காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்

0 297
பிரபஞ்சன்
பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு. பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம் அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம் என்கிறார் அவர்.

o

நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும் திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் – பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத் தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத் தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில் கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.

இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும் யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக் கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

o

சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும் சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.

சில காதலர்களை நாம் சந்திக்கலாம். ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்: (குறுந்தொகை)

குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும் நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.

காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல் காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான் தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.

‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின் தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில் போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால் எனக்கு அதைச் சொல்வாயாக’

– குறுந்தொகை

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Nazhikai International Tamil Newsmagazine
ISSN 1357-6933
Tel: 00 44 208 422 5699
Fax: 00 44 208 728 2334
Email: pannews@hotmail.co.uk
Editorial: editor@nazhikai.com / letters@nazhikai.com
Annual Subscription (12 issues):
UK £22.00
Europe £30.00
Canada $30.00
India Rs200.00
All Other Countries £35.00
Payable to Pannews Limited
Canada:
880 Ellesmere Road,
Suite 204, Toronto,
ON. M1P 2W6
Tel: 416 613 2770
Editor: S Mahalingasivam
Published by: Pannews Limited 123 Twyford Road Harrow Middx HA2 0SJ