கூட பாடுகிறார்.

லண்டன் பாரதிய வித்ய பவனில், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் அந்தக் கச்சேரி நினைவில் நிலைக்கையில், ஒக்ரோபர் 12, 13ஆம் தேதிகளில் லூவிஷ்யம் சிவன் கோவில் மண்டபத்திலும், உயர்வாயிற்குன்று முருகன் ஆலய மண்டபத்திலும் லண்டனில் பூஷணி பாடுகிறார்.

லண்டன் பழைய மாணவர் சங்கங்களையும் மற்றும் அமைப்புக்களையும் இப்போதெல்லாம் பெரும்பாலும் ‘சுப்பர் சிங்கர்’கள் ஆக்கிரமிக்கையில், மகாஜன கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் விஷப் பரீட்சை ஒன்றில் துணிகிறதா?

அது எப்படியோ ஆனால், மகாஜன கல்லூரியின் டாக்டர் நவரத்தினம், எந்த விஷத்துக்குமான சிகிச்சை ஆற்றல் பெற்றவர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ