யுகம் சமைத்த குரல்

0 227

சென்னைப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவியான பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி, தமிழ் சினிமா பாடல்கள் தொடர்பிலான நிகழ்வொன்றினை சென்னை, கிருஷ்ணகான சபா மண்டபத்தில் ஏற்பாடுசெய்து நிகழ்த்தினார். வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி.
சினிமா பாடல்கள், சாஸ்திரீய சங்கீதத்தின் பரவலான வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று இந்தியாவில் அரசு மட்டத்தில் சினிமா பாடல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சு, அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களின் ஒலிபரப்பை 1952இல் சட்டத்தின்மூலம் தடைசெய்தது. ஆனால், அந்த தமிழ் சினிமா பாடல்களின் சாஸ்திரீய அம்சங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் அமோக மக்கள் ரசனைபெற்ற நிகழ்ச்சிகளாக, உலகம் முழுவதிலும் எல்லோரையுமே ஈர்க்கின்றன.

பிரமிக்கத்தக்க ஆற்றல்களையும், பிரமிக்கத்தக்கவர்களிடமிருந்து, சாஸ்திரீய இசையின் விற்பன்னர்களே அடையாளப்படுத்திப் பிரமிக்கும் நிகழ்ச்சிகள் இவை.

1950 – 60 காலப்பகுதி, தமிழ் சினிமா பாடல்களின் பொற்காலம் என்று பெயர்பெறுகிறது. பேராசிரியை பிரமீளாவின் அந்த நிகழ்ச்சி, 50 – 60களின் அப் பொற்காலத்தையொட்டியதாகவே இருந்தது. அக் காலப்பகுதியில் வெளியான பாடல்களில் தனக்கு பிடித்தமான சில பாடல்களைத் தேர்ந்து, அப் பாடல்கள் ஒவ்வொன்றினதும் பல்வேறு சுவையம்சங்களை, தேர்ந்த குழுவொன்று நயங்காணவைத்த நிகழ்ச்சி அது. டாக்டர் ராஜ்குமார் பாரதி, டாக்டர் வ. வே. சுப்பிரமணியம், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் (`அமுதசுரபி’ ஆசிரியர்), `இசைக்கவி’ ரமணன், `கீழாம்பூர்’ (`கலைமகள்’ ஆசிரியர்) ஆகியோர் அந்த நயப்புக் குழுவினர்.

வானொலிமட்டும்தான் ஒரேயொரு ஒலியூடகமாகவிருந்த ஒரு காலத்தில், வானொலியில் அதன் ஒலிபரப்பு தடைசெய்யப்பட்ட நிலையிலும் இந்திய தமிழ் சினிமாப் பாடல்கள் ஒரு பொற்காலத்தை அக் காலப்பகுதியில் சமைத்தன. அது, எப்படி?
அந்தக் காலத்தை அறிந்திராத ஒரு தலைமுறையினருக்கு இக் கேள்வியே ஒரு வியப்பாகும். அதேவேளை, இன்னொரு தலைமுறை இக் கேள்வியின் பதிலை அசைமீட்டு, மகிழ்ச்சி மகிழ்ச்சிகொள்ளும்.
பேராசிரியை பிரமீளாவின் ஆராய்ச்சிச் சிந்தை அன்று இதனையும் உள்ளடக்கியிருந்தது. அந்த அவையிலும் இந்த ஈருணர்வுகளும் துல்லியமாய்த் தெரிந்தன.

கர்நாடக இசையைப்போலவே, `தமிழ்த் திரை இசை’ என்றும், தமிழ்த் திரை இசையின் பொற்காலம் என்றும் தமிழ் உலகு இப்போது பெருமைகொள்வதற்கு ஏதுவாக இருந்தது இலங்கை வானொலி. வியப்போடும், மகிழ்வூட்டும் அசையோடும் இலங்கை வானொலியின் அந்தப் பெருமையும் அன்று உணரப்படும்வகையில் பிரமீளாவின் அந்த நிகழ்வு இருந்தது.

சிவாஜி கணேசனும் எம். ஜி. இராமச்சந்திரனும் தமிழ்த் திரையுலக மன்னர்களாக திகழ்ந்த அக்காலத்தில் அவர்களுக்கு இணையான புகழுடன் இலங்கை வானொலியின் எஸ். பி. மயில்வாகனனும் ஒரு முடிசூடா மன்னராகவே திகழ்ந்தார். தமிழில் சினிமா, வானொலி ஆகிய இரு தொடர்புசாதனங்களுக்குமான முதல் இணைப்பு மயில்வாகனனே என்று சொல்வார் பேராசிரியர் சிவத்தம்பி.

`டிரான்சிஸ்ரர்’ ரேடியோக்கள் அறிமுகமாகத்தொடங்கிய அக் காலத்தில், `இதில் ரேடியோ சிலோன் கேட்குமா?’ என்று கேட்டு உறுதிப்படுத்தியே இந்தியாவின் பட்டிதொட்டிகளெங்கும் மக்கள் அவற்றை வாங்கினார்கள். லண்டனில் பிபிஸி ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், 1922இல் ஆசிய பிராந்தியத்தின் முதலாவது வானொலியாக தோன்றிய இலங்கை வானொலியில் 1950ஆம் ஆண்டு அதன் வர்த்தக சேவை ஆரம்பமானது. அகில இந்திய வானொலியில் சினிமாப் பாடல்களின் ஒலிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடை, இலங்கை வானொலியின் வர்த்தக சேவைக்கு பெருவாய்ப்பாகியது. `ஒருபடப்பாட்டு’, `இருகுரலிசை’, `ஜோடிமாற்றம், `திருப்பிப்பார்’ என்று, இப்படிப் பல்வேறு கவர்ச்சிகரமான விதங்களில், தன்னுடைய அந்த தனித்த குரலுடன் மயில்வாகனன் புரிந்த ஜாலம், தென்னகமெங்கும் மக்கள் செவிகளில் மாயம் செய்தது. மயில்வாகனனின் யுகமே தமிழ் சினிமா பாடல்களின் பொற்காலமுமாகிறது. ஒரு யுகம் சமைத்த குரல் அது.

பள்ளி மாணவனாக இருந்தவேளையில் `மஹாகவி’ போன்றவர்களுடன் இணைந்தும், பின்னர் கே. எஸ். நடராஜா தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகவிருந்த காலங்களில் அவர் தலைமையிலும் வானொலி கவியரங்குகளில் பங்குபற்றியதும், கலைக்கோலம், நூல்விமர்சனம் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதும், அவ்வப்போது சில நேர்காணல்களில் கலந்துகொண்டதும் தவிர, இலங்கை வானொலியுடன் நேரடி தொடர்பிருக்கவில்லை. ஆனாலும், பத்திரிகைத்துறைக்கு வந்தபின்னர் அங்கு அதிகாரிகளாகவிருந்தவர்களுடனும் பணியாற்றியவர்களுடனும் நெருக்கமான பழக்கமிருந்தது. இவையெல்லாம்தவிர, இலங்கை வானொலியில் தமிழ் ஒலிபரப்பின் சிற்பிகளான சிவபாதசுந்தரம், குஞ்சிதபாதம், மயில்வாகனன், வீ. சுந்தரலிங்கம் ஆகியோருடன் குடும்ப அளவில் வெகு அந்நியோன்யமான உறவும் நட்பும் ஏற்பட்டது. இது, குஞ்சிதபாதம் – மோனி தம்பதியரின் புதல்வியான பேராசிரியை பிரமீளாவின் அன்றைய நிகழ்ச்சியில், அந்த நயப்புக் குழுவினருடன் இலங்கை வானொலி தொடர்பிலான அந்த உணர்வை, கூடவே அந்த அவையில் ஏற்படுத்த வாய்ப்பை அளித்தது.

அன்று, பிரமீளாவின் அறுபதாவது பிறந்த தினம். சிலர்தான் அதைத் தெரிந்திருந்தார்கள். வித்தியாசமான அந்த நிகழ்ச்சி, ஒரு வித்தியாசமான பிறந்தநாள் வைபவம்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ