நெஞ்சம் மறப்பதில்லை

0 776

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள்.
இளையராஜா என்னும் இசைமேதை தமிழ்த்திரை இசையுலகில் கோலோச்சிக்கொண்டிருந்த காலம். எம். எஸ். விஸ்வநாதன் வாய்ப்புக்கள் குறைந்து, ஓய்வாக இருந்த காலம். அவரைச் சந்தித்து, அவருடைய படைப்புகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
குறிப்பாக, `கர்ணன்’ படத்தின் பாடல்களைப்பற்றியும் கண்ணதாசனின் சொல் அடிக்கு ஏற்பவும், கதையின் சூழலுக்கு ஏற்பவும் அவர் அமைத்த இசையை பாடல்கள் என்றுமே இறவாவரம் பெற்றவை என்று குறிப்பிட்டேன்.
மௌனமாக என்னைச் சில நொடிகள் பார்த்தார்.

“உண்மையாகவா சொல்கிறீர்கள்?’’ என்றார்.
கண்களில் கண்ணீர்.

அருநண்பர் கண்ணதாசனை நினைத்துக் கண்ணீர்விட்டாரா அல்லது இளையராஜாவின் வரவினால் தான் ஒதுக்கப்பட்டுவிட்டோமோ என்ற ஆற்றாமையினால் கண்ணிர்விட்டாரா என்று தெரியவில்லை.

அதன்பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பேட்டி ஒன்றுக்காக அவரைச் சந்தித்தேன். எந்தத் தயக்கமும் வருத்தமுமின்றி, விரிவாகப் பேசினார்.
எம். எஸ். விஸ்வநாதன் ஒப்பற்ற படைப்பாளி என்பதை எவருமே மறுக்கமுடியாது. கேரளாவில் எளிய குடும்பத்தில் பிறந்து, கர்நாடக இசையை முறையாகப் பயின்று, மேடைக் கச்சேரியும் செய்தவர். மலையாளி என்றாலும், தமிழ்த் திரையில்தான் அவர் பெரும் புகழ்பெற்றார்.
வறுமை காரணமாக கிணற்றில் வீழ்ந்து உயிரைவிடத் துணிந்த அவரைக் குடும்பத்தினர் தக்க சமயத்தில் காப்பாற்றியது நாம் பெற்ற பெரும்பேறு என்றுதான் கூறவேண்டும்.

ஆரம்பகாலத்திலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவர். அப்பொழுது ஹிந்தி திரை இசையில் முடிசூடா மன்னராக விளங்கிய நௌஷத் இசை அமைத்த பாடல்களால் ஈர்க்கப்பட்டு, ஊரில் இருந்த தேநீர்க்கடைக்கு அதற்காகவே அடிக்கடி சென்று, கிராமபோனில் கேட்பது வழக்கம் என்று கூறினார்.

எஸ். எம். சுப்பையா நாயுடு என்ற இசை அமைப்பாளரிடம் ஆபீஸ் பையனாக வேலைசெய்துவந்தார். அவருடைய ஹார்மோனியத்தைத் துடைப்பது, அவருக்குப் பணிவிடை செய்வது ஆகியவை.

எஸ். எம். சுப்பையா நாயுடு அக் காலகட்டத்தில் புகழ்பெற்று விளங்கியவர். (நாடோடி மன்னன், மலைக்கள்ளன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.) அபிமன்யு என்ற திரைப்படத்துக்காக அப்போது அவர் இசையமைத்துக்கொண்டிருந்தார். அவர் இல்லாத நேரத்தில் விஸ்வநாதன் ஒரு மெட்டை அமைத்தார். எந்த மெட்டுமே சரியாக அமையாமல் தவித்துக்கொண்டிருந்த சுப்பையா நாயுடுவுக்கு அந்த மெட்டு பிடித்துப்போனது. அதே மெட்டை அபிமன்யு படத்தில் பயன்படுத்தி, “புதுவசந்தமாமே வாழ்விலே இனிப் புதிதாய் மனமே பெறுவோமே…’’ என்ற காதல் பாட்டை ஒல்ப்பதிவு செய்தார். அந்தப் பாடல் பெரும் வெற்றிபெற்றது. ஆனால், அபிமன்யு படத்தில் விஸ்வநாதனின் பெயர் இடம்பெறவில்லை.

பின்னர், ஜுபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு இடம்மாறியபோது சுப்பையா நாயுடுவின் பரிந்துரையால் விஸ்வநாதனுக்கு அதில் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த அறிமுகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சுப்பையா நாயுடு இறந்தபொழுது அவருடைய இறுதிச் சடங்ககளை விஸ்வநாதன் செய்தார்.

விஸ்வநாதன் முதலில் இசையமைத்த படம் ஜெனோவா. எம். ஜி. இராமச்சந்திரனும் பி. எஸ். சரோஜாவும் நடித்தது. `ஹார்மோனியம் துடைத்துக்கொண்டிருந்த பையனுக்கு இசையைப்பற்றி என்ன தெரியும்’ என்று நினைத்த எம். ஜி. ஆர். முதலில் விஸ்வநாதன் அந்தப் படத்துக்கு இசையமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். என்றாலும், அதைப் பொருள்படுத்தாமல், பட முதலாளி விஸ்வநாதனைக்கொண்டே இசையமைப்புச் செய்தார்.

விஸ்வநாதன் வருவதற்கு முன்னர் ஜி. ராமநாதன் என்ற இசையமைப்பாளர் புகழ்பெற்று விளங்கினார். பாபநாசம் சிவன் பாடல் எழுத, ஜி. ராமநாதன் இசை அமைக்க, எம். கே. தியாகராஜபாகவதர் பாட எத்தனையோ படங்கள் பாட்டுக்களுக்காகவே ஓடின.
பெரும்பாலும், கர்நாடக இசையின் அடிப்படையிலேயே பாடல்கள் அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில், சி. ஆர். சுப்பராமன் என்ற இசையமைப்பாளர் மணமகள், தேவதாஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்துவந்தார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் விஸ்வநாதன். தேவதாஸ் படத்துக்கு இசையமைத்துக்கொடிருந்தபோது, பாதியில் சி. ஆர். சுப்பராமன் காலமானார். ராமமூர்த்தியுடன் இணைந்து விஸ்வநாதன் அந்தப் படத்தின் இசையமைப்பை முடித்துக்கொடுத்தார்.

பின்னர், விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார்கள். பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த பதிபக்தி என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி அமைத்த இசை இன்று கேட்டாலும் உள்ளத்தைக் கவர்வதாகவே இருக்கிறது.

“சின்னஞ்சிறு கண்மலர்…’’, “கொக்கரக்கொக்கரக்கோ சேவலே…’’, “வீடுநோக்கி ஓடிவந்த நம்மையே…’’ ஆகிய பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

பீம்சிங்கின் `ப’ வரிசைப் படங்கள் அனைத்துக்குமே விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடிதான் இசை அமைத்தது. `பாவமன்னிப்பு’, `பாசமலர்’, `பார்த்தால் பசிதீரும்’, `பார் மகளே பார்’, `பாலும் பழமும்’ ஆகிய இப் படங்கள் வெற்றிபெற, அவற்றில் இடம்பெற்ற பாடல்களும் காரணம் என்பதை மறுக்கமுடியாது.

நாடக மேடையின் தொடர்ச்சியாகவே தமிழ் சினிமாவும் பார்க்கப்பட்ட காலம் அது. எனவே, `மைக்’ இல்லாத நாடகங்களைப்போல, திரைப்படங்களிலும் உரத்துப்பேசி நடித்தால்தான் எடுபடும்; ஓங்கிக் குரல் எடுத்துப் பாடினால்தான் பாட்டு வெற்றிபெறும். கர்நாடக இசையில்தான் பாடல்கள் அமையவேண்டும் என்ற கருத்து ஆழமாக வேரூன்றியிருந்த காலம் அது. அந்த மரபை உடைத்து,
தமிழ் சினிமாவில் உண்மையிலேயே மெல்லிசையைப் புகுத்தியவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்திதான்.

`பொலீஸ்காரன் மகள்’ என்ற படத்தில் காதலர்கள் பாடும் பாட்டு, அது, “மென்மையாக – தம்பூரா மீட்டுவதுபோல இருக்கவேண்டும்’ என்று இயக்குநர் ஸ்ரீதர் கூறினார். `தம்பூரா மீட்டுதல்போல’ என்ற சொற்கள் என் மனதில் பதிந்துவிட்டன. இரண்டு நாள்கள் தம்பூராவின் ஒலியைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அப்படி உருவானதுதான் “பொன் என்பேன் – ஒரு பூவென்பேன்…’’ என்ற பாட்டு’’ என்றார் எம். எஸ். விஸ்வநாதன்.

மிகவும் கீழ் ஸ்தாயியில் அமைத்தாலும், மெட்டு நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது விஸ்வநாதனின் கருத்து. அதற்கு இந்தப் பாட்டு உதாரணமாகும். திரை இசை உண்மையிலேயே மெல்லிசை என்று காட்டிய விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு `மெல்லிசை மன்னர்கள்’ என்று பட்டமளித்தவர் சிவாஜி கணேசன்.

விஸ்வநாதன் காலத்தில் இன்று இருப்பவைபோன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இன்று, ஒவ்வோர் இசைக் கருவியையும் தனித்தனியாக ஒலிப்பதிவு செய்து, பின்னர் ஒன்றாக இணைக்கலாம். பாடுபவர்கூட அவருக்கு நேரம் கிடைக்கும்போது தனியாகவந்து பாடி ஒலிப்பதிவுசெய்து இணைக்கலாம். அப்பொழுதெல்லாம் அப்படிப்பட்ட வசதிகள் கிடையாது. பாடகரின் பாட்டு, இசைக் கருவிகள் எல்லாவற்றையும் ஒரு நேரத்தில் ஒருங்கிணைத்து ஒலிப்பதிவு செய்யவேண்டும். விஸ்வநாதன் அந்தச் சூழலிலும் ஏராளமான இசைக் கருவிகளைக்கொண்டு ஒலிப்பதிவு செய்தார். `சிவந்த மண்’ என்ற படத்தில் எல். ஆர். ஈஸ்வரி பாடிய “பட்டத்து ராணி…’’ பாடலில் 120 இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
தமிழ்த் திரை இசையில் `எக்கோர்டியன்’ என்ற இசைக் கருவியை மிக அழகாக பயன்படுத்தியவர் விஸ்வநாதன்தான். `பாவமன்னிப்பு’ என்ற படத்தில், “அத்தான் என் அத்தான்…’’ என்ற பாட்டில் மிக அற்புதமாக அந்த இசைக் கருவியை பயன்படுத்தினார்.

“போனால் போகட்டும் போடா…’’ என்ற சாகாவரம் பெற்ற – சாவைப்பற்றிக் கூறும் பாட்டில், சுடுகாட்டுச் சூழலை இசை வடிவில் தருவதற்காக `சதன்’ என்ற `மிமிக்ரி’ கலைஞரின் குரலைப் பயன்படுத்தியது அவருடைய கற்பனைத் திறனுக்கு சான்று.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இசையமைத்தாலும், இருவரும் பிரிந்தபின்னர் விஸ்வநாதன் மட்டுமே நிலைத்து நின்றார் என்பதைப் பார்க்கும்போது, இருவரில் விஸ்வநாதனின் பங்களிப்பே சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. எனவேதான், விஸ்வநாதன் என்று மட்டுமே குறிப்பிடத் தோன்றுகிறது.

சாஸ்திரீய சங்கீதத்தின் அடிப்படையில் இசை அமைத்தாலும், அதை மெல்லிசையாக்கி, பாமரனும் ரசிக்கும்படி அள்ளித்தந்தார். உதாரணமாக, கர்ணன் படத்தின் பாடல்களைக் குறிப்பிடலாம்.

கர்ணன் சூரியனுக்கு வழிபாடு நடத்தும்போது பாடும் ராகமாலிகை – “ஆயிரம் கரங்கள் நீட்டி…’’ என்று தொடங்கி, வேதகோஷம்போல ஒலிப்பது – இவற்றை பாமரரும் ரசித்துப் போற்றினர். “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது…’’ என்ற பாட்டை ஆஹிர்பைரவியில் – அது ஓர் ஹிந்துஸ்தானி ராகம் – அமைத்திருந்தார். தேரடியில் அடிபட்டுக் கிடக்கும் சிவாஜியின் நடிப்பும், அந்தச் சூழலும் – பாட்டும் – கடைசியில் பாட்டை கயனந டிரவ செய்த நேர்த்தியும் – அது ஓர் அமர காவியம்.

கர்ணன் தன் மனைவியை மாமனார் வீட்டிலிருந்து திரும்ப அழைத்துச்செல்ல வருகிறாள். `தேரோட்டி மகன்’ என்று அவமானப்படுத்தப்பட்டுத் திரும்புகிறான். அடிபட்ட வேங்கையாக சிவாஜி கர்ஜிக்கும் காட்சி – உரக்கக் குரலெடுத்து கோபத்தைக் காட்டியபின் – மிகமிக மென்மையாக மயிலிறகால் வருடுவதுபோல் அவனை ஒரு தேற்றுகிறது; பார்ப்பவருக்கே நெஞ்சில் அமைதி ஏற்படுகிறது. “கண்ணனுக்குக் குலமேது…’’ என்ற பகாடி ராகத்தில் அமைந்த பாடல், இனிய குழலிசையுடன் தொடங்குகிறது.

“எங்கே நிம்மதி…’’ என்ற பாட்டை ஒலிப்பதிவுசெய்து படப்பிடிப்பைத் துவங்குமுன், அந்தப் பாட்டைக் கேட்ட சிவாஜி கணேசன், படப்பிடிப்பை மூன்று நாள்களுக்கு ஒத்திப்போடச் சொன்னாராம். `விஸ்வநாதன் மிக அழகாகப்போட்ட பாட்டு; இது, எனக்கு ஒரு சவால். அதற்கு ஏற்ப நான் நடிக்கவேண்டாமா?’ என்று அதற்குக் காரணம் சொன்னார், சிவாஜி.

அவருடைய இசையமைப்பை வைத்தே, `இது, சிவாஜி கணேசன் பாட்டு; இது, எம். ஜி. ஆர். பாட்டு’ என்று கூறிவிடமுடியும்.
எம். ஜி. ஆருக்கென போடப்படும் பாட்டுக்களில் ஆண்மை, வீரம், `நான்’ என்ற ஆணவம் தொனிக்கும். “நான் ஆணையிட்டால்…’’, “நினைத்ததை நடத்தியே முடிப்பவன்…’’ போன்ற பாடல்களை உதாரணமாகக் கூறலாம். விதிவிலக்காக, “விழியே கதை எழுது…’’ போன்ற மென்மையான பாடல்களும் உண்டு.
சிவாஜிக்கு என்று அவர் இசையமைத்த பாடல்களில்தான் எத்தனையோ வகைகளை – நவரசங்களையும் காணமுடியும். காதலும், கணவன் – மனைவி நேசமும், அன்பும் வெளிப்படவேண்டுமா? “நான்பேச நினைப்பதெல்லாம்…’’, “ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்…’’ என்ற பாட்டைக் கேட்கும்போது, கள்ளமற்ற இளம் மனைவியின் தூய அன்பும் மகிழ்ச்சியும் எப்படி வெளிப்படுகின்றன…?

“ஆறுமனமே ஆறு…’’, “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா…’’ ஆகிய தத்துவப் பாடல்களுக்கென்று தனியான இசை.
மறுபிறவி பற்றிய கதையில் வரும் “நெஞ்சம் மறப்பதில்லை…’’ உண்மையிலேயே மறக்கமுடியாத மெட்டு. இறந்துபோன முதல் மனைவியையே நினைத்திருக்கும் கணவனிடம் அவளுடைய ஆவியே ஆறுதல் கூறுவதுபோல அமைந்த “மன்னவனே வரலாமா…’’ என்ற பாட்டு – மறுமணம் செய்துகொள்ளுமாறு நோயாளிக் கணவன் கூறும்போது மனமுடைந்து மனைவி பாடும் “சொன்னது நீதானா…’’ என்ற பாட்டும், அந்த உணர்வைக் காட்ட சித்தார் வாத்தியத்தை அதிகம் பயன்படுத்திய பாங்கும் விவரிக்க இயலாதவை. “நீரோடும் வைகையிலே…’’ என்ற தாலாட்டில் சீட்டி (சீழ்க்கை) ஒலியையும்; “பாலிருக்கும் பழமிருக்கும்…’’ என்ற பாட்டில் hரஅஅiபேஐயும் மிகத் திறமையாக பயன்படுத்தியிருக்கிறார்.

நாட்டுப்புற பாணியில் பாட்டு வேண்டுமா? “தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து…’’; தூத்துக்குடி வட்டார வழக்கில் “முத்துக்குளிக்க வாறீகளா…’’; அராபிய இசைபோல, “பட்டத்து ராணி…’’, “நினைத்தேன் வந்தாய்…’’ …இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்தியாவில் திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்ககான `பாட்கே’ விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஏன், ஒரு `பத்மஸ்ரீ’ விருதுகூட அவருக்குக் கிடைக்கவில்லை.

மக்களின் பாராட்டே விருது என்றார் ஒருமுறை. ரசிகர்களின் நெஞ்சில், “மாலைப்பொழுதின் மயக்கத்திலே…’’, “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல…’’
– இப்படி சாகா வரம்பெற்ற பாட்டுக்கள் இருக்கும்போது, வேறு விருது அவருக்கு எதற்கு?

பிங்காட்சன்

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ