யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்

0 6

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பாலாலி பிராந்திய விமான நிலையத்தை கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பொருட்டு, முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள், ஓடுதள அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்கள் என்பன துரிதகதியில் இடம்பெற்றுவந்தன. இந்நிலையில், பலாலி பிராந்திய விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக அமைச்சரவையின் ஒப்புதலுடன் பெயர்மாற்றப்பட்டு, திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இன்றைய தினம் வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து, சர்வதேச விமான நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்து, திறந்து வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நினைவுப் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்படுவதற்கு முன்னர் இருந்த பலாலி பிராந்திய விமான நிலையம், இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானிய படைகளின் விமானங்கள் தங்கிச் செல்லும் இடமாக இருந்தது. அத்தோடு 1947ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, இந்தியாவுக்கான முதலாவது விமான சேவை பலாலி விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர்ச்சூழலால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. யுத்தம் முடிவுற்ற பின்னர் உள்ளுர் சேவைகள் பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்றன, அதற்குரிய அபிவிருத்தி பணிகளும் அன்றைய காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, கடந்த ஜூலை மாதம் 2.26 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இன்றைய திறப்பு விழா வைபவத்தின்போது, தமிழகத்திலிருந்து ஏயார் இந்தியாவின் ‘அலைன்ஸ் எயர்’ விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் இந்திய உயர் அதிகாரிகளும், சிறப்பு விருந்தினர்களும், பத்திரிகையாளர் சிலரும் வந்திருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், குடிவரவு குடி அகல்வு திணைக்கள அதிகாரிகளால் வீசா வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வை முன்னிட்டு, அதனையண்டிய பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ. வி. . கே. சிவஞானம், இந்திய மற்றும் இலங்கை விமானத்துறைசார் அதிகாரிகள், விமானப் படையினர், யாழ். மாநகர முதல்வர் இமானுவல் ஆனல்ட், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உள்பட அரச அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், செய்தியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் முதலாம் தேதி ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ