`கலைமகள்’ மீட்டும் நினைவுகள்

0 42

ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பதிப்பாளர் திருவேங்கடராஜன் ஆகியோருடன் சென்னையில் அவர்களின் ‘கலைமகள்’ அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.

சங்க இலக்கியநயக் கட்டுரைகளுடனான ‘செந்தமிழ்’, ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘கலாநிலையம்’ போன்ற சஞ்சிகைகளும், சிறுகதைகள் முதலான நவீன புதுத் தமிழ்ப் படைப்புக்களுடன் ஆனந்தவிகடன், மணிக்கொடி, கிராம ஊழியன் போன்ற சஞ்சிகைகளும் போட்டியிட்டுக்கொண்டிருந்த காலத்தில், இவையிரண்டுக்குமிடையேயான ஒரு புது மரபுடன், பழமைப் பண்டிதர்களுக்கும் புதுமைப் படைப்பாளிகளுக்கும் அக்காலத்தில் பாலம் அமைத்து தோற்றியது ‘கலைமகள்’.

சிறுகதைகளைப்போலவே, தமிழில் கவர்ச்சிகரமான விதத்தில் அதில் வெளியான பெ. நா. அப்புஸ்வாமியின் விஞ்ஞானக் கட்டுரைகள், யாழ்ப்பாணத்தில் கலைமகள் பெற்ற மதிப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்று சோ. சிவபாதசுந்தரம் சொல்வார். சுன்னாகத்திலிருந்து வெளியான ‘ஈழகேசரி’ இந்தியாவில் பெற்ற மதிப்பும், ஈழகேசரியில் சிவபாதசுந்தரம் பேணிய இக் ‘கலைமகள் பாணியே’ என்று சொல்லலாம்.

மயிலாப்பூரில், சிறிய அளவிலான ஒரு புதிய அலுவலகம். ஆனாலும், பழமைச் சிறப்புகளின் அழகு நிறையும் ஒரு கட்டடத்தின் மாடியில் அமைந்திருக்கிறது.

கண்டேன், ‘பரதனை’ – இப்படித்தான் சொல்லத் தோற்றியது. ஆசிரியர் கீழாம்பூரின் அறையில் பெரிய அளவிலான உ. வே. சாமிநாதையர், கி. வா. ஜகந்நாதன் ஆகியோரின் படங்கள்.

மேசையின் பின்னால் ஆசிரியருக்கான கதிரை. அழகான, பழைய இன்னொரு கதிரையும் அங்கே இருக்கிறது. அதில் எவரும் அமர்வதாக தெரியவில்லை.

‘கலைமகள்’ என்றால் கி. வா. ஜ.; ‘கி. வா. ஜ.’ என்றால் கலைமகள் என்ற, கி. வா. ஜகந்நாதன் அமர்ந்த கதிரை அது.

உ. வே. சாமிநாதையரும் கி. வா. ஜகந்நாதனும் கலைமகள் ஆசிரியர்கள். கலைமகளின் அப் புது மரபு, கி. வா. ஜகந்நாதன் ஏற்படுத்திய மரபு. மணிக்கொடி எழுத்தாளர்கள் கு. ப. ரா., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் ஆகியோரின் மிகச் சிறந்த சிறுகதைகள் அப்போது கலைமகளிலேயே வெளியாகியபோது, ஈழத்து சிறுகதை முன்னோடிகளான இலங்கையர்கோன் (சிவஞானசுந்தரம்), சி. வைத்தியலிங்கம், க. தி. சம்பந்தன் ஆகியோரையும் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு முதன்முதலில் கலைமகளில் அறிமுகப்படுத்தியவர் கி. வா. ஜகந்நாதன்.

இந்த மாண்புடன், அக் கதிரையில் கி. வா. ஜகந்நாதனை அங்கு ‘அமர்த்தி’, தன் ஆசிரியப் பணியை அருகிருந்து தொடர்கிறார் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்.

பேச்சினிடையே அவர் ஒரு சமிக்ஞை காண்பித்தார். பதிப்பாளரான திருவேங்கடராஜனும் மற்றிருவரும் வந்தார்கள். உத்தரியம் அணிவித்து, என்னைக் கௌரவிக்கப்போவதாக சொன்னார்கள்.

சங்கடப்பட்டுப்போனேன். இது எங்களுடைய வழக்கம் என்று சொன்னார்கள். கைத்தறியில் நெய்த, பருத்தி நூலாலான மடி சால்வை.

மானசீகமாக ‘சோ.சி.’ யைத்தான் அவ் வேளையில் நினைத்திருக்கவேண்டும். உ. வே. சாமிநாதையர், கி. வா. ஜகந்நாதன் ஆகியோருடன் அந்நியோன்ய நட்புடன் பழகியவர் சோ. சிவபாதசுந்தரம். தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பின் கையெழுத்துப் பிரதியை என்னிடம் பார்க்கத் தந்து, இவர்களுடனான தன் அநுபவங்களைப் பல தடவைகளில் என்னுடன் சுவைபடவும் சொன்னவர்.

இவர் தான் என் ‘கண்’ என்று, கி. வா. ஜகந்நாதனை சாமிநாதையர் சொல்வாராம். கண்பார்வை குன்றிவிட, கி. வா. ஜ. தான் ஏடுகளைப் பார்த்துப் படித்துச் சொல்வாராம். கண் மாத்திரமல்ல, ‘காதும்’ அவர்தான் என்றார் சோ. சி.

தாசி ஒருவரிடம் ஏடு தேடிச் சென்றதுபற்றிய ஒரு கதை சொன்னார்.

“உலா, லாலி, ஊஞ்சல் போன்ற பிரபந்த ஏடுகளைத் தேடுவது மிகச் சிரமம்; அநேகமாக இவை தாசிகள் சிலரிடம்தான் கிடைக்கலாம் என்று, திருக்கழுக்குன்றத்தில் ஒரு தாசியின் வீட்டுக்கு, சங்கோசமெல்லாவற்றையும் விட்டுச் சென்று, சிலவற்றைப் பெற்றுக்கொண்டேன்’’ என்று சொன்ன சாமிநாதையர் பின்னர், “அந்தத் தாசி வயதானவள்; என்னிலும் பார்க்க அதிக வயது’’ என்றாராம்.

உடனே, பக்கத்திலிருந்த கி. வா. ஜ., “ஏன், உங்களைவிட வயதில் குறைந்தவளாக இருந்தால்தான் என்ன?’’ என்று சொல்லவும், ஐயர் குலுங்க சிரித்தாராம். அப்போது அவருக்கு வயது 87.

ஆறுமுக நாவலர், தான் பதிப்பித்த ‘திருக்கோவையார்’ நூலுக்கு, உ. வே. சாமிநாதையரின் ஆசிரியரான மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் சாற்றுகவியைப் பெறுவதற்காக பாண்டித்துரைத் தேவரின் சிபார்சை நாடியதாக, சாமிநாதையர் எழுதிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரத்தில் குறிப்பிட்டிருந்த சமாச்சாரம் யாழ்ப்பாணத்தில் எழுப்பிய எதிர்ப்பு, ஆத்திரம் பற்றி சாமிநாதையரிடம் கேட்டதையும் சோ. சி. சொல்வார்.

திருவாவடுதுறை ஆதீன முதல்வரே ‘நாவலர்’ பட்டத்தை ஆறுமுகநாவலருக்கு வழங்கியபோது, ஆதீனத்து வீத்துவானான மீனாட்சிசுந்தரம்பிள்ளையை அணுகுவதற்கு நாவலருக்கு சிபார்சு தேவையா? என எழுந்த எதிர்ப்பு அது.

மீனாட்சிசுந்தரம்பிள்ளையும் ஆறுமுகநாவலரும் பிற்காலத்தில் இணைபிரியா நண்பர்கள் என்றும் ஆனால், அந்த நட்பு ஏற்படுவதற்கு முன்னதான நிலையில், போதிய ஆதாரங்களுடனேயே தான் அதனை எழுதியதாகவும், எனது ஆசான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் எவ்வளவு பற்றுதல் எனக்கு உண்டோ, அதே அளவு பற்றுதலும் மதிப்பும் எனக்கு நாவலர்மீதும் உண்டு என்றும் சொன்ன சாமிநாதையர், ‘நாவலர் மட்டும் இருந்திருந்தால், எனது கஷ்டங்களை அவர் அறிவார்’ என்றும் சொன்னாராம்.

இதில், ‘எனது கஷ்டங்கள்’ என்று அவர் சொன்னது, இந்த ‘சிபார்சு’ விவகாரமன்றி, ஏடுகளைத் தேடிப் பிரசுரிப்பதில் தனது கஷ்டங்களாக இருக்கலாமென்று ஒரு விளக்கமும் சோ. சி. சொன்னார்.

தனது ஆசிரியரின் படத்துக்கு பக்கத்திலே நாவலரின் படத்தையும் வைத்து, இப்பொழுதும் நித்திய தரிசனம் செய்கிறேன் என்றும் சொன்னாராம்.

சாமிநாதையர் எழுதிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரமும், ‘என் சரித்திரம்’ என்ற சாமிநாதையரது வாழ்கை வரலாறும் கி. வா. ஜகந்நாதனின் ‘கைவேலை’ என்று சிலர்கொள்ளும் சந்தேகத்தையும் சோ. சி. சொல்வார்.

‘ஒருவேளை அப்படி இருக்கலாம். ஐயரின் ஞாபகத் தகவல்கள், கி. வா. ஜ. வின் எழுத்தாகவிருந்தால், அதில் என்ன தவறு? இலக்கிய உலகில் இது அநுமதிக்கப்பட்டதுதான்’ என்பது சோ. சி. யின் திட்டவட்டமான கருத்து.

ஆக, இத்தகைய ஒரு மாட்சிமையுடனான அந்த ஆசிரிய பீடத்துக்கு உரித்தானவர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன். பண்பார்ந்த அவருடன், மதிப்பார்ந்து தொடர்கின்ற ஒரு நட்பு.

உ. வே. சா. இல்லத்தில் சந்தித்தபோது, மறுநாள் மத்தியானம் என்னுடன் சாப்பிட வாருங்கள் என்று, மவுண்ட் ரோடிலிருந்த துர்க்கா பவனுக்கு சோ. சி. யை அழைத்திருந்தாராம் கி. வா. ஜ.

‘வூட்லண்ட்ஸி’ல் மதிய சாப்பாட்டுக்கு பின்னர்தான், நாமும் ‘கலைமகள்’ அலுவலகம் சென்றோம். ஆனால், சோ. சி. அந்த மதிய போசனம் பற்றி சொன்னது, ஒரு சமாச்சாரத்தைச் சொல்வதற்காக.

சாப்பாட்டு ‘ரோக்கிண்’ இரண்டைப் பெற்றுக்கொண்டு உள்ளேசென்றதும், ‘நான் இங்கே செல்கிறேன்; நீங்கள் அங்கே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, வாசலுக்கு வாருங்கள்’ என்று, மறைப்புடனான ஓரிடத்தினுள் கி. வா. ஜ. சென்றாராம்.

பிராமண ஆசாரங்களை நன்கு தெரிந்தவர்தான் சோ. சிவபாதசுந்தரம். அவர்கள் பலரோடு அந்நியோன்யமாக பழகுபவர். அவர்கள் அவரைச் ‘சுந்தரம் ஐயர்’ என்றுகூட வாஞ்சையோடு அழைப்பதுமுண்டு. ஆனால், கி. வா.ஜ. வின் இந்த உபசாரம், தனக்கு உடனே ஒரு மாதிரியாகவே இருந்ததாக சொன்னார்.

நாலைந்து ஆண்டுகள் கழித்து, கி. வா. ஜ. இலக்கிய சொற்பொழிவுகளுக்காக இலங்கை சென்றபோது, இலங்கை வானொலியில் அவருக்கு சில நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்து கொடுத்து, தனது வீட்டில் நண்பர்கள் சிலருடன் விருந்தும் கொடுத்தாராம். அப்போதெல்லாம் அவர் எதுவித வித்தியாசமும் காண்பிக்கவில்லை என்றார்.

கி. வா. ஜகந்நாதனும் சோ. சிவபாதசுந்தரமும் மிக நெருக்கமான நண்பர்கள். பிபிசி ‘தமிழோசை’ பணிக்காக சோ. சி. லண்டன் வந்துவிட, அவரின் ‘மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில்’ நூலை கி. வா. ஜ. தான் அல்லையன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.

ஆக, கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனும் இலங்கை உறவு மிகப் பேணுபவர். இலக்கிய, ஆன்மீக சொற்பொழிவுகளிலும் தேர்ந்தவர்.

பத்திரிகையுலக பிதாமகர் ‘தினமணி’ ஏ. என். சிவராமனின் பேரரான இவர், ஏ. என். சிவராமன் பெயரில் பத்திரிகையாளர்களுக்கான ஒரு விருதை ஆரம்பித்து, முதலாவது பரிசைக் கடந்த ஆண்டு ‘இந்து’ நடரானுக்கு வழங்கியிருக்கிறார். தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களில், எதையும் துணிந்து சொல்பவரும், சொல்லவல்லவருமான ஒரு பத்திரிகையாளர் ஆர். நடராஜன்.

‘கலைமகள்’ இப்போது எண்பத்தேழு ஆண்டுகளாக வெளிவருகிறது.

  • மாலி

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ