ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு

0 33

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது.

யாழ்ப்பாண பல்கலைக்கழத்துக்கு அருகாமையில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று பிற்பகல் 2.00 மணி முதல் கூட்டம் நடைபெற்றது.

சந்திப்பின் ஆரம்பம் முதல் பலமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சமஷ்டியா, ஒற்றையாட்சியா? என்பது குறித்து தங்களது நிலைப்பாட்டில் மாற்றமேதுமில்லை என்ற நிலைப்பாட்டுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருத்தை முன்வைத்தது. இடைக்கால அரசியலமைப்பை எதிர்ப்பதான பதம் உடன்படிக்கையில் இடம்பெறவேண்டும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியது.

இதன்போது, ஏனைய ஐந்து கட்சிகளும் அதனை எதிர்த்தன. ஒரு கட்டத்தில் மாணவர்களைப் பாரத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “நீங்கள் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் இயங்குகிறீர்கள்” என்று கடுந்தொனியில் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், “எங்களைப் பார்த்தால் சிறு பிள்ளைகளாகத் தெரிகிறதா?’’ என்று கடிந்துகொண்டனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்து;ககும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான வாக்குவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளில் சிலர் தாம் ஒப்பமிட்டுவிட்டு, போகப்போவதாக தெரிவித்தனர்.

அதன் பின்னர் சலசலப்பு சற்று அடங்கியதுடன், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொருவராக ஆவணத்தில் ஒப்பமிட்டத் தொடங்கினர். இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டனர்.

இந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்ந்தன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ. கஜேந்திரகுமார், செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி. வி. விக்னேஸ்வரன், க. அருந்தவபாலன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ